அத்தியாயங்களின் விளக்கம் – 1 முதல் 20 வரை

1) சூரத்துல் பாதிஹா – தோற்றுவாய்

அல்-குர்ஆனின் முதல் அத்தியாயம் மனித சமுதாயத்ததிற்கு ‘நேர்வழி காட்டும் வேதத்தின் நுழைவாயில்’ என்று பொருள். ‘சூரத்துல் ஹம்து’ என்றும் இன்னும் பல பெயர்கள் இவ்வத்தியாத்திற்கு உள்ளன. 7 வசனங்களை கொண்ட இந்த அத்தியாயத்தின் சாரம்சம் நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனிடமே நேர்வழி காட்டுமாறு பிரார்திப்பதேயாகும்.

2) அல்-பகரா – பசு மாடு

அல்-குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் உலக வரலாற்றில் அல்லாஹ்வின் கட்டளைகளை அதிகம் கேலி செய்த இஸ்ரவேலர்களோடு தொடர்பான ஒரு செய்தியில் பசு மாட்டை பற்றி குறிப்பிடுகின்றான். 67 வது வசனம் தொடக்கம் 73 வது வசனம் வரை.

‘நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும்.’

3) ஆலு இம்ரான் -இம்ரானின் சந்ததியினர்

அல்-குர்ஆனின் 3வது அத்தியாயம் மர்யம் (அலை) அவர்களின் தந்தையின் பெயர் இம்ரான் ஆகும். அவரது குடும்பம் ‘உலத்தாரைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பம்’ என்று அல்லாஹ் நற்சான்றிதழ் வழங்கும் அளவுக்கு நல்லறங்கள் செய்வதில் முந்திக் கொண்டார்கள். 33-60 வசனம் வரை அவர்களது வரலாற்றை எடுத்து இயம்புகின்றான்

4) சூரத்துன் நிஸா – பெண்கள்

அல்-குர்ஆனின் 4வது அத்தியாயம் பெண்களை சந்தையில் போட்டு விற்று அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அந்த அறியாமைக் காலத்தில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக பேசக் கூடிய 176 வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயத்தை இறக்கி வைத்து பெண்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தினான்.

5) சூரத்துல் மாஇதா – உணவு மரவை

அல்-குர்ஆனின் 5வது அத்தியாயம் நபி ஈஸா (அலை) அவர்களிடம்

‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?’

என்று கேட்டதை இந்த அத்தியாயத்தின் 112-115 வசனம் வரை குறிப்பிடுகின்றான்.

6) சூரத்துல் அன்ஆம் – கால் நடைகள்

அல்-குர்ஆனின் 6வது அத்தியாயம் இணைவைப்பவர்கள் தங்களது விளைச்சலில், கால்நடைகளில் அல்லாஹ்வுக்கு ஒரு பகுதியையும் அவர்களது கடவுள்களுக்கு ஒரு பகுதியையும் பிரித்து அல்லாஹ்வை தமது கடவுள்களோடு ஒப்பாக்கினார். அல்லாஹ் 136- 139 வசனங்களில் சொல்லிக் காட்டுகின்றான்.

7) சூரத்துல் அஃராப் – சிகரங்கள்

அல்-குர்ஆனின் 7வது அத்தியாயம். சுவர்க்கவாசிகளுக்கும் நரகவாசிகளுக்கும் இடையில் நடக்கும் ஒரு உரையாடளை அல்லாஹ் இவ்வத்தியாயத்தின் 46 வது வசனம் தொடக்கம் 51 வரை குறிப்பிடுகின்றான். நரகத்தின் சிகரங்களில் இருந்து சுவர்கவாசிகளை அழைத்து உதவிகேட்பர் என்கிறான்.

8) சூரத்துல் அன்பால் – போரில் கிடைத்த வெற்றிப்பொருள்

அல்-குர்ஆனின் 8வது அத்தியாயத்தின் 1 வது வசனத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்….

‘போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்) களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.’

9) சூரத்துல் தவ்பா – பாவமன்னிப்பு

அல்-குர்ஆனின் 9வது அத்தியாயம் யுத்தகளத்திற்கு செல்லாமல் ஒதுங்கிக் கொண்டவர்கள் தொடர்பாக அல்லாஹ் 118 வசனத்தில் இப்படிக் குறிப்பிடுகன்றான்…

‘அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும்….’

10) சூரத்து யூனுஸ்

அல்-குர்ஆனின் 10 வது அத்தியாயத்தின் 98 வது வசனத்தில் யூனுஸ் நபியின் சமுதாயம் கடைசி நேரத்தில் அல்லாஹ்வை ஈமான் கொண்டு அனைவருமாக சேர்ந்த அல்லாஹ்விடம் இறைஞ்சி மன்றாடிய காரணத்தால் அல்லாஹ் அந்த சமுதாயத்தை மன்னித்து அவர்களுக்கு அனுப்ப இருந்த வேதனையை உயர்தி விட்டதாக குறிப்பிடுகின்றான்

11) சூரத்துல் ஹுத்

அல்-குர்ஆனின் 11 வது அத்தியாயம் நபி ஹுத் அவர்களின் சமுதாயமாகிய ஆத் கூட்டத்தை பற்றி இவ்வத்தியாயத்தின் 50 -60 வது வசனம் வரை குறிப்பிட்டு அவர்கள் அல்லாஹ்வை மாத்திரம் வணங்காது பெருமையடித்ததால் அவர்கள் எப்படி அழிந்து நாசமானார்கள் என்பதை பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

‘ஆது’ சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்; ‘என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.’

12) சூரத்து யூசுப்

12வது அத்தியாயம் யூசுப் நபியின் வாழ்கை வரலாறு மிக அழகான வரலாறு என்று அல்லாஹ் சிறப்பித்துச் சொல்கின்றான். 111 வசனங்களை கொண்ட இவ்வத்தியாயதின் ஆரம்பம் தொடக்கம் பால்கினற்றில் இருந்து அரச சிம்மானம் வரை யூசுப் நபி தமது வாழ்கையில் சந்தித்த நிலைகளை எடுத்துக் காட்டுகின்றான்.

13) சூரத்துர் ரஃத்

அல்-குர்ஆனின் 13வது அத்தியாயம் இடி அல்லாஹ்வை துதி செய்வதாக இவ்வத்தியாயத்தின் 13வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

‘மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸபீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.’

14) சூரத்து இப்ராஹீம்

அல்-குர்ஆனின் 14 வது அத்தியாயம் தியாகச் செம்மல், ஏகத்துவத்தின் தந்தை என போற்றப்படும் அல்லாஹ்வின் நண்பன் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பெயரில் இறக்கப்பட்டுள்ளது. 35வது வசனம் தொடக்கம் 41வது வசனம் வரை இப்றாஹீம் நபி செய்த பிரார்தனைகளை அல்லாஹ் நமக்கு ஞாபகப்படுத்துகின்றான்.

‘(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!” (14:40)

15) சூரத்துல் ஹிஜ்ர்

அல்-குர்ஆனின் 15 வது அத்தியாயம் நபி ஸாலிஹ் (அலை) யின் ஸமூது கூட்டம் வாழ்ந்த ‘ஹிஜ்ர்’ பகுதி கற்பாறைகள் நிறைந்த இப்பகுதி மதீனாவிற்கும், தபூகிற்கும் இடையில் அமைந்துள்ளது. தற்காலத்தில் மதாயின் ஸாலிஹ், அல் உலா என அழைக்கப்படும். இந்த சமூகம் அவர்களுக்கு அனுப்பட்ட நபியை பொய்பித்தமை பற்றி இவ்வத்தியாயத்தின் 80-84 வது வசனம் வரை குறிப்பிடுகின்றான்.

16) சூரத்துன் நஹ்ல் – தேனி

அல்-குர்ஆனின் 16 வது அத்தியாயத்தின் 68இ69 ஆகிய வசனங்களில் தேனி பற்றி குறிப்பிடும் போது…

‘அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்கும்) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.’

17) சூரத்துல் இஸ்ரா – இரவுப் பயணம்

அல்-குர்ஆனின் 17வது அத்தியாயம் இதற்கு பனீ இஸ்ராஈல் (நபி யஃகூப் அவர்களின் சந்ததிகள்) என்று ஒரு பெயரும் உள்ளது. அல்லாஹ் நபியவர்களை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்ற பின்னர் ஏழு வானங்களை தாண்டி மிஃராஜ் பயணம் இடம் பெற்ற சம்பவத்தை இவ்வத்தியாயத்தின் முதலாவது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

18) சூரத்துல் கஹ்ப் – குகை

அல்-குர்ஆனின் 18 வது அத்தியாயம் குகைவாசிகள் தொடர்பாக அல்லாஹ் இவ்வத்தியாயத்தின் 9 -26 வது வசனம் வரை குறிப்பிடுகின்றான்.

‘அந்த இளைஞர்கள் குகையினுள் புகுந்த போது ‘எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை ( பலனுள்ளதாக) சீர்திருத்தித் தருவாயாக!’ என்று கூறினார்கள்.’ (18:10)

19) சூரத்து மர்யம்

98 வசனங்களைக் கொண்ட இவ்வத்தியயம் அல்-குர்ஆனின் 19 வது அத்தியாயமாகும். நபி ஈஸா (அலை) அவர்களின் தாயாரான மர்யம் அம்மையாரைப் பற்றி கிரிஸ்தவ உலகம் கொண்டுள்ள பிழையான கொள்கையை தெளிவு பெறுவதற்காக அல்-குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.

‘(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது.’ (19:16)

20) சூரத்து தாஹா

மூஸா நபியின் வரலாற்றை எடுத்துக்காட்டும் 20வது அத்தியாயம் 135 வசனங்களைக் கொண்டது. அல்லாஹ்வோடு பேசியதை குறிப்பிடுகின்றான்.

‘நிச்சயமாக நான் தான் உம்முடைய இறைவன், நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் ‘துவா’ என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.’ (20:14)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed