இறைவனுக்கு இணைவைப்பவர்களின் நம்பிக்கைகள்

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் வணக்க வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனுக்கே செய்து அவனை ஒருமைப்படுத்த வேண்டும். அல்லாஹ் அல்லாத பிறருக்கு அந்த வணக்க வழிபாடுகளைச் செய்யும் போது அது “தவ்ஹீது” என்னும் ஓர் இறைக்கோட்பாட்டிற்கு எதிர்மறையான “ஷிர்க்” என்னும் இணைவைப்பாகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்:

”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான்அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்” (திருக்குர்ஆன், 4:048,116)

இறைவன் தான் மன்னிக்கவே மாட்டேன் என்று கூறிய அந்த மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணைவைத்தல் என்றால் என்று நாம் ஒவ்வொரும் அறிந்து, அதனின்றும் முற்றிலுமாக தவிர்ந்து வாழ வேண்டியது முஸ்லிமான ஆண் பெண் ஒவ்வொருவர் மீதும் இன்றியமையாத கடமையாக இருக்கின்றது.

நாம் முன்னரே கூறியவாறு வணக்கங்களை அல்லாஹ்வுக்கு அல்லாமல் பிறருக்கு செய்யும் போது அது ஷிர்க் என்னும் இணைவைத்தலாகின்றது. ஆகவே வணக்கம் என்றால் என்ன என்று முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும். நாம் இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற முஸ்லிம்களிடம் வணக்கம் என்றால் என்ன? என்று கேட்கும் போது அவர்கள், தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் இவைகளை அல்லாஹ் ஒருவனுக்கே செய்வது என்று பதிலளிப்பார்கள். இவைகளும் வணக்கம் தான்! ஆனால் வணக்கம் என்பது இவைகள் மட்டும் அடங்கியது இல்லை! இபாதத் என்ற சொல்லிற்கு மிக பரந்த பொருள் இருக்கிறது. இறைவன் தன்னுடைய திருமறையிலும் மேலும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் மூலமும் எவைஎவைகளை எல்லாம் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்தும் வணக்கமாகும். இவ்வாறு வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவதற்கு “தவ்ஹீதுல் உலூஹிய்யா” என்று பெயர்.

மேலும் அல்லாஹ்வின் ஷிஃபத்துகளாக, பண்புகளாக திருமறையிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எவை எவைகளை எல்லாம் கூறப்பட்டிருக்கின்றதோ அந்த ஷிஃபத்துக்களை, பண்புகளை அல்லாஹ் அல்லாத வேறு யாருக்கும் நாம் வழங்கக்கூடாது. இவ்வாறு இறைவனின் பண்புகளில் இறைவனை ஒருமைப்படுத்துவதற்கு “தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிபாத்” என்று பெயர்.

எனவே, வணக்கம் என்றால் என்ன என்பதையும், அல்லாஹ்வின் ஷிஃபத்துக்கள், பண்புகள் யாவை என்பதையும் புரிந்துக் கொள்வதில் வந்த தடுமாற்றமே இன்று நமது முஸ்லிம்களிடத்தில் காணப்படுகின்ற ‘ஷிர்க்’ என்னும் இறைவனால் மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகிய இணைவைத்தலாகும்!

நாம் இவ்வாறு கூறிய உடனேயே இறை நேசர்களிடமும் நபிமார்களிடமும் பிரார்த்திப்பவர்கள், நீங்கள் கூறுவது முற்றிலும் தவறாயிற்றே! நாங்கள் எங்கள் இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கின்றோமே! இப்பிரபஞ்சத்தையும், அதில் உள்ள அனைத்தையும் படைத்துப் பரிபக்குவப்படுத்தி பரிபாலனம் செய்பவன் இறைவன் என்றும் மேலும் எங்களுக்கும் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அவனே உணவளிப்பவன் என்றும் நம்பிக்கை கொண்டிருக்கிறோமே! பிறகு எவ்வாறு நீங்கள் எங்களை இணை கற்பிப்பவர்கள் என்று கூறுகின்றீர்கள் என கேட்கலாம்.

ஆம் அவர்கள் நம்பிக்கைக் கொண்டிருப்பது உண்மைதான்! இவ்வாறு நம்பிக்கொண்டு இறைவைன ஒருமைப்படுத்துவது என்பது தவ்ஹீதுல் ருபூபிய்யா ஆகும். இதை ஏற்றுக்கொண்டிருக்கின்ற அவர்கள் தவ்ஹீதின் மற்ற இருவகைகளான தவ்ஹீதுல் உலூஹிய்யா மற்றும் தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிபாத் ஆகியவற்றில் இறைவனுக்கு இணைக் கற்பிக்கிறார்கள்!

மேலும் இவர்கள் ஒரு பேருண்மையை புரிந்துக்கொள்வதில்லை! அதாவது, நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த முஷ்ரிக்குகளும் இவர்கள் நம்பிக்கைக் கொண்டிருப்பது போலவே நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள் என்பதை அறியாமல் இருக்கின்றார்கள். இவாகள் நம்பிக்கைக் கொண்டிருப்பது போலவே இப்பிரபஞ்சத்தையும் அதிலுள்ளவர்களையும் படைத்து பரிபாலித்து வருபவன் அல்லாஹ்வே என்று நம்பியிருந்தனர். இதை நாம் கூறவில்லை! அல்லாஹ்வே தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:

“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?’ என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ‘அல்லாஹ்’ என பதிலளிப்பார்கள்! ‘அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?’ என்று நீர் கேட்பீராக” (அல்-குர்ஆன் 10:31)

பிறிதொரு இடத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:

23:84 ‘நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்?’ என்று (நபியே!) நீர் கேட்பீராக!

23:85 ‘அல்லாஹ்வுக்கே’ என்று அவர்கள் கூறுவார்கள்! ‘(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?’ என்று கூறுவீராக!

23:86 ‘ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?’ என்றும் கேட்பீராக.

23:87 ‘அல்லாஹ்வே’ என்று அவர்கள் சொல்வார்கள்! ‘(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?’ என்று கூறுவீராக!

23:88 ‘எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? – யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக – ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)’ என்று கேட்பீராக.

23:89 அதற்கவர்கள் ‘(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)’ என்று கூறுவார்கள். (‘உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?’ என்று கேட்பீராக.

மேற்கண்டவாறு படைத்துப்பரிபாலிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று நம்பிக்கொண்டிருந்த மக்களிடையே தான் நபி (ஸல்) அவர்கள் போர் புரிந்தார்கள். அவர்களை சிறைபிடித்தார்கள்! காரணம், தவ்ஹீது ருபூபிய்யாவை நம்பிக்கைக் கொண்டிருந்த மக்கத்து முஷ்ரிக்குகள், மற்ற இரு தவ்ஹீது வகைகளான வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது மற்றும் இறைவனின் பண்புகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது ஆகியவற்றில் தவறிழைத்து அவற்றில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்ததே ஆகும்.

வணக்க வழிபாடுகளைச் சேர்ந்தவைகளான பிரார்த்தனை புரிதல், நேர்ச்சை செய்தல், பலியிடுதல், மன்றாட்டம் செய்தல், பாதுகாவல் தேடுதல், அழைத்து உதவி தேடுதல் போன்றவற்றை அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகள் அல்லாஹ்வைத் தவிர்த்து அவர்களுக்கு முன்வாழ்ந்து சென்ற நல்லடியார்கள் மற்றும் நபிமார்களின் சிலைகளிடம் செய்து வந்தனர்.

அதைப் போலவே, மறைவான ஞானம் அறியும் ஆற்றல், இதய இரகசியங்களை அறியும் ஆற்றல், பாவங்களை மன்னிக்கும் ஆற்றல் இதுபோன்ற அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பண்புகளை அல்லாஹ் அல்லாத தாம் வழிபடும் சிலைகளுக்கும் உண்டு என்று எண்ணி வழிபட்டனர்.

எனதருமை சகோதரர்களே!

இப்போது சற்று சிந்தித்து பாருங்கள்! அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகளின் நம்பிக்கைகளுக்கும் இன்றைய கப்று வணக்கமுறைகளை ஆதரிக்கும் மக்களுக்கும் மேலும் அல்லாஹ் அல்லாத இறை நேசர்களிடமும், அவுலியாக்களிடமும் உதவி தேடுபவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நிச்சயமாக பெரிதாக ஒன்றும் இல்லை சகோதரர்களே! செயல்பாடுகளில் தான் சிறு வித்தியாசமே தவிர நம்பிக்கைகளில் அல்ல! அவர்கள் சிலைவடிவில் செய்து வணங்கினார்கள்; நம்மவர்கள் சமாதி வடிவிலே வழிபடுகின்றனர். அவ்வளவு தான். ஆனால் இவ்விரு சாரார்களின் நம்பிக்கைகளும் ஒன்றுதான்!

ஆனால் இவைகளை நாம் கூறும் போது இவர்கள் கூறுவதென்னவோ, நாங்கள் எங்களின் குல அவுலியாக்களிடமும், மகான்களிடமும் அன்பு செலுத்தி அவர்களுக்கு மரியாதை (பூஜை புனஸ்காரங்கள்) செய்வதை நிராகரித்து அவர்களிடம் உதவி கோருவதை (வணக்கம்) தடுத்து அல்லாஹ்விடம் மட்டும் உதவி தேடவேண்டும் என்கிறீர்களா? என்று கேட்கின்றனர். என்ன ஆச்சரியம்! இதே கேள்வியைத் தான் அன்றைய முஷ்ரிக்குகளும் கேட்டனர். அல்லாஹ் கூறுகின்றான்:

“இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்)” (அல்-குர்ஆன்  38:5)

அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனுடைய நேர்வழியைத் தந்து நமது பாவங்களை மன்னித்து சுவனத்தில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “இறைவனுக்கு இணைவைப்பவர்களின் நம்பிக்கைகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed