உயரிய நற்குணங்களுடன் வாழ்ந்து நற்குணங்களை உலகிற்கு போதித்த மா மனிதர் நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள்!:
அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்குணங்களை முழுமைபடுத்தவே அனுப்பப்பட்டார்கள். நற்குணங்களின் முழு வடிவமாகத் திகழ்ந்த அவர்கள், மனித நேயத்தையும்,
பண்பாட்டையும், உயரிய ஒழுக் விழுமியங்களையுமே உலகிற்கு போதித்தார்கள். அவர்கள் போதனைகளுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் தான் போதித்தவைகளை முதிலில் செயல்படுத்துபவர்களாக அவர்களே திகழ்ந்தார்கள். இதற்கு சான்றாக அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுமாறு தூதருக்கு பணிக்கின்றான்:
(நபியே! இன்னும்) ‘மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்.’ என்றும் கூறுவீராக. ‘அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்’ (என்றும் நீர் கூறுவீராக). (39: 11,12).
அல்லாஹ்வை அஞ்சுபவர்களில், பயப்படுபவர்களில் முதன்மையானவராகவே அல்லாஹ்வின் தூதர் வாழ்ந்தார்கள். அன்னாரது போதனைகளுக்கும், வாழ்க்கைக்கும் மத்தியில் எந்த ஒரு முரண்பாடும் இருக்கவில்லை.
மனித குல மேம்பாட்டிற்கும், உயர்விற்கும் அவர்கள் வழங்கிய உயரிய போதனைகளிலிருந்து சில துளிகளை மாத்திரம் இங்கு தருகின்றோம்.
1- அல்லாஹ்வின் முன்னிலையில் நீ சிறந்தவனாக மாறி விடு!:
‘நிச்சயமாக உங்களில் மிகச் சிறந்தவர் நற்குணமுடையவரே’ என நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், (புஹாரி).
===============================
2- நன்மைகளின் முழு வடிவமாக உன்னை மாற்றிக்கொள்:
நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அறிவிக்கின்றார்: ‘நான் அல்லாஹ்வின் தூதரிடம் எது நன்மை? எது தீமை? என கேட்டேன்.அதற்கு அன்னார்: நன்மை என்பது நற்குணங்களாகும். தீமை என்பது உனது உள்ளத்தை உறுத்துவதும், அச்செயலை மக்கள் பார்த்துவிடக்கூடாது என்று வெறுக்கின்றாயே அதுவாகும்’ என பதிலளித்தார்கள். (முஸ்லிம்).
===============================
3- உனது நன்மையின் தட்டை கனமாக்க மிக எளிதான வழி?:
‘நற்குணத்தை விட (நன்மையின்) தராசில் கனமானது வேறு எதுவுமில்லை. உயரிய நற்குணங்களை உடையவர் அவரது நற்குணங்களின் மூலம் நோன்பாளியின், தொழுகையாளியின் அந்தஸ்தை அடைந்துவிடுகின்றார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி), திர்மிதி).
===============================
4- உபரியான வணக்கங்களில் ஈடுபட்டவரின் அந்தஸ்தை நீ பெற வேண்டுமா?:
‘நிச்சயமாக ஒரு இறை நம்பிக்கையாளன் தனது நற்குணங்களின் மூலம் பகல் முழுவதும் நோன்பு நோற்ற, இரவு முழுவதும் நின்று வணங்கியவரின் அந்தஸ்தை பெறுகிறார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், அபூதாவுத்).
===============================
5- நாளை மறுமையில் எமது உயிரை விட மேலான அல்லாஹ்வின் தூதருடன் நீ இருக்க விரும்புகின்றாயா?:
‘உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவர், மறுமை நாளில் எனக்கு மிகவும் நெறுக்கமானவர் உயர்ந்த நற்பண்புகளை உடையவரே’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள், திர்மிதி).
===============================
6- இன்றிலிருந்து ஒரு உண்மை முஸ்லிமாக உன்னை மாற்றிக்கொள்:
‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் பிற மனிதர்கள் ஈடேற்றம் பெற்றிருக்கின்றார்களோ அவரே உண்மையான முஸ்லிமாவார். பிறருடைய செல்வங்களுக்கும், இரத்தத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பிறர் அச்சமற்று வாழ்பவரே உண்மையான இறை நம்பிக்கையாளராவார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நஸாஈ).
===============================
7- நீ ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளனாக வேண்டுமா?:
‘தான் விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பாத வரையில் உங்களில் ஒருவர் உண்மையான இறை விசுவாசியாக முடியாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி).
===============================
8- அல்லாஹ் விரும்பும் மென்மையை அனைத்திலும் தெரிவு செய்:
‘நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன், அவன் அனைத்து காரியங்களிலும் மென்மையே விரும்புகின்றான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி, முஸ்லிம்).
===============================
9- கோபம் ஷைத்தானின் சூழ்ச்சியில் நின்றும் உள்ளது என்பதை அறிந்து விழிப்புடன் செயல்படு:
‘ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என கேட்டுக் கொண்ட போது, கோபம் கொள்ளாதீர்! என போதனை செய்தார்கள். திரும்ப திரும்ப அவர் உபதேசம் செய்யுமாறு கேட்டுக் கொண்ட போது கோபம் கொள்ளாதீர் என்பதையே போதனை செய்து கொண்டிருந்தார்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி).
===============================
10- வெட்கம் என்ற உயர்ந்த பண்பை உனது அணிகலனாக்கு:
‘வெட்கம் நன்மையைத் தவிர வேறெதையும் கொண்டு வர மாட்டாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி), புஹாரி, முஸ்லிம்).
‘நம்பிக்கைக்கு (ஈமானுக்கு) எழுபது கிளைகள் உள்ளன: அதில் மிக உயர்ந்தது லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை) என்பதாகும், அதில் மிக தாழ்ந்தது பாதையில் மக்களுக்குத் தொல்லை தறுபவைகளை அகற்றுவதாகும், வெட்கமும் நம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி).
===============================
11- பிற மக்களுடன் எளிதாக நடந்து கொள்:
‘மக்களுடன் எளிதாக நடந்துகொள்ளுங்கள், மக்களுக்கு சிறமப்படுத்தாதீர்கள். மக்களுக்கு நன்மாராயங் கூறுங்கள், அவர்களை வெறுண்டோடச் செய்யாதீர்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி, முஸ்லிம்).
===============================
12- பேசும் ஒவ்வொரு நல்ல வார்த்தைக்கும் தர்மத்தின் கூலி இருக்கின்றது என்பதை மறந்து விடாதே:
‘நீங்கள் பேசும் நல்ல வார்த்தைகளும் தர்மமாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முத்தஃபகுன் அலைஹி).
===============================
13- இஸ்லாத்தின் மிகச் சிறந்த செயலுக்கு நீ சொந்தக்காரனாகி விடு:
‘ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து இஸ்லாத்தில் மிகச் சிறந்தது எது? என்று கேட்டபோது வறியோருக்கு உணவளிப்பதும், அறிந்தவர்கள், அறியாதவர்களுக்கு ஸலாம் சொல்வது (அமைதியை பிரார்த்திப்பது)மாகும்’ என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், புஹாரி).
===============================
14- அன்பை உனது முகவரியாக்கு!:
‘மனிதர்களுக்கு அன்பு காடடாதவருக்கு அல்லாஹ் அன்பு காட்டமாட்டான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம்).
‘எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நீஙகள் நம்பிக்கை கொள்ளாத வரை சுவர்கம் நுழைய முடியாது, நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டீர்கள், உங்கள் மத்தியில் நேசம் உண்டகிவிடுகின்ற ஒரு செயலை அறிவித்து தரட்டுமா? உங்களுக்கு மத்தியில் அதிகம் அதிகம் ஸலாம் சொல்லுங்கள் (நேசம் உண்டாகி விடும்)’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், முஸ்லிம்).
‘இரு முஸ்லிம்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் (அன்புடன்) கை குளுக்கிக் கொள்வார்களானால், அவர்கள் இருவரும் பிரிந்து செல்வதற்கு முன் அந்த இருவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: பராஃ (ரலி) அவர்கள், அபூதாவூத்).
===============================
15- மலர்ந்த முகத்திற்கும் அல்லாஹ்விடம் நன்மை இருக்கின்றது என்பதை மறந்து விடாதே:
‘உங்களது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பது உற்பட எந்த ஒரு நன்மையான காரியத்தையும் அற்பமாகக் கருதாதீர்கள்’; என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), முஸ்லிம்).
===============================
16- இது நமது சமூகத்தின் முகவரியாகும்:
‘சிறியவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவரும் நம்மை சார்ந்தவர்களாக மாட்டார்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ரிப்னு ஷுஐப் (ரலி), அபூதாவூத்).
===============================
17- இது உனக்கு பொறுத்தமல்ல:
‘ஒரு மனிதன் தன் சகோதரனுடன் மூன்று இரவுகளை விட அதிகமாக உறவைத் துண்டித்துக் கொள்வதும், இருவரும் பாதையில் ஒருவரையொருவர் சந்தித்தால் முகம் திருப்பிக் கொள்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல! எவர் ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்கிறாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவர் ஆவார்.’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ அய்யூபுல் அன்ஸாரி (ரலி) அவர்கள், (ஆதாரம்: புஹாரி,முஸ்லிம்).
===============================
18- பெற்றோரை வெறுப்பவனே! ஒரு நொடி நின்று இதை படித்து விட்டுச் செல்!
‘நன்மைகளில் மிக உயர்ந்தது தனது தந்தையின் நண்பர்களை நேசிப்பதாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள், முஸ்லிம்).
===============================
19- மூக்கை நுழைத்து வீண் பிரச்சினையை விளைக்கு வாங்காதே:
‘தனக்கு தொடர்பில்லாதவைகளை விட்டு விழகி இருப்பது, இஸ்லாத்தில் மிக அழகிய செயல்களில் நின்றும் உள்ளதாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், திர்மிதி).
===============================
20- அல்லாஹ்வின் அருள் யாருக்கு?:
‘பொருளை விற்கும்போதும், வாங்கும்போதும், கடனை அறவிடும்போதும் சிறந்த முறையில் நடந்துகொண்டவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), புஹாரி).
===============================
21- கடன் கொடுத்தவர்களே! உங்களுக்கு இப்படியும் ஒரு நற்பாக்கியமா? :
‘மறுமை நாளில் தன்னை நெறுக்கடிகளிலிருந்து அல்லாஹ் பாதுகாக்க வேண்டுமென விரும்புபவர், (தன்னிடம் கடன் பெற்ற) ஏழைக்கு கால அவகாசம் கொடுக்கட்டும், அல்லது கடனை தள்ளுபடி செய்வதன் மூலம் அவனது சுமையை அகற்றிவிடட்டும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), முஸ்லிம்).
===============================
22- கடன் வாங்கியவர்களே! உங்களுக்கும் இருக்கின்றது நற்பாக்கியம்! :
‘கடனை சிறந்த முறையில் திருப்பி செலுத்துபவரே உங்களில் மிகச் சிறந்தவர்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், முத்தபகுன் அலைஹி).
===============================
23- மக்களுக்கு தொல்லை கொடுத்ததை அகற்றியவருக்கு கிடைத்த உயர்வை பார்த்தீர்களா?:
‘பாதையில் முஸ்லிமகளுக்கு தொல்லை கொடுத்த ஒரு மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றிய ஒரு மனிதர் சுவர்க்கத்தில் உலா வருவதை நான் பார்த்தேன்’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), முஸ்லிம்).
===============================
24- எவைகளெல்லாம் உங்களுக்கு தர்மத்தின் நன்மையை பெற்றுத் தருகின்றன:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரின் வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரின் வாகனத்தின் மீது அவரின் மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்’. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி).
===============================
25- அல்லாஹ்விடம் உங்களுக்கு எது உயர்வு? :
‘தர்மம் கொடுப்பதன் மூலம் செல்வத்தில் எந்த ஒரு குறைவும் ஏற்படமாட்டாது, தனக்கு செய்த தவறுக்காக பிறரை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் அவனது அந்தஸ்தை உயர்த்துகின்றான், அல்லாஹ்விற்காக பணிவுடன் நடந்து கொள்பவரை அல்லாஹ் உயர்த்துகின்றான்’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், முஸ்லிம்).
===============================
26- அநாதைகளுக்கு அன்பு செலுத்துமாறு போதித்த அநாதையாக வளர்ந்த மாமனிதர்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள், புஹாரி).
===============================
27- விதவைகளைக் காத்த உத்தமத் தலைவர்:
‘விதவைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் உழைப்பவர் இரவு முழுவதும் நின்று வணங்கி, பகல் முழுவதும் நோன்பு நோற்றவரின் அந்தஸ்துக்குரியவரைப் போன்றாவார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி, முஸ்லிம்).
===============================
28- பிறர் குறையை மறையுங்கள்:
‘எவரொருவர் மற்றொருவரின் குறைகளை உலகில் மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறைகளை நாளை மறுமையில் மறைத்துவிடுவார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்).
===============================
29- மனைவியிடம் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்:
‘ஈமானில் முழுமைபெற்ற முஃமின் உயர்ந்த நற்குணங்களை உடையவரே. உங்களில் சிறந்தவர் தனது மனைவிக்கு சிறந்தவரே’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், திர்மிதி).
===============================
30- இல்லறம் சிறக்க அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த வழிகளுல் இதுவும் ஒன்று:
‘நம்பிக்கை கொண்ட (ஒரு கணவர்) நம்பிக்கை கொண்ட (தனது மனைவியை) வெறுத்தொதுக்க வேண்டாம். அவளின் ஒரு தீயகுணம் அதிருப்தியளித்தாலும், அவளிடமிருக்கும் மற்றொரு நற்குணத்தின் மூலம் திருப்தியடையுங்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்).
===============================
31- எது சுய மரியாதை? :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள், புஹாரி).
===============================
32- உழைப்பின் உயர்வு:
‘உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி) அவர்கள், புஹாரி).
===============================
33- உங்கள் உறவினர்களிலிருந்தே ஆரம்பியுங்கள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.’ (அறிவிப்பர்: ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள், புஹாரி).
===============================
34- உறவைப் பேணாதவனுக்கு சுவர்க்கம் நுழைய முடியாது:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்’. (அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி) அவர்கள், புஹாரி).
===============================
35- உங்களுக்கு உணவில் அபிவிருதிதி வேண்டுமா?
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீடிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி).
===============================
36- அல்லாஹ்வின் உறவு உங்களை விட்டு துண்டிக்கப்பட்டு விடும்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்’ (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி).
===============================
37- உண்மையில் உறவைப் பேணுபவன் யார்?:
‘பகரம் செய்யும் வகையில் உறவைப் பேணக்கூடியவன் முழுமையாக உறவைப் பேணுபவன் அல்லன். பிற உறவினர்கள் தொடர்பறுத்துக் கொண்டாலும், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடைய உரிமையை நிறைவேற்றுபவனே முழுமையாக உறவைப் பேணுபவன் ஆவான்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், ஆதராம்: முஸ்லிம்).
===============================
38- உங்களுக்கு அண்டை வீட்டார்கள் உள்ளார்களா? அவர்களுடன் நீங்கள் எப்படி?:
‘அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூ ஷுரைஹ் (ரலி) அவர்கள், புஹாரி).
===============================
39- அடிமைகளுடன், பணியாளர்களுடன் இபபடியும் நடக்கச் சொன்ன உத்தம புருஷர்:
‘உங்களில் ஒருவருக்கு உங்களின் பணியாளன் உணவைக் கொண்டு வந்து பரிமாறும்போது அவரையும் உங்களுடன் அமரவைத்துக்கொள்ள சிறமமென்றால் ஓரிரு கவல உணவயையாவது கொடுங்கள். உங்களுக்க தேவையான உணவை தயாரிப்பதில் அவரே சிறமமெடுத்துக் கொண்டவர்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) புஹாரி).
===============================
40- அடிமைகள் உங்கள் சகோதரர்களே என்று சொன்ன கருணையின் உறைவிடம்:
‘நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்’ என அபூதர் கூறினார்’ (புஹரி).
===============================
41- உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஒப்பற்ற தலைவர்:
அபூமஸ்ஊத் அல்அன்சாரீ அல்பத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் அடிமையைச் சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னால் யாரோ, ‘நினைவிருக்கட்டும்இ,அபூமஸ்ஊத்!” என்று கூறியதைக் கேட்டேன். அப்போது நான் கோபத்தில் இருந்ததால், அந்தக் குரலை (நன்கு) விளங்கிக்கொள்ளவில்லை. அவர் என்னை நெருங்கி வந்தபோது (பார்த்தால்) அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது அவர்கள் ‘நினைவிருக்கட்டும். அபூமஸ்ஊத்! நினைவிருக்கட்டும். அபூ மஸ்ஊத்!” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். உடனே நான் என் கையிலிருந்த சாட்டையைக் கீழே போட்டேன். அப்போது அவர்கள் ‘நினைவிருக்கட்டும். அபூமஸ்ஊத்! உமக்கு இந்த அடிமையின் மீதிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது” என்று சொன்னார்கள். நான், ‘இதன் பின்னர் ஒருபோதும் நான் எந்த அடிமை யையும் அடிக்கமாட்டேன்” என (உறுதி) மொழிந்தேன். (முஸ்லிம்).
===============================
42- மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென பதவிகளையும், பொறுப்புகளையும் விரும்புபவர்களே! உங்களைத்தான்:
அல்லாஹ்வின் தூதரின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘இந்த எனது வீட்டிலிருந்து அல்லாஹ்வின் தூதர் பின் வருமாறு பிரார்த்தித்தார்கள்: யா அல்லாஹ்! என்னுடைய சமூகத்தில் பொறுப்புகளை ஏற்று மக்களுக்கு சிறமங்களை கொடுப்பவர்களை நீ சிறமப்படுத்துவாயாக! பொறுப்புகளை ஏற்று மக்களுடன் மென்மையாக நடந்து கொள்பவர்களுடன் நீயும் மென்மையாக நடந்துகொள்வாயாக!’ (முஸ்லிம்).
‘உண்மையில் தனது ஆட்சி பொறுப்பிலும், குடும்ப பொறுப்பிலும், தான் ஏற்றுக் கொண்ட ஏனைய பொறுப்புகளிலும் நீதி செலுத்தியவர் நாளை மறுமையில் அல்லாஹ்வின் சந்திதானத்தில் ஒளியினாலான மேடைகளில் வீற்றிருப்பர்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள், முஸ்லிம்).
===============================
43- மோசடி செய்பவர்களுக்கு இழிவு காத்திருக்கின்றது என்பதில் மிக எச்சரிக்கையாக இருங்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் ஒரு (அடையாளக்) கொடி இருக்கும். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).
‘பிறருக்கு அநியாயம் செய்வதை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அநியாயங்கள் நாளை மறுமையில் (உங்களுக்கெதிரான) மிகப் பெரிய இருளாக வரும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம்).
===============================
இதை படிக்கும் உங்களுக்கு ஒரு மனம் திறந்த அழைப்பு! :
ஒட்டு மொத்த உலகிற்கே அன்பையும், நேசத்தையும் போதிக்க வந்த உத்தமத் தூதரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாகும். அதில் தான் மனித வாழ்வுக்குரிய சுபீட்சமும், ஈடேற்றமும் தங்கியிருக்கின்றது. இங்கு அவரின் போதனைகளில் ஒரு துளிகூட முன்வைக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். எனவே அந்த தூய வாழ்வை படிப்பதற்கு முன் வாருங்கள். அதுதான் நமக்கு ஈருலகிலும் நிலையான வெற்றியை பெற்றுத்தரும். நடு நிலையுடன் அந்த மாமனிதரின் தூய வாழ்க்கை வரலாற்றை படித்து அவரை ஏற்று பின்பற்றுங்கள்.
ஏனெனில்அவர் ஒட்டு மொத்த உலகிற்கும்
கடவுளிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவார்.