ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே உரித்தானது.

வரக்கூடிய கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பற்பல நற்கருமங்களைச் செய்ய முயற்சிப்போம். அதிலும் பெரும்பாலோனவர்களின் வாழ்வினில் இந்த நான்கு கடமைகளும் சங்கமித்து அவர்கள் இக்கடமைகளை ஒருசேர நிறைவேற்றுவதற்கு அரிய வாய்ப்பாகவும் இம்மாதம் திகழ்கின்றது.

இறை திருப்தியைப் பெற வேண்டி நோன்பு நோற்பதன் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இப்புனித மாதத்திலே நாம் அனவரும் பயனுள்ள விசயங்கள் பலவற்றை அறிந்துக் கொண்டு அதன்படி செயலாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ரமலான் சிந்தனைகள் என்ற இத்தொடரை ஆரம்பித்திருக்கின்றேன். இத்தொடரிலே குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையிலே ஏகத்துவ நம்பிக்கைகள்,  வணக்க வழிபாடுகள் மற்றும் குணநலன்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றி சுருக்கமாக ஆய்வு செய்து அவற்றைக் கொண்டு நமது நம்பிக்கைகளை, வணக்க வழிபாடுகளை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

முதல் கடமையான ஏகத்துவக் கலிமாவை ஏற்று உறுதி கொண்ட நாம் தொழுகை, நோன்பு மற்றும் ஜக்காத் ஆகியவற்றை நபிவழி முறையிலே எப்படி நிறைவேற்றுவது, எந்த வழியில் செய்தால் அவை இறைதிருப்திக்கு உவப்பானதாக இருக்கும்? எந்த வழியில் செய்தால் அவற்றால் ஒரு பயனும் இருக்காது என்பதை நாம் அறிந்து செயலாற்றுவோமாயின் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் அவன் வாக்களித்திருக்கின்ற மறுமையின் இன்பங்களைத் தந்தருள்வான்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் முதல் கடமையை எடுத்துக் கொண்டால் ஒருவனை முஸ்லிம் என்று கூறுவதற்கு மிக மிக முக்கியமானது ஏகத்துவக் கலிமாவாகும். ஒருவனை முஸ்லிமாகவோ அல்லது முஷ்ரிக்காவோ அல்லது இறை மறுப்பாளனாகவோ மாற்றுவது, நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த இந்த திருக்கலிமாவின் உண்மையான பொருளை அவன் புரிந்துக் கொண்டு செயலாற்றுவதில் தான் இருக்கிறது.

“அல்லாஹ்வைத் தவிர வேறு ‘இலாஹ்’ இல்லை” என்பதின் உண்மையான அர்த்தத்தை ஒருவன் புரிந்துக் கொள்வதில் தவறிழைப்பானாயின், ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்ற பழமொழிக்கேற்ப அவனுடைய மற்ற செயல்கள் அனைத்தும் தவறானதாகவே அமையும்; அல்லது அவனது செயல்களின் மூலம் மறுமையில் எவ்வித பயனும் இருக்காது.

அவசரகதியான இவ்வுலகத்திலே நம்முடைய வாழ்நாளோ மிகச்சொற்ப காலம்! அதிலும் பணம், பணம் என்று பணமே வாழ்க்கை என்று நம்முடைய வாழ்நாளிலே அந்தப் பணத்தை சம்பாதிப்பதிலேயே நம் வாழ்வின் பெரும்பாலான காலத்தை செலவழிக்கின்ற நாம் இறைவனுக்காக செய்கின்ற அமல்களோ வெகு சொற்பம்! அந்த சொற்ப அமல்களும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாமல் நம்முகத்திலே தூக்கியெறிப்பட்டு நம்மை நஷ்டவாளிகளாக்கிவிடக்கூடிய அளவிற்கு ஒரு செயல் இருக்கிறதென்றால் அதைப் பற்றி நாம் அறிந்துக் கொண்டு மிகுந்த கவனமுடன் அதைத் தவிர்ந்து வாழ வேண்டுமல்லவா?

கஷ்டப்பட்டு வாழ்நாள் முழுதும் ரமலான் மாதத்தில் உணவு, பானம், உடல் சுகம் இவற்றையெல்லாம் பகல் நேரங்களில் தவிர்த்து பகல் முழுவதும் நோன்பு நோற்றும்,  இரவினிலே விடிய, விடிய தொழுகைகளிலும் குர்ஆன் ஓதுவதிலும் திக்ரு செய்வதிலும் நேரங்களைச் செலவலித்திருந்தும், குடும்பங்களை எல்லாம் ஊரினிலே விட்டுவிட்டு கடல் கடந்து வந்து வியர்வை சிந்த சம்பாதித்த பணத்தை, தேடிய செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் வாரி வாரியிறைத்தும் மறுமையில் அவையனைத்தும் பரத்தப்பட்ட புழுதியைப் போன்று ஆக்கக்கூடிய ஒரு செயல் இருக்கிறதென்றால் மிகுந்த எச்சரிக்கையுடன் அதன் வாடையைக் கூட நுகராமல் அதனின்றும் முற்றுமுழுதாக ஒதுங்கி வாழ்வது அவசியமல்லவா?

இந்த அளவிற்கு நாம் சிறுக சிறுக சேர்த்து வைத்த நன்மைகளையெல்லாம் தவிடுபொடியாக்குகின்ற அந்த செயல் எது?

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:

“நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர்”  (39:65)

“அவர்கள் இணை கற்பித்தால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்” (6:88)

“இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்” (25:23)

இணை கற்பித்தல் அவ்வளவு பயங்கரமானதா? அவ்வாறென்றால் இணை கற்பித்தல் எனும் மாபெரும் இத்தீமையிலிருந்து நாம் முற்றாக விலகியிருக்க வேண்டியது மிக மிக அவசியமல்லவா?

அல்லாஹ் கூறுகின்றான்:

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான்அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்” ( 4:48 & 116)

”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்”  (5:72)

ஏகத்துவக் கலிமாவை மொழிந்த நிலையில் தம்மை முஸ்லிம் என்று கூறிக் கொண்டிருக்கும் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கும் மிக மிக முக்கிய குறிக்கோளான அந்த உன்னத சொர்க்கத்தையே அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கியிருக்கிறான் என்றால், அதற்குரிய காரணமான இணை கற்பித்தல் என்றால் என்ன? என்பதை முழுமையாக அறிந்தால் மட்டுமே அதனை விட்டும் நாம் முழுமையாக தவிர்ந்திருக்க முடியும்.

அதற்கு முன், ஒருவர் தம்மை ‘முஸ்லிம்’ என்று கூறிக் கொள்வதற்கு காரணமான அந்த ஏகத்துவக் கலிமாவின் உண்மையான பொருளை அறிந்துக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

ஏகத்துவம் – ‘இறைவனை ஒருமைப்படுத்துதல்’ என்றால் என்ன?

இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed