டிசம்பர் மாதம் 31 ம் திகதி சரியாக கடிகாரத்தில் நேரம் இரவு 11, 55 மணியாக இருந்தது. தாய் வேகமாக சென்று மின் விளக்குகளை அணைத்தாள், வீடு கடும் இருளில் மூழ்கியது, திடீரென அக்கடும் இருளில் ஒரு சிறு ஒளி வெளிப்பட்டது, அது மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கேக்கில் உள்ள மெழுகு வர்த்திகளை தந்தை ஒளி பெறச் செய்தார். அந்த கேக்கை தயாரிப்பதற்கு தாய் பல மணி நேர சிரமங்களை எடுத்துக்கொண்டாள். அதை அழகு படுத்துவதற்கும் வடிவமைப்பதற்கும் அதிகம் சிரமப்பட்டார். Happy New Year என்ற வார்த்தைகளை அதன் மீது மிகக் கவனத்துடன் வடிவமைத்தார்.

மெழுகு வர்த்திகளின் ஒளியுடன் அவர்களது பிள்ளை அஹ்மதின் முகம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அஹ்மத் கேக்குக்கு பக்கத்தில் இருந்தார். தாய் மெழுகு வர்த்தியைப் பார்த்தவளாக தனது இளமை பருவத்தையும், திருமண நாட்களையும் பின்னோக்கி பார்க்க ஆரம்பித்தாள். தந்தையோ மெழுகு வர்த்தியை பார்த்தவராக தான் புதிதாக ஆரம்பித்த வெலைத் திட்டங்களை சிந்திக்கலானார். சிறிய அஹ்மதின் சிந்தனைகளோ பல விடயங்களின் பக்கம் உழன்று கொண்டிருந்தது.

சரியாக இரவு பன்னிரண்டு மணி என்பதை கடிகார மணி ஒலி அறிவித்தது. உடனே தாயும், தந்தையும், அஹ்மதின் கையைப் பிடித்து அனைவரும் சேர்த்து கேக்கின் மேல் எரிந்து கொண்டிருந்த மெழுகு வர்த்திகளை ஊதி அணைத்தனர். பிறகு மகிழ்ச்சியிலும், ஆனந்தத்திலும் கைகளைத் தட்டினர். தந்தை வீட்டின் மின் விளக்குகளை இயக்க வைத்து வீட்டை ஒளி பெறச் செய்தார்.

அஹ்மத்: தாயே!

தாய்: ஏன்? எனது அருமை மகனே!

அஹ்மத்: நாளை நாம் church (தெவாலயத்திற்)கு போவோமா?

தாய்: அஹ்மதின் கேள்வியால் திகைத்துப் போனவளாக எதற்காக?

அஹ்மத்: எனது வகுப்பிலே கற்கும் ஒரு கிறிஸ்தவ நண்பன் நாளை அவனும், அவனது வீட்டில் அனைவரும் church (தெவாலயத்திற்)குப் போகின்றார்கள்.

தாய்: நாம் முஸ்லிம்கள் நாம் மஸ்ஜிதுக்குத்தான் செல்வோம்.

அஹ்மத்: சற்று அமைதியானவனாக அப்படியெனில் நாளை மஸ்ஜிதில் கொண்டாட்டங்கள் நடைபெறுமா?

தாய்: இல்லை

அஹ்மத்: ஏன் கொண்டாட மாட்டார்கள்?

தாய்க்கு அஹ்மதின் கேள்விகளுக்கு முன்னால் மௌனமாகி விடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

அஹ்மத் விடுவதாக இல்லை தொடர்ந்து கேட்கலானான், அல்லாஹ்வின் தூதர் இந்நாளை கொண்டாடினார்களா?

தந்தை: இல்லை

அஹ்மத் தனது தந்தையை வியப்புடன் பார்த்தவனாக நான் அல்லாஹ்வின் தூதரை நேசிக்கின்றேன், நீங்கள் எனக்கு சொல்லியிருப்பது அவர்கள் செய்ததை நாம் செய்வது கடமை, அவர்கள் விட்டதை நாம் விடுவது கடமை என்று தானே, அப்படியெனில் நாம் ஏன் அல்லாஹ்வின் தூதர் கொண்டாடாத ஒரு நாளை கொண்டாட வேண்டும்?.

அஹ்மதின் விவேகமான அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முன்னால் தாயும், தந்தையும் பதிலின்றி மௌனித்துப் போயினர்.

அன்பிற்குரியவர்களே! இது ஒரு அரபு மூலத்தின் தமிழ் வடிவமே. இதில் கற்பனைகள் இருந்தாலும், இவ்வாரான வேதனையான நிதர்சனமான எண்ணற்ற நிகழ்வுகள் ஜனவரி முதல் திகதியை வரவேற்க முஸ்லிம் வீடுகளில் நடைபெறுகின்றன என்பதுதான் கசப்பான உண்மை.

அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் நேசிக்கும் ஒரு உண்மை முஃமின் எவ்வாறு வழி கெட்ட சாரார்களின், அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளானவர்களின் கொண்டாட்டங்களை கொண்டாட முடியும்?

அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பிக்கைகொள்ளும் முஃமின்கள் எப்படி இருப்பார்கள் என்பதை அல்குர்ஆன் கூறுகின்றது சற்று நிதானமாகப் படியுங்கள்:

لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُولَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُولَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ

“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும், தங்கள் புதல்வர்களாயினும், தங்கள் சகோதரர்களாயினும், தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்); ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான், சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்து கொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்”. (அல்முஜாதலா 58: 22).

“அல்லாஹ்வின் தூதரின் காலத்தில் ஒரு மனிதர் புவானா எனும் ஒரு இடத்தில் அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்தார். அல்லாஹ்வின் தூதரிடம் வந்து நான் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்துள்ளேன் அதை நிறைவேற்றலாமா?. அதற்கு அல்லாஹ்வின் தூதர், அந்த இடத்தில் அறியாமை காலத்தில் சிலைகள் வணங்கப்பட்டனவா? அதற்கு இல்லை என மக்கள் சொன்னார்கள், அங்கு ஏதும் அவர்களின் திரு நாட்கள், கொண்டாடப்பட்டனவா? அற்கும் இல்லை என சொன்னார்கள். அப்படியெனில் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக ஏனெனில் அல்லாஹ்விற்கு மாறு செய்யும் விஷயத்தில் நேர்ச்சையை நிறைவேற்றுவது என்பது கிடையாது, ஆதமுடைய மகனின் சக்திக்கு மீறிய விடயங்களிலும் நேர்ச்சையை நிறைவேற்றுவது கிடையாது’ என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் (அறிவிப்பவர்: ஸாபித் இப்னுல் லஹ்ஹாக் (ரலி) அவர்கள் ஆதாரம்: அபூதாவுத் 3315).

அல்லாஹ்விற்காக நிறைவேற்றப்படும் நேர்ச்சையை பிற சமூகங்களால் பெருநாட்கள் கொண்டாடப்படும் இடங்களில் நிறைவேற்றுவதற்கே தடை இருக்கும்போது அவர்களின் பெருநாட்களை எவ்வாறு கொண்டாட முடியும்? இதை ஏன் நமது சமூகம் சிந்திக்க மறுக்கின்றது. பெருநாட்கள் என்பது ஒவ்வொரு சமூகத்தினதும் மத அடையாளச் சின்னங்களில் முக்கியமான ஒன்றாக விளங்கும்போது அதை எவ்வாறு ஒரு முஸ்லிம் புனிதப்படுத்த முடியும்?

அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்:

وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ
“எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மைப் படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்”. (அல்ஹஜ் 22: 32).

புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட இந்த உரையையும் நீங்கள் கேட்கலாம்:

பிற சமூக கலாச்சாரங்ளை, சானுக்கு சான், முழத்துக்கு முழம் பின் பற்றி அவர்களுக்கு ஒப்பாகி அக்கூட்டதை சார்ந்தவர்களாவே ஆகிவிடாமல் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக, இதன் மோசமான விளைவுகளை, நமது குடும்ப உறவுகளுக்கும், பிள்ளைகளுக்கும், முஸ்லிம் சமூகத்திற்கம் எடுத்துரைப்போமாக.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed