01- 1000 நன்மைகளைப் பெற்றுத் தரும் அல்லது 1000 பாவங்களை மன்னித்து விடும்:
سُبْحَانَ اللهِ
“ஸுப்ஹானல்லாஹ்”
அல்லாஹ் தூயவன்
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், “உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?” என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், “எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை (“சுப்ஹானல்லாஹ்” என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன” என்று சொன்னார்கள். முஸ்லிம் 5230
02- தராசை நிரப்பும் திக்ர்:
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்துலில்லாஹ்
سُبْحَانَ اللَّهِ
ஸுப்ஹானல்லாஹ்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்)ஒளியாகும். தானதர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர். (இதை அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 381).
03- நபியவர்களுக்கு மிக விருப்பமான திக்ர்:
سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்” (அல்லாஹ் தூயவன்;அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் எதன் மீது உதிக்கிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 5225).
04- சுவர்க்கத்தில் ஒரு பேரித்த மரம்:
سُبْحَانَ اللهِ العَظِيمِ وَبِحَمْدِهِ
“யார் ஸுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹி எனக் கூறுவாரோ அவருக்கு சொர்க்கதில் ஒரு பேரித்த மரம் நட்டப்படும்” என அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள். திர்மிதி 3464). ஷைக் அல்பானி ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் குறிப்பிடுகிறார்கள்.
05- ஐந்து சிறப்புகள்:
لا إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்‘ ‘லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)’ என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர! (என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார. புஹாரி 6403).
06- 4 அடிமைகளை உரிமையிட்ட நன்மை :
لا إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ
‘லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் என்பதை பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள், புஹாரி 6404)
“லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்” என்பதை பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததியினரில் நான்கு பேரை விடுதலை செய்ததைப் போன்றவராவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள், முஸ்லிம் 5223).
07- அல்லாஹ்வுக்கு விருப்பமான 4 வார்த்தைகள்:
سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَر
“அல்லாஹ்வுக்கு விருப்பமான நான்கு வார்த்தைகள் “ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்” நீங்கள் எதைக் கொண்டு ஆரம்பித்தாலும் குற்றமில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸமுரது பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் முஸ்லிம் 57240).
08- சொர்க்கத்தின் பொக்கிஷம்:
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்’ என்று கூறியவாறு (அந்த வார்த்தை) லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (என்பதாகும்)’ என்பதாகும். என்றார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா அல் அஷ்அரிய் (ரலி) அவர்கள். புஹாரி 6384).
09-கடல் நுரை போன்ற சிறு பாவங்களையும் மன்னிக்கும் திக்ர்:
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
‘சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!” (என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி 6405).
10- சிறந்த வார்த்தைகள்:
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “(இறைவனைத் துதிக்கும்) சொற்களில் மிகவும் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ், “தன் வானவர்களுக்காக” அல்லது “தன் அடியார்களுக்காக” “சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி” (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவன் தூயவன் எனத் துதிக்கிறேன்) என்பதையே தேர்ந்தெடுத்துள்ளான்” என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 5277).
11- அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான வார்த்தைகள்:
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தையை நான் உமக்குத் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (அந்த) வார்த்தையை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினேன். அதற்கு, “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தை “சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி” (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்பதாகும்” என்று கூறினார்கள். (முஸ்லிம் 5278).
12- தராசில் கனமான வார்த்ததைகள்:
سُبْـحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْـحَانَ اللهِ العَظِيمِ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி; சுப்ஹானல்லாஹில் அழீம்.
பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்; கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன். (என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் புஹாரி 6682).
13- சிறந்ததை கொண்டு வந்தவர்:
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை “சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” (அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்) என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வருவதில்லை; அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர. (இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 5222).
14- இரண்டு திக்ருகளின் சிறப்புகள்:
لَا إِلَهَ إِلَّا اللهُ
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
…… “ஏழு வானங்களையும, பூமியையும் தராசில் ஒரு தட்டிலும், “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை தராசின் மற்றொரு தட்டிலும் வைக்கப்பட்டால். லா இலாஹ இல்லல்லாஹ் உள்ள தட்டே கணத்தால் தாலும்.
“ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி” என்பதன் மூலமே அல்லாஹ் அனைத்துப் படைப்பினங்களுக்கும் உணவளிக்கின்றான்”. என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், அஹ்மத் 6583).
ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17: 44).
15- மிகைத்துவிடும் வார்த்தைகள்:
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அதத கல்கிஹி வரிழா நஃப்ஸிஹி வஸினத அர்ஷிஹி வமிதாத கலிமாதிஹி.
“அல்லாஹ் தூயவன், அவனுடைய புகழைக் கொண்டும், அவனுடைய படைப்பினங்களின் எண்ணிக்கை அளவிற்கும், அவனுடைய பொருத்தத்தின் அளவிற்கும், அவனது அர்ஷின் எடையளவுக்கும் அவனுடைய வார்த்தைகள் எழுதப்பட்ட மையின் அளவிற்கும் (அவனை நான் துதிக்கின்றேன்).
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், “நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்துகொண்டிருக்கிறாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன் நபி (ஸல்) அவர்கள், “நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)முஸ்லிம் 5272).
16- உள்ளத்தின் தூய்மைக்கு இஸ்திஃபாஃர்:
أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எனது உள்ளத்தின் மீதும் திரையிடப்படுகிறது. நான் ஒவ்வொரு நாளும் நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்.” (இதை அஃகர்ரு பின் யசார் அல்முஸனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 5234).
17- பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படும் திக்ர்:
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ اللَّهُمَّ اغْفِرْ لِي
(லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர். அல்ஹம்து லில்லாஹி, வஸுப்ஹானல்லாஹி, வலா இலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர், வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி, அல்லாஹும்மஃ ஃபிர்லீ.)
‘யார் இரவில் எதிர்பாராத விதமாக விழித்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர் இல்லை; ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா! என்னை மன்னித்துவிடு என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகைஒப்புக் கொள்ளப்படும். (என உபதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார். புஹாரி 1154).
இறுதியாக!!!
வெற்றி பெற்றவர்கள் யார்?:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற்கொண்ட போது “ஜும்தான்” எனப்படும் மலையொன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது, “செல்லுங்கள்: இது “ஜும்தான்” மலை ஆகும். தனித்துவிட்டவர்கள் வெற்றி பெற்றனர்” என்று சொன்னார்கள். மக்கள், “தனித்துவிட்டவர்கள் என்போர் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்“முஸ்லிம் 5197).