01- சான்று பகரும் தொழுகை:
اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْـفَجْرِ‌ؕ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا‏
(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. (அல் இஸ்ராஃ 17:78).

===============================
02- பகல் நேர, இரவு நேர வானவர்கள் சந்தித்துக் கொள்ளும் தொழுகை:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று சேருகிறார்கள்.‘ இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு, நீங்கள் விரும்பினால் ‘நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன், சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது’ (திருக்குர்ஆன் 17:78).
===============================
03- ஃபஜ்ரைத் தொழுதவர் மகிழ்வுடன், மன
அமைதியுடன் காலைப் பொழுதை அடைகிறார் :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’. (புஹாரி 1142).
===============================
04- இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை:
அப்துர் ரஹ்மான் பின் அபீஅம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு வந்து தனியாக அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் சென்று நானும் அமர்ந்தேன். அப்போது அவர்கள், “என் சகோதரரின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், பாதி இரவுவரை நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார். சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், இரவு முழுதும் நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள் (முஸ்லிம் 1162).
===============================
05- ஸுப்ஹைத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுப்ஹுத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றின் விஷயத்தில் (நீங்கள் வரம்பு மீறி நடந்து, அது குறித்து) அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்து, அதை உங்களிடம் கண்டுகொண்டதால் உங்களை நரக நெருப்பில் குப்புறத் தள்ளும் நிலை உங்களுக்கு ஏற்பட்டுவிட வேண்டாம். இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.. முஸ்லிம் 1163.
===============================
06- நயவஞ்சத்தை விட்டு விடுதலை :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.. புஹாரி 657.
===============================
07- :மறுமையில் இறைவனைக் காணும் பாக்கியம்:
ஜரீர்(ரலி) அறிவித்தார். நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி ‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!’ என்று கூறிவிட்டு, ‘சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!’ (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள். (புஹாரி 554).
===============================
08- மலக்குகளின் புகழாரம்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். ‘என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?’ என்று அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். ‘அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களைவிட்டுவிட்டு வருகிறோம்’ என்று அவர்கள் விடையளிப்பார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி 555).
===============================
09- உலகம், உலகத்திலுள்ள
அனைத்தை விடவும் சிறந்தது?:
ஃபஜ்ருடைய முன் சுன்னத் இர்ணடு ரக்அத்துகள் உலகம், உலகத்திலுள்ள அனைத்தை விடவும் சிறந்தது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், முஸ்லிம் 5197).
===============================
10- நரகம் நுழைய மாட்டார்:
சூரிய உதயத்துக்கு மற்றும் மறைவதற்கு முன்னுள்ள இரு தொழுகைகளைப் பேணித் தொழுபவர் நரகம் நுழைய மாட்டார் (அதாவது ஃபஜ்ரும், அஸரும்)) அறிவிப்பவர்: ருவைபா (ரலி) அவர்கள் முஸ்லிம் 1468).
===============================
11- சுவர்க்கத்தில் நுழைவார் :
‘பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது பஜ்ருத், அஸர் தொழுகைகளை முறையாகத்) தொழுகிறவர் சுவர்க்கத்தில் நுழைவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். புஹாரி 574).
===============================
12- இழிவிலிருந்து பாதுகாப்பு:
அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்’ என்று விடையளித்தார்கள். புஹாரி 1144).
===============================
13- தண்டனையிலிருந்து பாதுகாப்பு:
ஸமுரா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்ட தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டு ‘அவர் குர்ஆனைக் கற்று தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்’ என்று விளக்கமளித்தார்கள்.(புஹாரி 1143).

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *