1- அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றைத் திட்டாதீர்கள்:
“அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் – இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் – பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.” (அல்குர்ஆன் 6: 108).

===============================
2- பெற்றோரைத் திட்டாதீர்கள்!:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)” என்றார்கள்.” (புஹாரி 5973).
===============================
3- எனது தோழர்களைத் திட்டாதீர்கள்!:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக்குவியல், அல்லது அதில் பாதியளவைக்கூட (அவரது) அந்தத் தர்மம் எட்ட முடியாது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 3673).
===============================
4- மரணித்தவர்களைத் திட்டாதீர்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “இறந்தோரை ஏசாதீர்கள். ஏனெனில், அவர்கள் தாம் தேடிக்கொண்டவற்றின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்.” (இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 1393).
===============================
5- சேவலைத் திட்டாதீர்கள்!:
“சேவலைத் திட்டாதீர்கள், ஏனெனில் அது தொழுகைக்கு எழுப்பி விடுகின்றது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைதிப்னு ஹாலிதுல் ஜுஹனி (ரலி) அவர்கள், அபூதாவுத் 5103).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் சேவல் கூவுகின்ற சப்தத்தைக் கேட்டால், அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள். ஏனெனில், அது வானவரைப் பார்த்திருக்கிறது (அதனால்தான் கூவுகின்றது.); கழுதை கத்தும் சப்தத்தைக் கேட்டால்,ஷைத்தானிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (அதனால்தான் கத்துகிறது.)” இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5275).
===============================
6- காற்றை ஏசாதீர்கள்!
“காற்றை ஏசாதீர்கள்! ஏனெனில் அது (அல்லாஹ்வின்) அருளையும், தண்டனையையும் கொண்டு வருகின்றது. அல்லாஹ்விடம் அதன் நலவைக் கேளுங்கள், அதன் தண்டனையை விட்டுப் பாதுகாப்புத் தேடுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அஹ்மத் 7407).
===============================
7- காலத்தைத் திட்டாதீர்கள்!:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “காலத்தை ஏசாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்).” இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 4523).
===============================
8- காய்ச்சலை ஏசாதீர்கள்!:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உடல் நலிவுற்றிருந்த) உம்முஸ் ஸாயிப் அல்லது உம்முல் முசய்யப் எனும் பெண்மணியிடம் (உடல்நலம் விசாரிக்கச்) சென்றார்கள். அப்போது “உம்முஸ் ஸாயிபே! அல்லது உம்முல் முசய்யபே! உமக்கு என்ன நேர்ந்தது? ஏன் நடுங்கிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “காய்ச்சல். அதில் அல்லாஹ் வளம் சேர்க்காமல் இருக்கட்டும்!” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “காய்ச்சலை ஏசாதே! ஏனெனில் அது, கொல்லனின் உலை இரும்பின் துருவை அகற்றிவிடுவதைப் போன்று, ஆதமின் மக்களின் (மனிதர்களின்) தவறுகளை அகற்றி விடுகிறது” என்று கூறினார்கள். (முஸ்லிம் 5031).
பிறரை ஏசுவதிலிருந்தும், திட்டுவதிலிருந்தும் நாவைக் காத்து இறை அருளைப் பெற்ற அடியார்களாக மாறுவோமாக!.
===============================
இந்தத் தலைப்பில் உரையை கேட்க விருமபினால் கீழுள்ள தலைப்பின் மீது அழுத்தவும்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed