1- “நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 2: 195).
===============================

2- “பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 2: 222).
===============================
3- “நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 3: 159).
===============================
4- “நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 5: 42).
===============================
5- “நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 9: 4).
===============================
6- “எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 61: 4).
===============================
7- (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவன், பெரும் கருணையாளன் ஆவான்.” (ஆலு இம்ரான் 3:31)
===============================
8- அல்லாஹ் ஒரு அடியானிடம் நேசிக்கும் 3 பண்புகள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இறையச்சமுள்ள, போதுமென்ற மனமுடைய, (குழப்பங்களிலிருந்து) ஒதுங்கி வாழ்கின்ற அடியானை நேசிக்கின்றான்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள். (அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள். முஸ்லிம் 5673).
===============================
9- அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான இடம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும். (இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 1190).
===============================
10- அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நற்செயல்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். அது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் சரியே. (இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 1436).
===============================
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூஅம்ர் அஷ் ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதோ! இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) என்னிடம் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அவர்கள், “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்று கூறினார்கள். நான் “பிறகு எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பிறகு தாய் தந்தையருக்கு நன்மை புரிவது” என்றார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்டபோது, “பிறகு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்றார்கள். (முஸ்லிம் 139).
===============================
11- அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நோன்பு, அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான தொழுகை:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். தாவூத் (அலை) அவர்கள் பாதி இரவுவரை உறங்குவார்கள். இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வழிபடுவார்கள். (பிறகு) ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்; ஒரு நாள் நோன்பை விட்டு விடுவார்கள். (முஸ்லிம் 2144).
===============================
12- அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான பெயர்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும். – இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 4320).
===============================
13- அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான வார்த்தைகள்:
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும்.
سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَر
1.சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்). (முஸ்லிம் 4330)
سُبْـحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْـحَانَ اللهِ العَظِيمِ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி; சுப்ஹானல்லாஹில் அழீம்.
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தையை நான் உமக்குத் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (அந்த) வார்த்தையை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினேன். அதற்கு, “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தை
سُبْـحَانَ اللهِ وَبِحَمْدِهِ
“சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி” (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்பதாகும்” என்று கூறினார்கள். முஸ்லிம் 5278
பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்; கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன். (என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் புஹாரி 6682)
===============================
14- அல்லாஹ் நேசிக்கும் இறை நம்பிக்கையாளன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல். ஏனெனில், (“இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே” என்பதைச் சுட்டும்) “லவ்” எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.
(இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 5178).
===============================
15- அல்லாஹ்வ விரும்பும் இரு பண்புகள்:
நபி (ஸல்) அவர்கள் அப்துல் கைஸ் குலத்தாரின் (தலைவர்) அஷஜ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்:
உங்களிடம் அல்லாஹ் நேசிக்கின்ற இரு குணங்கள் உள்ளன. 1. அறிவாற்றல் 2. நிதானம். (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள். முஸ்லிம் 26).
===============================
16- அல்லாஹ் தான் கடமையாக்கியவைகளை விரும்புகிறான்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக்கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்ப மான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன். (இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புஹாரி 6502)
===============================
17- அல்லாஹ் அழகை விரும்புகிறான்:
“அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான்.” ன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் முஸ்லிம் 147).
===============================
18- அல்லாஹ் ஒற்றைப் படையை விரும்புகிறான்:
“அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப் படையையே அவன் விரும்புகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் புஹாரி 6410).
===============================
19- அல்லாஹ் மென்மையை விரும்புகிறான்:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்” என்று கூறினார்கள். (முஸ்லிம் 5055)
===============================
20- அல்லாஹ் சந்திக்க விரும்பும் அடியான்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகின்றாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான்.  இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 6508) ஹதீஸின் ஒரு பகுதி

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *