01- நபி (ஸல்) அவர்கள் உபரியான நோன்புகளை அதிகம் நோற்ற மாதம் ஷஃபான்:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(இனி) நோன்பை விடவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்; (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள். ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் மாதம் முழுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஃபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை.” (புஹாரி 1969)
===============================

02- உபரியான வணக்கங்களில் உங்களுக்கு இயன்றதையே செய்யுங்கள் எனக் கூறிய மார்க்கம் இஸ்லாம்:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில வருடங்களில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘‘நற்செயல் களில் உங்களில் இயன்றதையே செய்யுங்கள். நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ் சலிப்படையமாட்டான்” என்றும் அவர்கள் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழப்படும் தொழுகையே நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.” (புஹாரி 1970).
===============================

03- ஷஃபானில் நபியவர்களின் நோன்பு எவ்வாறெல்லாம் அமைந்திருந்தன::

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோன்பு குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொடர்ந்து) நோன்பு நோற்கிறார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள்; நோன்பே நோற்கமாட்டார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்காமல் இருந்துவிடவும் செய்வார்கள். அவர்கள் ஷஅபானைத் தவிர வேறெந்த மாதத்திலும் அதிக நாட்கள் நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. ஷஅபான் மாதம் முழுவதும் அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்கள். ஷஅபானில் சில நாட்கள் மட்டும் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்” என்று விடையளித்தார்கள். (முஸ்லிம் 2131)
===============================

04- நபியவர்கள் நோன்பு நோற்பதற்கு விரும்பிய மாதங்கள்:

“நபியவர்கள் நோன்பு நோற்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும்” என ஆயி|ஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத் 25589)
===============================

05- ஷஃபானில் உபரியான நோன்புக்குள்ள முக்கியத்துவம்:

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், “இல்லை” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். (இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 2155).

வழமையாக நோன்பு நோற்று வரும் ஒருவருக்கே நபியவர்கள் இவ்வாறு கட்டளையிட்டார்கள் என அறிஞர்கள் விளக்கமளிக்கின்றனர். இன்னும் வழமையாக நோற்று வரும் சுன்னத்தான நோன்பு விடுபட்டால் அதைக் கழாச் செய்வதற்கு இச்செய்தியில் ஆதாரமுள்ளதென அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
===============================

06- ஷஃபானில் நபியவர்கள் உபரியான நோன்புகளை அதிகம் நோற்றதற்குரிய காரணம் என்ன?:

நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் இடையிலுள்ள மாதமாகும்.

இம்மாதம் பற்றி மக்கள் கவனக்குறைவாக இருக்கின்றனர். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் உயர்த்தப்படுகின்றன. எனவே நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமல் அல்லாஹ்விடம் உயர்த்தப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)
(ஆதாரம்: நஸாஈ 2357).
===============================

07- ஷஃபான் மாதத்தின் நடுப் பகுதியை அடைந்தால் நோன்பு நோற்கக் கூடாதா?:

“ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியை அடைந்தால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என திர்மிதி 738 வது எண்ணிலும் மற்றும் பல கிரந்தங்களிலும் இடம் பெறும் செய்தியைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்களான இமாம் அஹ்மத், இமாம் இப்னு ஹஜர், இமாம் இப்னுல் மஈன். இமாம் பைஹகீ, இமாம் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, இமாம் அபூ ஸுர்ஆ அர்ராஸி, இமாம் தஹபீ, இமாம் இப்னு ரஜப் (ரஹிமஹுமுல்லாஹ்) இதன் அறிவிப்பாளர் வரிசையை ஏற்றுக்கொள்ள முடியாத செய்தி என குறைகண்டு விமர்சனம் செய்துள்ளனர்.

இன்னும் இச் செய்தி நபி (ஸல்) அவர்கள் ஷஃபானில் அதிகம் நோன்பு நோற்றார்கள், ரமழனுக்கு ஓரிரு நாட்கள் இருக்கும் போது நோன்பு நோற்காதீர்கள் என்ற ஆதாரப் பூர்வமான செய்திகளுக்கு முரண்படுகிறது என அறிஞர்கள் விளக்கமளிக்கின்றர்.
===============================

08- கடந்த ரமழானில் விடுப்பட்ட நோன்புகளை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டுதல்:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர வேறெப்போதும் என்னால் நிறைவேற்ற முடிந்ததில்லை.

நபி (ஸல்) அவர்களின் பணிவிடையில் ஆயிஷா (ரலி) அவர்கள் ஈடுபட்டதே இதற்குக் காரணம் என்று (அறிவிப்பாளர் களில் ஒருவரான) யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (புஹாரி 1950).

மற்றொரு அறிவிப்பில்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உடைய தேவைகளைக் கவனிக்க வேண்டி) இருந்ததே காரணம்” என்று இடம்பெற்றுள்ளது. (முஸ்லிம் 2106).

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (அவர்களுடைய துணைவியரான) எங்களில் ஒருவருக்கு ரமளான் நோன்பு தவறிவிடும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருந்ததால்) அதை அவரால் ஷஅபான் மாதம் வராதவரை “களாச் செய்ய முடியாது. (முஸ்லிம் 2107).
===============================

09- ரமழானுக்கு ஓரிரு நாட்கள் எஞ்சியிருக்கும் போது வழமையாக நோற்பவரைத் தவிர வேறெவரும் உபரியான நோன்புகளை நோற்கக் கூடாது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்கு முந்தைய நாளும் உங்களில் யாரும் நோன்பு நோற்க வேண்டாம்; (அந் நாட்களில் வழக்கமாக) நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்! (இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், புஹாரி 1914)
===============================

10- ஷஃபான் மாதம் தொடர்பான பலஹீனமான செய்திகள், பொய்யான செய்திகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்போம். அவற்றில் சில செய்திகள்:

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَكَانَ يَقُولُ لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ وَيَوْمُهَا أَزْهَرُ * أحمد

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் ‘அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப் வஷஃபான் வபாரிக் லனா பீ ரமழான்’ யா அல்லாஹ் ரஜபிலும், ஷஃபானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக, இன்னும் ரமழானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக. (அஹ்மத்).

இதன் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய ‘ஸாஇததிப்னு அபிர்ரகாத்’ என்பவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்று இமாம் புஹாரி (ரஹ்), மற்றும் இமாம் நஸாயி (ரஹ்) போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

(( أن رسول الله صلى الله عليه وسلم لم يصم بعد رمضان إلا رجباً وشعبان

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானுக்கு பின் ரஜபிலும், ஷஃபானிலும் தவிர நோன்பு நோற்கவில்லை’
இமாம் பைஹகி (ரஹ்) கூறுவதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: இந்த ஹதீஸை குறிப்பிட்டு விட்டு இது நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாகும் காரணம் இதில் முற்றிலும் பலவீனமான யூசுப் இப்னு அதீயா இடம் பெறுகிறார் என்று குறிப்பிடுகிறார் (தப்யீனுல் அஜப் பக்கம் 12).

قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي…….)).

‘ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு திஹ்யா இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (தப்யீனுல் அஜப் பக்கம் 13-15). இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 5: 205, 206).
===============================

11- ஷஃபானில் நடைபெறும் பித்அத்துக்கள் விஷயத்தில் எச்சரிக்கையா இருங்கள், அவவ்வாறான வழி கேடுகளிலிருந்து முழுமையாக விலகிக் கொள்ளுங்கள்:

ஷஃபான் 15 வது நளில் மட்டும் பராஅத் எனக் கூறி நோன்பு நோற்பதும், ரொட்டிகளை சுட்டு பகிர்வதும், இன்னும் பல விதமான சடங்குகளை, சம்பிரதாயங்களை அரங்கேற்றுவதும் வழி கெட்ட பித்அத்துக்களில் நின்றும் உள்ளவையாகும் இவைகளை விட்டு மிக எச்சரிக்கையாக இருப்போம்.

ஷஃபானில் இயன்ற வரை உபரியான நோன்புகளை நோற்று நபி வழியை உயிர்பிப்போம், பித்அத்துக்களை விட்டு எச்சரிக்கையாக இருப்போம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *