அகிலத்தின் அருட்கொடை இறுதித் தூதர் முஹம்மத் நபி (ﷺ) அவர்களின் உயரிய நற்குணங்களை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.
21- நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை உள்நாக்குத் தெரியும் அளவிற்குச் சிரிப்பவர்களாகக் கண்டதில்லை. அவர்கள் புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி 4828
22- நபி(ஸல்) அவர்களை விடத்தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பூரணமாகவும் தொழுகை நடத்தக் கூடிய வேறு எந்த இமாமின் பின்னாலும் நான் தொழுதது கிடையாது. ஒரு குழந்தையின் அழுகுரலை அவர்கள் கேட்க நேர்ந்தால், அக்குழந்தையின் தாயாருக்குச் சஞ்சலம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தொழுகையைச் சுருக்கமாகவே முடித்துக் கொள்வார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 708
===============================
23- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் முஸ்லிம்களில் எவரையேனும் ஏசியிருந்தால், அல்லது சபித்திருந்தால், அல்லது அடித்திருந்தால் அவற்றை அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் அருளாகவும் மாற்றிடுவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், முஸ்லிம் 6781)
===============================
24- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் எதையும் எப்போதும் அடித்த தில்லை; எந்தப் பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்ததில்லை; அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்யும்போதே) தவிர.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொல்லாலோ செயலாலோ) தம்மைப் புண்படுத்திய எவரையும் அவர்கள் எப்போதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இறைவனின் சார்பாக அவர்கள் நடவடிக்கை எடுத்தாலே தவிர (அப்போது மட்டுமே பழிவாங்குவார்கள்). அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், முஸ்லிம் 6195
===============================
25- துஃபைல் இப்னு அம்ர் அத்தவ்ஸீ(ரலி) அவர்களும் அவர்களின் தோழர்களும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (எங்கள்) ‘தவ்ஸ்’ குலத்தார் மாறுசெய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து)விட்டார்கள். அவர்களுக்குக் தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர். அப்போது, ‘தவ்ஸ் குலத்தார் அழியட்டும்’ என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 2937
===============================
26- (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணைவைப்பாளர் களுக்கெதிராக(ச் சாபமிட்டுப்) பிரார்த்தியுங்கள்” என்று கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை. நான் அருளாகவே அனுப்பப்பெற்றுள்ளேன்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், முஸ்லிம் 6778.
===============================
27- ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்’ என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 6025
===============================
28- யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘அஸ்ஸாமு அலைக்கும்’ (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு ‘வ அலைக்கும் அஸ்ஸலாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)’ என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான்தான் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)’ என்று கேட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி 6024
===============================
29- ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “படைப்பினங்களிலேயே மிகவும் சிறந்தவரே!” என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அது இப்ராஹீம் (அலை) அவர்கள்தான்” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், முஸ்லிம் 6287).
===============================
30- நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு, குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றை (கடனாகப் பெற்றதைத் திரும்பிச் செலுத்தும் வகையில்) கொடுக்க வேண்டிய வகையில்) கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திரும்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) ‘அவருக்கு அதைக் கொடுத்து விடுங்கள்’ என்றார்கள். அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடிய போது. அதை விட அதிக வயதுடைய ஒட்டகத்தைத்தான் தோழர்கள் கண்டார்கள்’ அதையே கொடுத்து விடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர், ‘எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்து விட்டீர்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாகத்தருவான் என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அழகிய முறையில் திரும்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்’ என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 2305
===============================
31- நபி(ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட ‘அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்’ என்றே கூறுவார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 6031
===============================
32- இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட ‘நஜ்ரான்’ நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களின் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, ‘முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்’ என்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 5809
===============================
33- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாக தரப்பட்டாலும் சரி, நான் அதைப் பெற்றுக் கொள்வேன். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 2568
===============================
34- உஹுது மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என் மீது மூன்று நாள்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 2389
===============================
35- அன்சாரிகளில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் யாசித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் யாசித்தார்கள் அப்போதும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் அவர்கள் கேட்க, நபி(ஸல்) அவர்கள் மீண்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்களிடம் இருந்தது அனைத்தும் தீர்ந்து போன பின் ‘என்னிடமுள்ள செல்வதை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவே மாட்டேன். ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான்; மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை’ என்றார்கள். அறிவிப்பவர்: அபூ ஸஈதுல் குத்ரிய் (ரலி) அவர்கள், புஹாரி 1469
===============================
36- நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களைச் சந்தித்து, ‘தவ்ராத்தில் நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!’ என்றேன். அவர்கள், ‘இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. ‘நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியாக அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!’ (இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) ‘அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து கண்டு கொள்ளாமல்விட்டு விடுவார்! அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் ‘லாயிலாஹ இல்லல்லாஹு’ என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்!’ என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது!’ என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அதாஃ இப்னு யஸார் (ரஹ்) அவர்கள், புஹாரி 2125
===============================
37- நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. அறிவிப்பவர்: ஜரீர் (ரலி) அவர்கள், புஹாரி 3035).
===============================
38- எனக்குப் பல பெயர்கள் உண்டு. நான் ‘முஹம்மது’ (புகழப்பட்டவர்) ஆவேன். இன்னும் நான் ‘அஹ்மத்’ (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். நான் ‘மாஹீ’ (அழிப்பவர்) ஆவேன்; அல்லாஹ் என் மூலம் இறைமறுப்பை அழிப்பான். நான் ‘ஹாயுர்’ (ஒருங்கிணைப்பாவர்) ஆவேன்; என் தலைமையின் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள்; நான் ‘ஆம்ப்’ (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன். அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முதஇம் (ரலி) அவர்கள், புஹாரி 4896
===============================
39- அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அதிகமாகத் தம் குடும்பத்தாரை நேசிக்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குழந்தை) இப்ராஹீம் மதீனாவின் மேட்டுப் பாங்கான கிராமப்பகுதியில் பாலூட்டி வளர்க்கப்பட்டு வந்தார்.
(அங்கிருந்த குழந்தையைப் பார்ப்பதற்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செல்லும் போது அவர்களுடன் நாங்களும் செல்வோம். அவர்கள் வீட்டுக்குள் நுழைவார்கள். அப்போது வீட்டுக்குள் புகை மூட்டப்பட்டிருக்கும். குழந்தையின் பால்குடித் தந்தை (அபூசைஃப்) கொல்லராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கி முத்தமிட்டுவிட்டுத் திரும்புவார்கள். முஸ்லிம் 4635
===============================
40- நபி (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் (ரலி) அவர்களை முத்தமிடுவதைக் கண்ட அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் எவரையும் நான் முத்தமிட்டதில்லை” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “விஷயம் தெரியுமா? கருணை காட்டாதவன் கருணை காட்டப்படமாட்டான்” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், முஸ்லிம் 4637
===============================
41- மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். (அந்த அளவிற்கு மிக எளிமையானவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.) அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 6072
===============================