குளிப்பைக் கடமையாக்கும் விடயங்கள்:
1- ஸ்கலிதமாகுதல்:
“நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 5: 6).
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஆண் உறக்கத்தில் காண்பதைப் பெண் கண்டால் (அவள் என்ன செய்ய வேண்டும்)? என்று கேட்டார். அதற்கு அவர்கள், ஆணுக்கு ஏற்படுவதைப் போன்றே பெண்ணுக்கும் (ஸ்கலிதம்) ஏற்பட்டால் அவள் குளிக்க வேண்டும்” என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 522).
அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அதிகம் மத்யி (வெள்ளை நீர்) வெளியேறுகின்ற ஓர் ஆணாக நான் இருந்தேன். ஆகவே நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள் நீ மதியை (வெள்ளை நீரை)ப் பார்த்தால் உனது மர்மஸ்தானத்தைக் கழுவி விடு! தொழுகைக்கு நீ வுழூ செய்வது போன்று வுழூ செய்! ஆனல் நீ (மர்மஸ்தானத்தின்) துடிப்புடன் விந்தை வெளியேற்றினால் குளித்து விடு!” (நஸாயி 193).
இல்லற உறவின் மூலமோ அல்லது அது தொடர்பான விளையாட்டுக்களின் மூலமோ துடிப்புடன் விந்து வெளியேறும் போது குளிப்புக் கடமையாகி விடும். சுய இன்பத்தின் மூலம் விந்தை வெளியேற்றுவது தடுக்கப்பட்டுள்ளது. தூக்கத்தில் சாதாரணமாக ஸ்கலிதமாகிவிட்டாலே குளிப்புக் கடமையாகி விடும்.
===============================
2- உடலுறவின் மூலம் விந்து வெளியேறாவிட்டாலும் குளிப்புக் கடமையாகி விடும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்குகிடையே அமர்ந்து, பின்னர் அவள்மீது தமது வலிமையைக் காட்டினாலே குளியல் கடமையாகிவிடும்.” (இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புஹாரி 291).
===============================
3- புதிதாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் போது அவர் குளிக்க வேண்டும்:
கைஸ் இப்னு ஆஸிம் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “நான் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்க விரும்பி வந்தேன். இலந்தை இலை கலந்து தண்ணீரில் குளிக்கும் படி எனக்குக் கட்டளையிட்டார்கள்.” (அபூதவுத் 301).
புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் குளிப்பது கடமையா? இல்லையா? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. காரணம் நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொருவருக்கும் குளிக்குமாறு கூறியதாக செய்திகள் இடம் பெறவில்லை. எனவே இதில் சிறந்த கருத்து குளிப்பது விரும்பத்தக்கதாகும் என்பதே.
===============================
4- மாதவிடாய், பிரசவத் தொடக்கு நின்று விட்டால் குளிப்பது கடமையாகும்:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) உடையவராக இருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டபோது, “இது இரத்தக் குழா(யி-ருந்து வெளிவருவதே)யாகும்; மாத விடாயன்று. எனவே, மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு; மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்து விட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் அங்கத் தூய்மை செய்து) தொழுதுகொள்” என்றார்கள். (புஹாரி 320).
தொடர் உதிரப் போக்குள்ள ஒரு பெண் ஒவ்வொரு தொழுகைக்கும் வுழூச் செய்து தொழுது கொள்ள வேண்டும் என்ற சட்டமும் இந்த செய்தியில் உள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி மாதவிடாயி-ருந்து (தூய்மை அடைய) எவ்வாறு குளிக்க வேண்டுமென்பது குறித்துக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள், குளிக்கும் முறையைக் கூறினார்கள். “கஸ்தூரி (நறுமணம்) தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து, அதனால் (உன் மறைவிடத்தைத் துடைத்து) தூய்மைப்படுத்திக்கொள்” என்று பதிலளித்தார்கள்.
அந்தப் பெண்மணி, “அதனால் நான் எவ்வாறு தூய்மைப்படுத்த வேண்டும்?” என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் “அதனால் தூய்மைப்படுத்திக்கொள்” என்று (மட்டும்) சொன்னார்கள். அப்பெண்மணி மீண்டும் “எவ்வாறு (தூய்மைப்படுத்த வேண்டும்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (வெட்கப்பட்ட வாறு) ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்)! தூய்மைப்படுத்திக்கொள் என்று பதிலளித்தார்கள். (நபியவர்கள் என்ன சொல்லவருகி றார்கள் என்பதை நான் புரிந்துகொண்டு) அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து, “இரத்தம் படிந்த இடத்தை அந்த (நறுமணப் பொருள் தடவப்பட்ட) பஞ்சினால் துடைப்பாயாக” என்று கூறினேன். (புஹாரி 314).
===============================
5- மரணித்தவரைக் குளிப்பாட்டுவது: (போரில் கொல்லப்பட்ட ஷஹீதைத் தவிர):
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் புதல்வி இறந்தபோது எங்களிடம் வந்து, “அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து முறை, தேவையெனக் கருதினால் அதற்கு அதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; இறுதியில் ‘கற்பூரத்தை’ அல்லது ‘கற்பூரத்தில் சிறிதளவை’ச் சேர்த்துக் கொள்ளுங் கள்; நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்” எனக் கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடித்ததும் நபியவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தமது கீழாடையைத் தந்து, “இதை அவரது உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள். (புஹாரி 1253).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(இஹ்ராம் கட்டிய) ஒருவர் ‘அரஃபா’ மைதானத்தில் தங்கியிருந்தார். திடீரென அவர் தமது ஊர்தி ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்து(க் கொன்று)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி, இரு ஆடைகளால் சவக்கோடி (கஃபன்) அணிவியுங்கள்; அவரது உடலுக்கு வாசனைத் தூள் போட வேண்டாம்; அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில், (இஹ்ராம் கட்டியிருந்த) அவர் மறுமை நாளில் ‘தல்பியா’ (லப்பைக்…) சொன்னவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள். (புஹாரி 1265).
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “இவர்களை -உஹுத் போரில் இறந்தவர்களை- அவர்களின் இரத்தத் துடனேயே அடக்குங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மேலும், அவர்களை நபி (ஸல்) அவர்கள், குளிப்பாட்டவில்லை. (புஹாரி 1346).
குறிப்பு: புஹாரி மற்றும் முஸ்லிமில் இடம் பெறும் செய்திகள் ரஹ்மத் பதிப்பக தமிழாக்கத்திலிருந்து.
===============================
1- பெருந்துடக்கு ஏற்பட்டதால் ஓர் இறை நம்பிக்கையாளன் அசுத்தமாகிவிடமாட்டான்:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் நான் மதீனாவின் ஒரு சாலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து (நழுவிச்) சென்று மறைந்துகொண்டேன். உடனே நான் சென்று குளித்துவிட்டு வந்தேன்.
அப்போது “(இவ்வளவு நேரம்) எங்கிருந்தாய், அபூஹுரைரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “நான் பெருந்துடக்கு உடையவனாய் இருந்தேன். சுத்தமில்லாமல் தங்கள் அருகே அமர் வதை நான் வெறுத்தேன்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிடமாட்டார்” என்று கூறினார்கள். (புஹாரி 283)
நபித் தோழர்கள் நபியின் மீது எவ்வளவு மரியாதை வைத்திருந்தார்கள்? என்பதற்கு இந்த செய்தியும் நல்லதொரு சான்று.
ஒருவருக்கு குளிப்பபுக் கடமையாகி விடும் போது மார்க்கம் செய்யக் கூடாதென தடுத்த விடயங்களை மாத்திரம் அவர் கடமையான குளிப்பை நிறைவேற்றும் வரை செய்யக்கூடாது. மாறாக முஸ்லிம்களை சந்திப்பது, அவர்களுடன் உட்கார்ந்து பேசுவது போன்ற விடயங்களுக்குத் தடையில்லை. இங்கு சட்ட ரீதியான அசுத்த நிலையை இது குறிக்குமே தவிர யதார்த்தத்தில் ஓர் இறை நம்பிக்கையாளன் அசுத்தமடைய மாட்டான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
பெருந்துடக்கு ஏற்பட்டவர் வெளியே செல்லலாம்; கடை வீதி உள்ளிட்ட இடங்களில் நடக்கலாம். “பெருந்துடக்கு ஏற்பட்டவர் அங்கத் தூய்மை செய்யாவிட்டாலும், குருதி உறிஞ்சி எடுக்கலாம்; தம் நகங்களை வெட்டிக்கொள்ளலாம்; தலைமுடி மழித்துக்கொள்ளலாம்” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புஹாரி)
===============================
2- கடமையான குளிப்பை அவசரமாக நிறைவேற்ற வேண்டுமா?:
முஆவியா பின் சாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அபீகைஸ் (ரஹ்) அவர்கள் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பெருந்துடக்கு விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் எப்படி நடந்துகொண்டர்கள்? உறங்குவதற்கு முன் குளிப்பார்களா? அல்லது குளித்துவிட்டு உறங்குவார்களா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், இரண்டு முறைகளையும் கையாண்டுவந்தார்கள். சில நேரங்களில் குளித்துவிட்டுப் பின்னர் உறங்கினார்கள். சில நேரங்களில் (குளிக்காமல்) அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு உறங்கினார்கள் என்று பதிலளித்தார்கள். நான், (மார்க்க) விஷயங்களில் தாராளத்தை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறினேன். (முஸ்லிம் 517)
===============================
3- வுழூச் செய்து கொள்வது நபி வழியாகும்:
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், எங்களில் ஒருவர் பெருந்துடக்கு உடையவராய் இருக்க,அவர் (குளிக்காமல்) உறங்கலாமா? என்று விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்; அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டுப் பின்னர் உறங்கட்டும். விரும்பும்போது குளித்துக்கொள்ளட்டும் என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 515)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு எற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும்போது உண்ணவோ உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள். (முஸ்லிம் 513).
அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் உறங்குவார்களா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “ஆம்; ஆயினும் (உறங்கும்முன்) அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள்” என்று பதிலளித்தார்கள். (புஹாரி 286).
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், இரவு நேரத்தில் தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டுவிடுவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அங்கத் தூய்மை செய்யுங்கள்; உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள்” என்றார்கள். (புஹாரி 290).
===============================
4- மனைவியுடன் இல்லற உறவில் ஈடுபட்ட ஒருவர் மறுபடியும் உறவில் ஈடுபட விரும்பினால் வுழூச் செய்து கொள்வது நபிய வழியாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தம் இல்லாளிடம் பாலுறவு கொண்டுவிட்டுப் பின்னர் மீண்டும் (உறவுகொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளட்டும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 518).
===============================
5- பல முறை இல்லற உறவில் ஈடுபட்டு விட்டு ஒரு முறை குளித்துக் கொள்வது:
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் (தாம்பத்தியஉறவு கொள்ளச்) சென்றுவிட்டு வந்து ஒரேயொரு தடவை குளிப்பார்கள்.” (முஸ்லிம் 519)
இந்தத் தலைப்பில் உரையை கேட்க விருமபினால் கீழுள்ள தலைப்பின் மீது அழுத்தவும்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *