அகிலத்தின் அருட்கொடை இறுதித் தூதர் முஹம்மத் நபி (ﷺ) அவர்களின் உயரிய நற்குணங்களை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.

01- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் மக்களிலேயே அழகிய முகம் உடையவர்களாகவும் அழகிய உருவ அமைப்பு உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. அறிவிப்பவர்: பராஃ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள், புஹாரி 3549)
===============================
02- நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாகக் கொடை வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்மைச் சந்திக்கிற வேளையில் அவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக மாறிவிடுவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (அது வரை அருளப்பட்ட) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றை விட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், புஹாரி 3549)
===============================
03- (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் (பரவசத்தால்) அவர்களின் முகத்தின் (நெற்றி) ரேகைகள் மின்ன வந்தார்கள். அப்போது அவர்கள், ‘முத்லிஜீ (என்னும் இருவரின் சாயலை வைத்து உறவு முறையை கணிப்பவர்) ஸைதைப் பற்றியும் என்ன கூறினார் என்று நீ கேள்விப்படவில்லையா? (போர்வையின் கீழிருந்து வெளிப்பட்ட) அவ்விருவரின் கால்களையும் அவர் பார்த்துவிட்டு. ‘இந்தக் கால்கள் ஒன்று மற்றொன்றிலிருந்து தோன்றியவை’ என்று கூறினார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி 3555)
===============================
04- நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகானவர்களாகவும் மக்களிலேயே வீரமிக்கவர்களாகவும் மக்களிலேயே தாராள மனமுடையவர்களாகவும் இருந்தார்கள். ‘(ஒரு முறை, மதீனாவின் மீது பகைவர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்று வதந்தி பரவவே) மதீனாவாசிகள் பீதிக்குள்ளானார்கள். அப்போது அவர்களை நபி(ஸல்) அவர்கள் முந்திச் சென்று, குதிரையில் ஏறி (மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் எதிரியை எதிர்கொள்ளப்) புறப்பட்டார்கள்; மேலும், ‘இந்தக் குதிரையைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டேன்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 2820)
===============================
05- கஅப் இப்னு மாலிக்(ரலி), தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்ட சமயத்தை (நினைவு கூர்ந்து) பேசிய படி, ‘நான் அல்லாஹ்வின் தூதருக்கு சலாம் சொன்னேன். அவர்களின் (பொன்னிற) முகம் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருந்தது. இறைத்தூதர்(ஸல்) மகிழ்ச்சியடைந்தால் அவர்களின் முகம் சந்திரனின் ஒரு துண்டைப் போல் பிரகாசமாகிவிடும். நாங்கள் அதை வைத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதைத் தெரிந்து கொள்வோம்’ என்று கூறினார்கள். (புஹாரி 3556).
===============================
6- நபி(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ‘உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே’ என்று அவர்கள் கூறுவார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், புஹாரி 3559).
===============================
7- இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே – அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் -எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர. (அப்போது மட்டும் பழி வாங்குவார்கள்.) (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி 3560)
===============================
8- நபி(ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நபி(ஸல்) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை.வேறுசில அறிவிப்புகளில் ‘உடல் மணம்’ என்பதற்கு பதிலாக ‘வியர்வை’ என்று இடம் பெற்றுள்ளது. (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 3561).
===============================
9- நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர். ஷுஅபா(ரஹ்) இதே போன்றதை அறிவித்துவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்’ என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள், புஹாரி 3562)
===============================
10- நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால்விட்டு விடுவார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 3563
===============================
11- நபி(ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக, தெளிவாகப் பேசி வந்தார்கள்.) அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி 3567.
===============================
12- நபி(ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் ‘இல்லை’ என்று சொன்னதில்லை என ஜாபிர்(ரலி) கூறக் கேட்டேன். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள், புஹாரி 6034).
===============================
13- நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ’ என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்’ என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லை. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 6038
===============================

14- ‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?’ என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அஸ்வத் இப்னு யஸீத் (ரஹ்) அவர்கள், புஹாரி 6039).

===============================

15- நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மேல் ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா(ரலி) அவர்களைச் சுற்றி திரை அமைத்தார்கள். பிறகு ஒட்டகத்தின் அருகில் அவர்கள் அமர்ந்தார்கள். ஸஃபிய்யா(ரலி), நபி(ஸல்) அவர்களின் முழங்கால் மீது தம் காலை வைத்து ஒட்டகத்தில் ஏறினார்கள். அறிவிப்பவர்:  அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 2235

===============================

16- மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தங்களிடம் ஒரு தேவை உள்ளது. (ஒரு விஷயம் பற்றி கேட்க வேண்டும்)” என்று கூறினாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ன மனிதரின் தாயே! எந்தத் தெருவுக்கு நான் வரவேண்டும் என நீ விரும்புகிறாய்; சொல். உனது தேவையை நான் நிறைவேற்றிவைக்கிறேன்” என்று கூறிவிட்டு, அவள் தமது தேவையை முடித்துக் கொள்ளும் வரை (மக்கள் நடமாட்டமுள்ள ஒரு தெருவில்) அவளுடன் தனியாக(ப் பேசிக்கொண்டு) நின்றிருந்தார்கள். அறிவிப்பவர்: அனஸ்  (ரலி) அவர்கள், முஸ்லிம் 4648

===============================

17- (மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். ‘அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், ‘அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’ என்று கூறினர். (உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்’ என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), ‘உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்:  ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி 3475.

===============================

18- நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அவர்களின் இல்லத்திற்குள்) நுழைந்தேன். அங்கு அவர்கள் ஒரு பாத்திரத்தில் பால் இருக்கக் கண்டார்கள். உடனே (என்னிடம்) ‘அபூ ஹிர்! திண்ணை வாசிகளிடம் சென்று, ‘அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்’ என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (இறைத்தூதர்(ஸல்) அவர்களின்) இல்லத்தினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அப்போது அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. பிறகு அவர்கள் நுழைந்தனர். அறிவிப்பவர்:  அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 6246

===============================

19- (ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துவந்தார்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்:  அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 6247

===============================

20- ‘நபி(ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடமிருந்து நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பக் கூறுவார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்’ அனஸ்(ரலி) அறிவித்தார். புஹாரி 95

 

தொடரும் …………………………….

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *