இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம்

முஸ்லிம்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள் – Part 01 : இஸ்லாம் – இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

இவ்வுலகில் இருக்கக்கூடிய ஜீவராசிகளிலே மிக உண்ணதமான ஜூவராசியாகிய மனிதனின் தோற்றம் குறித்து,  மனிதன் என்பவன் தானாகத் தோன்றியவன் என்றும், குரங்கிலிருந்து தோன்றினான் என்றும் இவ்வுலகில் இருக்கின்ற பற்பல மதங்களும், கொள்கைக் கோட்பாடுகளும் அவர்களின் கற்பனைக் கெட்டியவாறு பலவாறு கூறிக் கொண்டிருக்கின்றது. அதுபோலவே மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்கான அடிப்படை நோக்கத்தைப் பற்றியும் பலவாறாகக் கூறுகின்றது.

இன்னும் சில மதங்கள் மனிதன் என்பவன் கடவுளின் தலை, முகம், உடல் மற்றும் கால் போன்ற உறுப்புகளிலிருந்து தோன்றினான் என்று கூறி, கடவுளின் தலையிலிருந்து பிறந்தவன் உயர்ந்தவன் என்றும் காலிலிருந்து பிறந்தவன் தாழ்ந்தவன் என்று மனிதர்களிலே ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்து வருகிறது.

கொள்கையில் தெளிவற்ற, ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற, நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முன்னால் பிசுபிசுத்துப் போகின்ற இத்தகைய மினிதனின் கற்பனைக் கோட்பாடுகளுக்கு மத்தியில் இஸ்லாமியக் கோட்பாடுகளோ எவ்வித முரண்பாடுகளுமில்லாமல் தெளிந்த நீரோடையைப் போல, ‘மனிதன் என்பவன் இறைவனால் ஒரு உண்ணத நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றான்’ என்று அழகாக கூறுகின்றது.

இவ்வுலகில் இருக்கும் சில கோட்பாடுகள் ‘ மனிதா! நீ இவ்வுலகில் வாழப் பிறந்தவனாவாய்! அதனால் உன்னால் முடிந்தவரை இன்பங்களை அனுபவித்துக்கொள் என்று கூறுகின்ற வேளையில், இஸ்லாமோ, ‘இவ்வுலகில் வாழும் யாவரும் மரணத்தைச் சுகிக்கக் கூடியவரே!’ என்றும் இவ்வுலகின் இன்பங்கள் அனைத்தும் அற்பமானவை; மரணத்திற்குப் பின்னால் மறுமையில் கிடைக்கும் வாழ்வே நிரந்தரமானது; அந்த வாழ்விற்கான முன்னேற்பாடுகளைச் செய்வது தான் இவ்வுலக வாழ்க்கை என்று மனிதனின் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வை அடிப்படையாக வைத்து இவ்வுலக வாழ்வை அமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றது.

அறிவுக்குப் பொருந்தாத இவ்வுலகின் மற்ற கோட்பாடுகளெல்லாம் மனிதப்படைப்பின் நோக்கம் குறித்து பலவாறாகக் குறிப்பிட்டு அதன் மூலம் மனிதர்களில் பெரும்பாலோர் வழிதவறியவர்களாக, தாம் படைக்கப்பட்டதன் நோக்கம் மறந்து  பற்பல வழிகளில் தம் வாழ்வை வீணடித்துக் கொண்டிருக்கையில் இஸ்லாம் மட்டுமே மனிதப் படைப்பின் நோக்கம் குறித்து தெள்ளத்தெளிவாக விளக்கி அந்த சத்திய இஸ்லாத்தை முறையாகப் பின்பற்றுபவர்களை நேர்வழிப்படுத்துகின்றது..

மனிதப்படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதைத் தவிர வேறில்லை!

அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான்” (அல்குர்ஆன் 30:40.)

“மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்”  (அல்குர்ஆன் 4:1.)

“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்குர்ஆன் 51:56)

இறைவன் நமது ஆதிபிதா ஆதம் (அலை) அவர்களைப் படைத்தது முதல் அவர்களுக்குப் பின்னால் வந்த எண்ணற்ற அவர்களுடைய சந்ததியினர்களை அவர்கள் தம் மனம்போன போக்கில் வாழுமாறு விட்டுவிடாமல் அவர்கள் படைக்கப்பட்டதன் நோக்கத்தை நினைவுபடுத்துவதற்காக ஆதம் (அலை) அவர்களின் சந்ததியினர்கள் அவ்வப்போது வழிதவறும் போதெல்லாம் அவர்களுக்கு இறைத்தூதர்களை அனுப்பிவைத்தான்.

இறைவன் அனுப்பி வைத்த அந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே ஒரு அடிப்படைக் கொள்கையைத் தான் போதித்தார்கள்! அது தான் இஸ்லாமிய ஏகத்துவம்!

‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை’

இன்றைய இஸ்லாத்தின் அடிப்படையாக இருக்கும் ‘இந்த தராக மந்திரமே’ மனிதன் படைக்கப்பட்டதிலிருந்து இருந்துக் கொண்டிருக்கின்றது! ஆம்! இதுவே இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம். மற்றொரு வகையில் கூறவேண்டுமானால் மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து இருக்கக்கூடிய மார்க்கமாக இஸ்லாம் இருந்துக் கொண்டிருக்கின்றது.

“(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: ‘நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்’ என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை” (அல்-குர்ஆன் 21:25)

மாற்றுமதத்தவர்கள் பலர் நினைத்துக் கொண்டிருப்பது போல இஸ்லாம் என்பது 1,400 ஆண்டுகளுக்கு முன்னால் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதன்று! சில பத்திரிக்கைகள் இஸ்லாமியர்களை முஹம்மது நபி தோற்றுவித்த மார்க்கத்தைப் பின்பற்றுவதால் அவர்களை “முஹம்மதியர்கள்” என்று கூறுகின்றது. முஸ்லிம்களில் சிலர் கூட அறியாமையினால் தங்களை “முஹம்மதியர்கள்” என்றே கூறுகின்றனர். நாம் முன்னர் கூறியது போல இஸ்லாம் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்படதன்று! மாறாக ஆதி பிதா ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இருந்து வருகின்ற மார்க்கமே இஸ்லாம் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.

ஆதி பிதா ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை தோன்றிய பல இறைத்தூதர்களுக்கும் அவர்களின் காலத்திற்கேற்ற வகையில் இறைவன் அவ்வப்போது சட்டங்களை அருளினான்; அத்தூதர்களுக்குப் பின்வந்தவர்கள், மனிதர்களின் எதிரியாகிய ஷைத்தானின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகி தமக்கு இறைவனால் வழங்கப்பட்ட இறைச்சட்டங்களைப் புறக்கணித்து வாழ்ந்த வேளையில் இறைவன் அவ்வப்போது புதிய தூதர்களையும் புதிய சட்டங்களையும் அனுப்பினான். அந்த வரிசையில் இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்டவரே இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்” (அல்-குர்ஆன் 57:25)

எனவே, முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அவர்களுக்கு முன்னர் வந்து சென்ற பல இறைத் தூதர்களைப் போல ஒரு மனிதரேயன்றி வேறில்லை! இங்கு முஸ்லிம்கள் உட்பட பலர் ஒரு பேருண்மையைப் புரிந்துக் கொள்ள வேண்டும். சில வழிகெட்ட சூபித்துவக் கொள்கைகளைச் சேர்ந்தவர்கள் கூறுவது போன்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ‘ஒளி’யினால் படைக்கப்பட்டவர்கள் அல்லர்! மாறாக நபி (ஸல்) அவர்களும் மற்ற இறைத்து{தர்களைப் போல ஒரு மனிதரே ஆவார்கள்.

எனவே அல்-குர்ஆனுக்கு மாற்றமாக முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்பி வரும் வழிகெட்ட சூபித்துவக் கூட்டத்திலிருந்து அல்-குர்ஆனையும் மறுமையையும் நம்பியிருக்கின்ற முஸ்லிம்கள் முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும்.

“முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்” (அல்-குர்ஆன் 3:144)

“(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம்” (அல்-குர்ஆன் 12:109)

என்று கூறிய இறைவன் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறுமாறு கட்டளையிடுகின்றான்:

“(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை’ என்று (நபியே!) நீர் கூறும்” (அல்-குர்ஆன் 46:9)

மேற்கூறிய வசனங்கள் அனைத்தும் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஒரு மனிதரே என்றும் அவர்களின் பணி இறைவன் புறத்திலிருந்து வந்த தூதுச் செய்தியை மக்களுக்கு எடுக்கூறி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வது தான் என்பதை தெளிவாக விளக்குகின்றது.

முன்னர் வாழ்ந்த சமுதாயத்திற்கு அவர்கள் நேர்வழி பெறுவதற்காக அவர்களின் இறைத்தூதர்களுக்கு இறைவன் வேதங்களை வழங்கியது போலவே இறைவன் தன்னுடைய இறுதித் தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் ‘அல்-குர்ஆன்’ என்னும் வேதத்தை அருளினான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும், இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்” (அல்-குர்ஆன் 2:151)

முந்தைய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வேதங்கள் எல்லாம் அந்த சமுதாயத்தின் தூதருக்குப் பிறகு மனிதக்கரங்கள் ஊடுருவி உண்மையான இறைவேதம் மனிதர்களிலிருந்து மறைக்கப்பட்டுவிட்ட நிலையில் இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதத்தை இறைவன் தானே பாதுகாப்பதாக தனது குர்ஆனிலே கூறுகின்றான்.

“நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.” (அல்-குர்ஆன் 15:9.)

அந்த வகையில் அல்-குர்ஆன் அருளப்பட்டது போலவே இன்றளவும் அதை இறைவன் பாதுகாத்து வருகின்றான். முந்தைய நபிமார்களுக்கு இறைவன் வேதங்களை அருளியிருப்பினும் அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே!

ஆனால் இறுதித் தூதருக்கு வழங்கப்பட்ட வேதமானது இவ்வுலகம் முடிவுறும் நாள்வரை இப்புவியில் தோன்றவிருக்கின்ற அனைத்து மனிதர்களுக்கும் நேர்வழி காட்டக்கூடிய இறைவேதமாக இருக்கின்றது. எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்களுக்குப் பின்னர் வரக்கூடிய மக்களும் இறுதித் தூதரையும் அத்தூதருக்கு இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதமாகிய அல்குர்ஆனையும் விசுவாசிப்பது அவசியமாகின்றது. இதுவே தீனுல் இஸ்லாம் ஆகும்!

இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மார்க்கத்தையோ அல்லது கொள்கையையோ இறைவன் அனுமதிப்பதில்லை!

ஈஸா (அலை) {இயேசு} மற்றும் மூஸா (அலை) {மோஸஸ்} ஆகியவர்களைப் பின்பற்றக் கூடியவர்களாயினும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப்பின் வந்தவர்கள் தீனுல் இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டியது மிக அவசியமாகும். ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்:

“முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்” (அல்-குர்ஆன் 33:40)

இவ்வசனத்தில் ‘இறுதி முத்திரை’ என்று இறைவன் கூறுகின்றான். இதன் மூலம் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வேறு எந்த நபியும் இல்லை என்பதையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எவனாவது ஒருவன், ‘தான் ஒரு நபி’யென்று வாதிட்டால் ‘அவன் ஒரு பொய்யன்’ என்றும் அவனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் ‘அந்தப் பொய்யனையே’ பின்பற்றுகிறார்கள் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம்.

மேலும் இறைவன் கூறுகின்றான்:

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல்-குர்ஆன் 5:3)

“நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்” (அல்-குர்ஆன் 3:19.)

மேற்கூறப்பட்ட வசனத்தில் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் ‘தீனுல் இஸ்லாம்’ மட்டுமே என்று தெள்ளத்தெளிவாக கூறப்பட்டிருப்பதால் இஸ்லாத்தைத் தவிர வேறு மார்க்கங்கள் அனைத்தும் இறைவனால் நிராகரிக்கப்படும் என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்க வேண்டிய, அதிலும் குறிப்பாக  முஸ்லிம்கள் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய சில அடிப்படைகள் இருக்கின்றன. அவற்றை அறிந்து அதன்படி செய்படுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக இருக்கின்றது. இவற்றை ஒரு முஸ்லிம் சரிவர அறிந்திருக்கவில்லையாயின், அவனது இறை நம்பிக்கையில், அமல்களில் குறைவு ஏற்பட வாய்பிருக்கின்றது. எனவே, “நான் ஒரு முஸ்லிம்” என்று சொல்லக்கூடிய ஒவ்வொருவரும் இஸ்லாத்தின் முக்கிய அடிப்படைகளை அறிந்து அதன்படி செயல்படுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இந்த தொடர் கட்டுரையில் ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை, சட்டங்களை ஒவ்வொன்றாக இன்ஷா அல்லாஹ் பார்ப்போம். இந்த வரிசையில் முதலாவாக, ஒரு முஸ்லிமின் நம்பிக்கைகள் (ஈமான்) எதன் மீது அமைந்திருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் யாவை? – இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில்…

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
2 thoughts on “இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம்”
  1. என்ன அருமையான தொடக்கம், வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed