1- அல்ஃபாதிஹா அத்தியாயத்தின் சிறப்பு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “குர்ஆனின் தோற்றுவாய் (எனும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை) ஓதாத வருக்குத் தொழுகையே கிடையாது.” இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 756).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)” என்று கூறினார்கள். அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் “இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை” என்று கூறினார்கள்.
அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, “உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். “அல்ஃபாத்திஹா” அத்தியாயமும் “அல்பகரா” அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை”என்று கூறினார். முஸ்லிம் 1472).
===============================
2- அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். “அல்பகரா” எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.” (இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 1430).
===============================
3- அல்பகரா, ஆலு இம்ரான் அத்தியாயங்களின் சிறப்புகள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா” மற்றும் “ஆலு இம்ரான்” ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். “அல்பகரா” அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள். (முஸ்லிம் 1470).
நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் குர்ஆனும் அதன்படி செயலாற்றியவர்களும் அழைத்து வரப்படுவர். அப்போது “அல்பகரா”அத்தியாயமும் “ஆலு இம்ரான்” அத்தியாயமும் முன்னே வரும்” என்று கூறிவிட்டு, இ(வ்விரு அத்தியாயங்களும் முன்னே வருவ)தற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) மூன்று உவமைகளைக் கூறினார்கள். அவற்றை நான் இதுவரை மறந்திடவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் (நிழல் தரும்) மேகங்களைப் போன்று, அல்லது நடுவே ஒளியுள்ள இரு கரும் நிழல்களைப் போன்று, அல்லது அணி அணியாகப் பறக்கும் இரு பறவைக் கூட்டங்களைப் போன்று (முன்னே வந்து) தம்மைக் கையாண்டவருக்காக (இறைவனிடம்) வாதாடும். முஸ்லிம் 1471).
===============================
4- அல் இஹ்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு:
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), “ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?” என்று கேட்டார்கள். “(ஒரே இரவில்) எவ்வாறு குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓத இயலும்?” என்று மக்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “குல் ஹுவல்லாஹு அஹத் (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பங்கிற்கு ஈடானதாகும்” என்று கூறினார்கள். (முஸ்லிம் 1477).
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம், “மக்களே!) ஒன்று கூடுங்கள்; நான் உங்களுக்குக் குர்ஆனின் முன்றிலொரு பகுதியை ஓதிக் காட்டப் போகிறேன்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் ஒன்றுகூடினர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடையே) புறப்பட்டு வந்து “குல் ஹுவல்லாஹு அஹத்” (எனத் தொடங்கும் 112ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள். பிறகு (தமது இல்லத்திற்குள்) சென்றுவிட்டார்கள். அப்போது எங்களில் சிலர் சிலரிடம், “அவர்களுக்கு வானிலிருந்து ஏதேனும் செய்தி வந்திருக்கிறது போலும். அதன் காரணமாகவே அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள் என்று கருதுகிறேன்” என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்து “நான் (சற்று முன்) உங்களிடம் குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓதிக் காட்டுவேன் எனக் குறிப்பிட்டேன். அறிக: அந்த (112ஆவது) அத்தியாயம் குர்ஆனின் மூன்றிலொரு பகுதிக்கு ஈடானதேயாகும்” என்று கூறினார்கள். (முஸ்லிம் 1479).
===============================
5- “அல்முஅவ்விதத்தைன்” (குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய அத்தியாயங்களின் சிறப்பு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உமக்குத் தெரியாதா? இன்றிரவு (எனக்கு) சில வசனங்கள் அருளப்பெற்றுள்ளன. அவையொத்த வசனங்கள் முன்னெப்போதும் காணப்பட்டதில்லை. அவை: குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ்” (113, 114ஆகிய) அத்தியாயங்களாகும். இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1482)
அபூஸயீத் (ரலி) அவர்கள் வழியாக இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் “(பல்வேறு அவ்ராதுகளைக் கொண்டு) ஜின், மனித கண் திருஷ்டிகளிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள் பின் இரு குல் ஸூராக்கள் இறங்கியதும் இவ்விரண்டையும் எடுத்துக் கொண்டு ஏனையவற்றை விட்டு விட்டார்கள்.” (திர்மிதி 1984இ நஸயி 5399இ இப்னு மாஜா3502 அல்பானியால் சரிகாணப்பட்டது ஸஹீஹ் அல் ஜாமிஉ 4902).
ஆயிஷா(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது (குர்ஆனில் உள்ள) பாதுகாப்புக் கோரும் (இறுதி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் (உடல்) மீதே ஊதிக்கொள்வார்கள். அவர்களுக்கு நோய் கடுமையானபோது நான் அவற்றை ஓதி அவர்களின் மீது ஊதிக் கொண்டும் அவர்களின் கையின் சுபிட்சம் (பரக்கத்) கருதி அதைக்கொண்டே (அவர்களின் மேனியை) தடவிக் கொடுததுக் கொண்டும் இருந்தேன். புஹாரி 5751).