1- மறைவில் அல்லாஹ்வை அஞ்சுகிறானா? என்ற பரிசோதனை ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனுக்கும் உண்டு:
“ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறிவதற்க்காகத்தான்” (அல்குர்ஆன் 5: 94).
யாவற்றையும் அறிந்த அல்லாஹ்வுக்கு இவ்வாறான சோதனைகள் மூலம் பரிசோதித்துத்தான் அறிய வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது, ஆனால் அடியார்களுக்கு அவன் கூலி வழங்குவது அவர்களது செயல்களைக் கொண்டுதான் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
===============================
2- பயபக்தியாளர்கள் யார்?:
“அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள்; இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்.” (அல்குர்ஆன் 21: 49).
===============================
3- நற்போதனைகள் பெரிதும் பயனளிப்பது:
“எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர்.” (அல்குர்ஆன் 35: 18)
“நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.” (அல்குர்ஆன் 36: 11)
===============================
4- மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் மறைவில் இறைவனை அஞ்சுபவர்களுக்கே;
“நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.” (அல்குர்ஆன் 67: 12).
“அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.” (அல்குர்ஆன் 36: 11)
===============================
5- சுவர்க்கம் வாக்களிக்கப்பட்டவர்கள்:
“எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).” (அல்குர்ஆன் 50; 33).
===============================
6- நிழலே இல்லாத மறுமையில் நிழல் பெறுபவர்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு பேருக்கு அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்).” இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (புஹாரி 6479).
===============================
7- தொழுகையின் இறுதியில் ஸலாம் கொடுக்க முன் நபியவர்கள் கேட்ட நீண்ட ஒரு பிரார்த்தனையில் இவ்வாறும் பிரார்த்தித்தார்கள்:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ
“அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக ஹ(خ)ஷ்யதக ஃபில் கஃய்பி வஷ்ஷஹாதா”
“யா அல்லாஹ்! மறைவிலும், வெளிப்படையிலும் உன்னுடைய பயத்தை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்” (அந்நஸாஈ 1305).
“ஒருவனது இறுதி முடிவு நல்லதாக அமைவதற்கும், கெட்டதாக அமைவதற்கும் பெரிதும் காரணமாக அமைவது அவனது தனிப்பட்ட வாழ்க்கையே” என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே தனிமையில் அதிகம் அல்லாஹ்வை அஞ்சுவோம். மறைவில் அவனை அஞ்சி வாழ்வதற்காக அவனிடமே பிரார்த்திப்போம்.
===============================
இந்தத் தலைப்பில் உரையை கேட்க விருமபினால் கீழுள்ள தலைப்பின் மீது அழுத்தவும்