“தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது.” (அல்குர்ஆன் 35: 10).
இமாம் ஹஸனுல் பஸரி ரஹிமஹுல்லாஹ் இந்த வசனதத்துக்கு விளக்கமளிக்கும் போது: ஒருவனது சொல்லை அவனது செயலுடன் ஒப்பிட்டுப் பார்க்கப் படுகிறது. அவனது சொல் செயலுக்கு உடன்படுகிறது என்றால் அது ஒப்புக்கொள்ளப்படுகிறது. அதற்கு மாற்றமாகும் போது அது நிறாகரிக்கப்பட்டு விடுகிறது.
செயலின்றி வெறும் வார்த்தைகள் என்பது பயனற்றதாகும். “நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.” (அல்குர்ஆன் 61: 3).
1- அடியானின் செயல்கள் ஒவ்வொரு நாளும் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன:
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள்.
(அவை:)
1) வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது.
2) அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.
3) (மனிதன்) இரவில் புரிந்த செயல், பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.
4) (மனிதன்) பகலில் புரிந்த செயல், இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது.
5) ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும். (முஸ்லிம் 293).
3- அடியானின் செயல்கள் வாரத்திற்கு இரு முறை இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன:
ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்: “ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்; தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர. அப்போது இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள். இவ்விருவரும் சமாதானமாகிக் கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்று கூறப்படுகிறது.” (முஸ்லிம் 5014)
“ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் ஒரு நோன்பாளியாக இருக்கும நிலையில் எனது செயல்கள் இறைவனிடம் சர்ப்பிக்கப்படுவதை விரும்புகிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், திர்மிதி 747).
3- அடியானின் செயல்கள் வருடத்திற்கு ஒரு முறை: இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன:
“நபியர்களிடம் ஷஃபானில் அதிகம் நோன்பு நோற்பதைப் பற்றிக் கேட்கப்பட்ட போது அது அடியார்களின் செயல்கள் அல்லாஹ்வின் பால் உயர்த்தப்படும் மாதம், எனவே நான் ஒரு நோன்பாளியாக இருக்கும் நிலையில் எனது செயல்கள் உயர்த்தப்படுவதை விரும்புகிறேன்” என பதிளலித்தார்கள். (அறிவிப்பவர்: உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள், நஸாயி 2357).
ஒவ்வொருவரும் தன்னிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகள்:
1- எனது செயல்களுக்கு அகிலங்களின் இறைவனிடம் இவ்வளவு மதிப்பிருக்கும் போது நான் எவ்வாறான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்?
2- உண்மையில் இறைவனை மகிழ்விக்கும் செயல்கள்தான் என்னிடமிருந்து இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது?
3- எனது முன்மாதிரியும், தலைவருமான நபி (ஸல்) அவர்கள் நோன்புடன் இருக்கும் நிலையில் தனது செயல்கள் உயர்த்தப்படுவதை விரும்பினார்களே. அந்த முன்மாதிரி எந்தளவுக்கு எனது வாழ்வில் தாக்கம் செலுத்தியிருக்கின்றதா?
4- எனது சங்கையான இறைவனை வெறுப்புட்டும் செயல்கள் என்னிடமிருந்து சமர்ப்பிக்கப்படுகின்றதா? அவ்வாறான செயல்களை நிறுத்திக் கொள்வதற்கு இன்றே நான் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.
இறைவனிடம் உயர்த்தப்படும் நமது செயல்கள் நற்செயல்களாகவே அமைய உறுதி எடுத்துக்கொள்வோமாக. அந்த அருள் பாக்கியத்துக்காக வல்ல நாயனை பிரார்த்திப்போமாக
நாம் நற்செயல்களை செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே நமது நற்செயல்கள் இறைவனிடம் உயர்த்தப்படுவதற்கு வல்ல வல்ல நாயனை பிரார்த்திப்போமாக!