1- அல்கஹ்ஃப் 18வது அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்த போது இறங்கிய அமைதி::

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் “அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தை (தமது இல்லத்தில் அமர்ந்து) ஓதிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை ஒரு மேகம் சூழ்ந்துகொண்டு வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் குதிரை மிரள ஆரம்பித்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “குர்ஆன் ஓதியக் காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது” என்று கூறினார்கள். (முஸ்லிம் 1458).

===============================

2- அல்பகரா அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்த போது இறங்கிய வானவர்கள்:

உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) ‘அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். எனது குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே நான் ஓதுவதை நிறுத்திக்கொண்டேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன்பு போலவே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன்.குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது.

நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக் காண முடியவில்லை.

காலை நேரமானபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம், ‘‘இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)” என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன், அல்லாஹ்வின் தூதரே! அவன் அதன் அருகில் இருந்தான். ஆகவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நோக்கியபோது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளியே வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை” என்று சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அது என்ன வென்று நீ அறிவாயா?” என்று கேட்டார்கள். நான், ‘‘இல்லை (தெரியாது)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘உன் குரலைக் கேட்டு நெருங்கிவந்த வானவர்கள்தான் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள்; மக்களைவிட்டு அது மறைந்திருக்காது” என்று கூறினார்கள். (புஹாரி 5018).

===============================

3- அல்முஅவ்விதாத் அத்தியாயங்களை தூங்குவதற்கு முன் ஓதுவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் ஃபலக்’, ‘குல் அஊது பிரப்பிந் நாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவுக்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக்கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக்கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (புஹாரி 5017)

===============================

4- அல்ஃபத்ஹ் 48வது அத்தியாயம்:

அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: “மக்கா வெற்றியின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஊர்தி ஒட்டகத்தில் இருந்தபடி ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்” (புஹாரி 5034).

அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளன்று) பயணித்துக்கொண்டிருந்த தமது ஒட்டகத்தின் மீது இருந்தவாறு ‘அல்ஃபத்ஹ் எனும் (48ஆவது) அத்தியாயத்தை’ அல்லது ‘அந்த அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதியை’ மெல்லிய குரலில் ‘தர்ஜீஉ’ எனும் ஓசை நயத்துடன் ஓதிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். (புஹாரி 5047).

===============================

5- இதஷ் ஷம்சு குவ்விரத், இதஸ் ஸமாஉன் ஃபதரத், இதஸ் ஸமாஉன் ஷக்கத் (81,82,84) ஆகிய அத்தியாயங்கள்:

“எவர் தனது கண்களால் (நேரடியாகப்) பார்ப்பது போன்று மறுமை நாளைப் பார்க்க விரும்புகின்றாரோ அவர் இதஷ் ஷம்சு குவ்விரத், இதஸ் ஸமாஉன் ஃபதரத், இதஸ் ஸமாஉன் ஷக்கத் (81,82,84) ஆகிய அத்தியாயங்களை ஓதட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், திர்மிதி 3333).

===============================

6- காஃப் 50வது அத்தியாயம்:

ஹாரிஸா பின் நுஅமான் (ரலி) அவர்களின் புதல்வியார் உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஓராண்டு அல்லது ஓராண்டும் சில மாதங்களும் ஒரே அடுப்பையே பயன்படுத்திவந்தோம். நான் “காஃப். வல்குர்ஆனில் மஜீத்” எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நாவிலிருந்தே மனனமிட்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி மக்களுக்கு உரையாற்றும் போது அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள். (முஸ்லிம் 1582).

===============================

7- லம் யகுனில்லதீன 98வது அத்தியாயம்:

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் “உங்களுக்கு “லம் யகுனில்லதீன கஃபரூ…” (என்று தொடங்கும் 98ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்” என்று கூறினார்கள். “அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?” என்று உபை (ரலி) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்” என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை (ரலி) அவர்கள் அழுதார்கள்.” (முஸ்லிம் 1464).

===============================

8- அல்கவ்ஸர் 108வது அத்தியாயம்:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், சற்று முன் (குர்ஆனின் 108ஆவது அத்தியாயமான அல்கவ்ஸர் எனும்) ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது என்று கூறிவிட்டு அந்த அத்தியாயத்தை (பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இன்னா அஃத்தைனாகல் கவ்ஸர். ஃபஸல்லி லி ரப்பிக்க வன்ஹர். இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்.

(பொருள்: அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்… (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு அல்கவ்ஸரை நல்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக! நிச்சயமாக உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்.)

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்கவ்ஸர் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று பதிலளித்தோம். அவர்கள்,அது ஒரு (சொர்க்க)நதி. என்னுடைய இறைவன் (மறுமை நாளில்) அதை(த்தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர் தடாகம்; மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தார் (தண்ணீர் அருந்துவதற்காக) அதை நோக்கி வருவார்கள். அதன் குவளைகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்று (அதிகமாகக்) காணப்படும். அப்போது அவர்களில் ஓர் அடியார் (தண்ணீர் அருந்தவிடாமல்) தடுக்கப்படுவார். உடனே நான், இறைவா! அவர் என் சமுதாயத்தாரில் ஒருவர். (அவர் ஏன் தடுக்கப்படுகிறார்?) என்று கேட்பேன். அதற்கு இறைவன், உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறுவான். முஸ்லிம் 670).

===============================

9- அந்நஸ்ர் 110வது அத்தியாயம்:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தொழுகையில்) மிகுதியாக சுப்ஹானல் லாஹி வபி ஹம்திஹி,அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி (அல்லாஹ் மிகத் தூயவன் எனப் புகழ்ந்தவனாய் அவனைத் துதிக்கிறேன். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுகிறேன்) என்று கூறிவந்தார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி, அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி என்று மிகுதியாகக் கூறிவருவதை நான் காண்கிறேன் (இதற்கு என்ன காரணம்?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:

என் சமுதாயத்தார் தொடர்பாக நான் ஓர் அடையாளத்தைக் காண்பேன் என்றும், அதைக் காணும்போது இந்தத் தஸ்பீஹை நான் அதிகமாக ஓத வேண்டும் என்றும் என் இறைவன் எனக்கு அறிவித்திருந்தான். அந்த அடையாளத்தை நான் கண்டுவிட்டேன். (அதுதான் இந்த அத்தியாயமாகும்): அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து, மேலும்,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டங்கூட்டமாக நுழைவதை நீங்கள் காணும்போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக; மேலும், அவனிடமே பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோரலை ஏற்பவனாக இருக்கிறான் (110:1-3). இதில் வெற்றி என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். (முஸ்லிம் 837).

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *