ரஜப் மாதம் என்பது சந்திர மாத கணக்கின் படி ஏழாவது மாதமாகும்.
1- ரஜப் புனிதமான நான்கு மாதங்களில் ஒரு மாதமாகும்
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை, இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ்; பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 9:36).
“விடைபெறும் ஹஜ்’ஜில் உரை யாற்றியபோது) நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: “அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போர் புரிவது விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்ற வையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹிஜ்ஜா, முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ் ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து “ரஜப்’ மாதம் ஆகும்.” இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.’ (புஹாரி 4662).
நான்கு மாதங்கள் புனிதமானவை என்றும், அவைகள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் என்று மேற்கூறப்பட்ட ஹதீஸிலிருந்து தெளிவாகிறது. எனவே இம்மாதங்கள் போர் புரிவதற்கு தடை செய்யப்பட்ட மாதங்களாகும். இம்மாதங்கள் புனிதமானவைகள் என்று கூறி அல்லாஹ்வும், ரஸுலும் காட்டித்தராத வணக்க வழிபாடுகளில் ஈடுபடக் கூடாது.
===========================================
2- புனிதமான மாதங்களில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்று வந்துள்ள ஹதீஸின் தரம்:
நபி (ஸல்) அவர்கள், முஜீபதுல் பாஹிலிய்யா (ரலி) அவர்களிடம்: புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள், புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள், புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள் என்று தனது மூன்று விரல்களையும் இணைத்து பிரித்துக்காட்டினார்கள்’ (அபூதாவுத் 2428). நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி. இந்த ஹதீஸை அஷ்ஷைக் நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் பலவீனமானது எனக் குறிபிபிடுகின்றார்கள். எனவே இதை ஆதாரத்துக்கு எடுக்க முடியாது.
===========================================
3- ரஜப் முழர் என்பதன் விளக்கம் என்ன?:
அறியாமை காலம் தொட்டே இந்த மாதம் புனிதமானதாக கருதப்பட்டு வந்தது. அவர்களிடம் இம்மாதத்தில் போர் புரிவது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. இந்த மாதத்துக்கு 14 பெயர்களை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான பல பெயர்கள் வருவதற்குரிய காரணமும் அவர்கள் அந்த மாதத்தை அதிகம் புனிதப் படுத்தியதனலாகும். நாம் மேலே குறிப்பிட்ட ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸில் நபியவர்கள் ‘ரஜப் முழர்’ என குறிப்பிட்டு விட்டு அது ஜுமாதா, ஷஃபானுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் என குறிப்பிட்டார்கள். காரணம், முழர், ரபீஆ ஆகிய கோத்திரங்களுக்கு மத்தியில் ரஜப் விடயத்தில் கருத்து வேறுபாடு நிலவியது. முழர் கோத்திரத்தினர் இப்போது அனைவருக்கும் அறிமுகமாக உள்ள ஜமாதுஸ்ஸானி, ஷஃபானுக்கு மத்தியிலுள்ள மாதத்தை தான் ரஜப் என்றனர். ஆனால் ரபீஆ கோத்திரத்தினரோ ரமழானை ரஜப் என்றனர். அதனால் தான் நபியவர்கள் ரஜபை சொல்லும் போது முழரோடு இணைத்து சொன்னார்கள். இன்னும் முழர் கோத்திரத்தினர் ஏனைய அனைத்து கோத்திரங்களை விட ரஜபை புனிதப்படுத்துபவர்களாகவும் இருந்தனர் என்பது ஒரு காரணமாகும்.
இன்னும் அறியாமை காலத்தில் ரஜப் மாதம் வந்து விட்டால் அநியாயக்காரர்களுக்கு எதிராக பிரார்த்திக்கக்கூடியவர்களாக இருந்தனர், அந்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை பரவலாக அவர்களிடம் காணப்பட்டது என இப்னு அபித்துன்யா தனது நூலில் குறிப்பிடுகிறார்.
===========================================
4- ரஜப் மாதத்தில் உம்ரா செய்யலாமா?:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை ‘உம்ரா’க்கள் செய்துள்ளார்கள்?” என உர்வா (ரஹ்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான்கு; அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்” என்றார்கள்.
நாங்கள் அவர்களின் இக்கூற்றை மறுக்க விரும்பவில்லை. இதற்கிடையே, அறையில் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பல் துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா (ரஹ்) அவர்கள், “அன்னையே! இறை நம்பிக்கையாளர்களின் தாயே! அபூஅப்திர் ரஹ்மான் (இப்னு உமர்-ரலி) அவர்கள் கூறுவதைச் செவியுற்றீர்களா?’ எனக் கேட்டார். “அவர் என்ன கூறுகிறார்?” என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டதும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான்கு ‘உம்ரா’க்கள் செய்துள்ளார்கள்; அவற்றில் ஒன்று, ரஜப் மாதத்தில் நடந்தது என்று கூறுகிறார்” என்றார்.
ஆயிஷா (ரலி) அவர்கள், “அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கிறார்; (இப்போது மறந்துவிட்டார் போலும்!) நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்ததே இல்லை” எனக் கூறினார்கள்.’ (புஹாரி 1775).
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் (நபி (ஸல்) அவர்களின் உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை” என்றார்கள். (புஹாரி 1777).
ஒரு சிலர் ரஜப் மாத்தில் உம்ரா செய்வது சிறப்பிற்குரிய காரியம் என எண்ணிக்கொண்டிருக்கின்றனர். மேற்குறிப்பிட்ட ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றிலிருந்து நபியவர்கள் ரஜபில் உம்ரா செய்யவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது.
===========================================
5- அதீரது ரஜப் என்றால் என்ன?:
அதீரது ரஜப் என்பதற்கு அறிஞர்கள் பல விளக்கங்கள் அளித்துள்ளனர்:
‘அபூ உபைதா குறிப்பிடும் போது, நிச்சயமாக ‘அதீரத்’ என்பது ரஜபுடன் தொடர்புடையதாகும். நெறுக்கத்தை பெறுவதற்காக ரஜப் மாதத்தில் அறுக்கப்படும் ஒரு குர்பானியாகும். அறியாமை காலத்தில் அரபுக்கள் ஏதாவது ஒரு தேவை நிறைவேற வேண்டும் என்பதற்காக நேர்ச்சை செய்து அது நிறைவேறிவிடுமானால் நான் இவ்வாறு இவ்வாறு ரஜப் மாதத்தில் ஒரு ஆட்டை அறுத்து நேர்ச்சையை நிறைவேற்றுவேன் என்று கூறுவது தான் அதீரத் என்கிறார்.’ (கரீபுல் ஹதீஸ் 1: 195, 196).
அபூதாவுத் குறிப்பிடும் போது: ‘அதீரத்’ என்பது ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும்.
அல்கத்தாபி குறிப்பிடும் போது: ‘அல் அதீதர்’ என்பது, ஹதீஸிலிருந்து விளங்குவது அது ரஜப் மாதம் பலியிடப்படும் ஒரு ஆடாகும்.
இதில் சரியான கருத்து: ‘அதீரத்’ என்பது அறியாமைக் கால மக்கள் எந்த வித நேர்ச்சையுமின்றி நிறைவேற்றும் ஒரு குர்பானியாகும். அழ்ஹாவில் நிறைவேற்றும் உழ்ஹியாவை போன்று இவர்களிடம் இந்த நடை முறை இருந்து வந்தது. அவர்களில் நேர்ச்சைவைத்து அதை நிறைவேற்றுபவர்களும் இருந்தனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இனி,) தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆடு மற்றும் ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டி ‘ஃபரஉ’ ஆகும்; அதை (அறியாமைக் கால) மக்கள் தம் தெய்வச் சிலைகளுக்காகப் பயிட்டு வந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாட்களி)ல் பலியிடப்படும் பிராணி ‘அத்தீரா’ ஆகும். (ஆதாரம்: புஹாரி – 5473)
அல்ஹஸன் அவர்கள் கூறினார்கள் : “இஸ்லாத்தில் அதீரா இல்லை நிச்சயமாக அதீரா என்பது ஜாஹிலிய்யா காலத்தில் இருந்தது. அவர்களில் ஒருவர் ரஜபில் நோன்பு நோற்று அதன் முதல் பத்தில் அறுத்துப்பலியிடுவார்கள்.” (லதாஇபுல் மஆரிப் இப்னு ரஜப் – பக்கம் : 118)
இப்னு ரஜப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : “ஒரு விஷேட தினத்திலோ அல்லது பெருநாள் தினத்திலோ இணிப்புப்பண்டங்களை சாப்பிடுவதைப் போன்று அருப்புப் பிராணியை ரஜபில் காட்சிப்படுத்துவார்கள் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டது ரஜபை பெருநாள் தினமாக எடுத்துக்கொள்வதை அவர்கள் வெறுத்தார்கள்.” (லதாஇபுல் மஆரிப்இப்னு ரஜப் – பக்கம் : 118)
===========================================
6- அர்-ரஆஇப் தொழுகை (صلاة الرَّغائب):
இது வெறுக்கத்தக்க ஒரு பித்அத்தான தொழுகையாகும். இமாம் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : “வெறுக்கத்தக்க விடயங்கள் நிரம்பிய அருவருப்பான மிகவும் வெறுக்கத்தக்க பித்அத்தான தொழுகையாகும். எனவேஅதனை விடுவதும் அதனை புறக்கணிப்பதும் அவசியமாவதுபோல் அதனை செய்பவர்களையும் வெறுக்கவேண்டும்.” (பதாவா அல்இமாம் அந்நவவி – பக்கம் 63)
இப்னு தைமியா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : (அர்-ரஆஇப் தொழுகையைப் பொருத்தவதை அது எந்தவித அடிப்படையும் கிடையாது. அதுமாத்திரமின்றி அது ஒரு பித்அத் ஆகும். அத்தொழுகையை தனியாகவோகூட்டாகவோ தொழுவதற்கு விரும்பத்தக்கதல்ல) (மஜ்மூஉல் பதாவா 23-132)
===========================================
7- ரஜப் மாதத்தை நோன்பைக்கொண்டோ அல்லது இஃதிகாப் இருப்பதைக் கொண்டோ சிறப்பிப்பது.
இப்னு அபீ ஷைபா தனது முஸன்னப் எனும் கிரந்தத்தில் குறிப்பிடும் போது, ‘ரஜப் மாதத்தில் உமர் (ரலி) அவர்கள், மனிதர்கள் தங்கள் கைகளை உணவுத் தட்டில் வைக்கும் வரை அடிப்பவர்களாக இருந்தார்கள். உண்ணுங்கள் நிச்சயமாக இது அறியாமை காலத்து மக்களால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு மாதமாகும்.’ (முஸன்னப் 3: 203). ஷைகு அல்பானி இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது என குறிப்பிடுகிறார் பார்க்க: (இர்வாஉல் அலீல் 4:113).
சில மனிதர்கள் ரஜப் மாதத்தை நோன்பைக் கொண்டும் அல்லது இஃதிகாபைக் கொண்டும் சிறப்பிப்பது சில பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையிலேயாகும்.
இப்னு ரஜப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ரஜப் நோன்பைப் பொருத்தவரை நபியவர்கள் மூலமகவோ அல்லது ஸஹாபாக்கள் மூலமாகவோ ரஜப் நோன்பின் சிறப்பு என்று குறிப்பிட்டு வரக்கூடிய எவைகளும் ஆதாரபூர்வமற்றதாகும்.” ( லதாஇபுல் மஆரிப் – பக்கம்118)
இப்னு தைமியா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ரஜப் மற்றும் ஷஃபான் மாதங்களைநோன்பைக் கொண்டோ அல்லது இஃதிகாபைக்கொண்டோ சிறப்பிப்பது சம்பந்தமாக நபியவர்களைத்தொட்டோ அல்லது ஸஹாபாக்களைத்தொட்டோ அல்லது இமாம்களைத் தொட்டோ ஒருவிடயமும் வரவில்லை.” (மஜ்மூஉல் பதாவா : 25-290)
அல்ஹாபில் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ரஜப் மாதத்தின் சிறப்பு சம்பந்தமாகவோ அல்லது அதிலே நோன்பு நோற்பது சம்பந்தமாகவோ அல்லது அவைகளில் குறிப்பிட்ட சில நோன்புகள் நோற்பது பற்றியோ அல்லது அதிலே குறிப்பிட்ட இரவில் நின்று வணங்குவது சம்பந்தமாகவோ எந்தவித ஆதாரபூர்வமான ஹதீஸ்களோ வரவில்லை. மேலும் “அல்ஹாபில் அபூ இஸ்மாஈல் அல்ஹரவி” அவர்களும் எனக்கு முன்னர் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள்.” (தப்யீனுல் அஜப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் – இப்னு ஹஜ்ர் – பக்கம் 23)
இன்னும் கூறினார்கள்: ரஜப் மாத சிறப்பைப் பற்றியோ அல்லது அதில் நோன்பு நோற்பது பற்றியோ அல்லது அதில் சில நாட்கள் தெளிவாக நோன்பு நோற்பது பற்றி வரக்கூடிய ஹதீஸ்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்: ஒன்று பலவீனமானது மற்றையது இட்டுக்கட்டப்பட்டது. (தப்யீனுல் அஜப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் – இப்னு ஹஜ்ர் – பக்கம் 23)
===========================================
8- ரஜப் மாதத்துடன் தொடர்பு படுத்தி உள்ள பலவீனமான ஹதீஸ்கள்:
إن في الجنة نهراً يقال له رجب ماؤه أشد بياضاً من اللبن وأحلى من العسل من صام يوماً من رجب سقاه الله من ذلك النهر (البيهقي).
நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு ஆறு இருக்கின்றது அதன் தண்ணீர் பாலை விட வென்மையாகும், அதன் சுவை தேனை விட இனிமையாகும். எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பை நோற்பாரோ அவருக்க அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.’
இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) தனது ‘அல்இலலுல் முதனாஹியா’ என்ற கிரந்தத்தில் இந்த ஹதீஸின் அற்விப்பாளர் தொடர் பலவீனமானது என குறிப்பிடுகிறார்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَكَانَ يَقُولُ لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ وَيَوْمُهَا أَزْهَرُ * أحمد
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் ‘அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப் வஷஃபான் வபாரிக் லனா பீ ரமழான்’ யா அல்லாஹ் ரஜபிலும், ஷஃபானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக, இன்னும் ரமழானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக. (அஹ்மத்).
இதன் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய ‘ஸாஇததிப்னு அபிர்ரகாத்’ என்பவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்று இமாம் புஹாரி (ரஹ்), மற்றும் இமாம் நஸாயி (ரஹ்) போன்றோர் குறிப்பிடுகின்றனர்.
(( أن رسول الله صلى الله عليه وسلم لم يصم بعد رمضان إلا رجباً وشعبان
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானுக்கு பின் ரஜபிலும், ஷஃபானிலும் தவிர நோன்பு நோற்கவில்லை’
இமாம் பைஹகி (ரஹ்) கூறுவதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: இந்த ஹதீஸை குறிப்பிட்டு விட்டு இது நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாகும் காரணம் இதில் முற்றிலும் பலவீனமான யூசுப் இப்னு அதீயா இடம் பெறுகிறார் என்று குறிப்பிடுகிறார் (தப்யீனுல் அஜப் பக்கம் 12).
===========================================
9- ரஜப் மாதத்துடன் தொடர்பு படுத்தி புணைந்துரைக்கப்பட்ட ஹதீஸ்கள்:
قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي…….)).
‘ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு திஹ்யா இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (தப்யீனுல் அஜப் பக்கம் 13-15). இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 5: 205, 206).
فضل رجب على سائر الشهور كفضل القرآن على سائر الأذكار
‘ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ரஜப் மாதத்தின் சிறப்பு, ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கும் சிறப்பை போன்றதாகும்.’ இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) இதில் வரும் ஸக்தி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனக்குறிப்பிடுகிறார்: (தப்யீனுல் அஜப், பக்கம்: 17).
رجب شهر الله الأصم،من صام من رجب يوماً إيماناً واحتساباً استوجب رضوان الله الأكبر
‘ரஜப் போர் புரியாத அல்லாஹ்வின் மாதமாகும். எவர் ரஜப் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் நோன்பு வைப்பாரோ அவருக்கு அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்பொருத்தம் கிடைப்பது கடமையாகும்.’
(தப்யீனுல் அஜப், பக்: 17. அல்பவாயிதுல மஜ்மூஆ ஷவ்கானிக்குரயது, பக்: 439).
من صام ثلاثة أيام من رجب كتب الله له صيام شهر ومن صام سبعة أيام أغلق عنه سبعة أبواب من النار
‘எவர் ரஜப் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்பாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதி விடுகிறான். எவர் ஏழு நாட்கள் நோன்பு நோற்பாரோ நரகத்தின் ஏழு வாயல்களும் அவரை விட்டு மூடப்பட்டு விடும்’
இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206). தப்யீனுல் அஜப் பக்: 18).
من صلى المغرب في أول ليلة من رجب ثم صلى بعدها عشرين ركعة ، يقرأ في كل ركعة بفاتحة الكتاب ، وقل هو الله أحد مرة ، ويسلم فيهن عشر تسليمات ، أ تدرون ما ثوابه ؟ ……قال : حفظه الله في نفسه وأهله وماله وولده ، وأجير من عذاب القبر ،وجاز على الصراط كالبرق بغير حساب ولا عذاب
‘ரஜபுடைய ஆரம்ப இரவில் ஒருவர் மஃரிபை தொழுது, அதன் பின் 20 வது ரக்அத்துகள் தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தின் பின் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஓதி பத்து ஸலாம்களை கொடுத்தால் அவருக்கு கிடைக்கும் கூலியை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ் அவரையும், அவரது குடும்பத்தினரையும், அவரது செல்வங்களையும், அவரது குழந்தைகளையும் நரகத்தின் தண்டனையை விட்டு பாதுகாப்பதுடன், எந்த வித கேள்வி கணக்கும், தண்டனையுமின்றி மின்னல் வேகத்தில் ஸிராதை அவர் கடந்து செல்வார்’ இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 123). தப்யீனுல் அஜப் பக்: 20).
((من صام من رجب وصلى فيه أربع ركعات …. لم يمت حتى يرى مقعده من الجنة أو يرى له
‘ரஜப் மாதம் ஒருவர் ஒரு நோன்பை நோற்று, நான்கு ரக்அத்துகள் தொழுவாரானால், அவர் சுவர்க்கத்தில் தங்குமிடத்தை பார்க்காமல், அல்லது அது காட்டப்படாமல் அவர் மரணிக்கமாட்டார்’ இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 124). தப்யீனுல் அஜப் பக்: 21).
إن شهر رجب شهر عظيم ، من صام منه يوماً كتب الله له صوم ألف سنة
‘நிச்சயமாக ரஜப் மாதம் ஒரு மகத்தான மாதமாகும். எவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு ஆயிரம் வருடம் நோற்பு நோற்ற நன்மை கிடைக்கும்’ இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206, 207). தப்யீனுல் அஜப் பக்: 26).
===========================================
10- மிஃராஜ் தினத்தை சிறப்பிப்பதன் சட்டமென்ன?:
இப்னு தஹிய்யாவைத் தொட்டும் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “இஸ்ராஃ பயணம் ரஜப் மாதத்தில் நடைபெற்றது என்று சில கதை கூறுபவர்கள் கூறுகின்றார்கள் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள் : அது பொய்யாகும் என்றார்கள்.” (தப்ஈனுல் உஜுப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் – இப்னு ஹஜ்ர் – பக்கம் 23)
இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “(இஸ்ராஃ – மிஃராஜ் நிகழ்வு) ரஜப் மாதத்திலோ அல்லது அதன் பத்திலோ அல்லது அதிலே குறிப்பிட்ட ஒரு தினத்திலோ நடைபெற்றது என்பதற்கான எந்தவித அறியப்பட்ட ஆதாரங்களும் இல்லை. மாறாக அது சம்பந்தமாக வரக்கூடியவைகள் வித்தியாசமாக அறிவிப்பாளர்கள் துண்டிக்கப்பட்டதாக இருக்கின்றது. இவைகளைக்கொண்டு தீர்க்கமான முடிவை எடுக்கமுடியாது. இன்னும் இஸ்ராஃ இரவு என்று எண்ணிக்கொண்டிருக்கும் இரவில் நின்று வணங்குவதைக்கொண்டோ அல்லது வேறு விடயங்களைக்கொண்டோ அவ்விரவை பிரத்தியேகமாக சிறப்பிப்பது முஸ்லிம்களுக்கு ஆகுமாக்கப்படவில்லை.” (ஸாதுல் மஆத் இப்னுல் கையிம் 1-58)
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது: ‘ரஜப் மாதத்தை வணக்க வழிபாடுகளின் மூலம் சிறப்பிப்பதென்பது நூதனமான ஒரு நடை முறையாகும், அதை விட்டு விலகி இருப்பது அவசியமான ஒன்றாகும். ரஜப் மாதத்தில் நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளின் மூலம் சிறப்பிப்பது வெறுக்கத்தக்க ஒரு விடயம். இமாம் அஹ்மத் (ரஹ்) போன்ற அறஞர்களும் இதே கருத்தில் உள்ளனர்.’ (இக்திழாஉஸ் ஸிராதுல் முஸ்தகீம் 2: 624, 625).
ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை.
மிஃராஜ் எந்த வருடம் நிகழ்ந்தது என்பதிலே பல விதமான கருத்துகள் நிலவுகின்றன. அது குறிப்பாக இந்த ஆண்டில், இந்தத்திகதியில் நிகழ்ந்தது என ஆதாரம் இருந்தாலும் அதை சிறப்பிப்பதற்கு நபியுடைய எந்த வழிகாட்டலும் இல்லை.. அதையும் மீறி ஒருவர் செய்வாரெனில் அது தெளிவான பித்அத்தாகும் அதற்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைப்பதற்கு பதிலாக அவனது கோபம் தான் கிடைக்கும்.
மிஃராஜ் பயணத்தின் பின் நபியவர்கள் பல வருடங்கள் வாழ்ந்தார்கள், ஸஹாபாக்கள் வாழ்ந்தார்கள். நபியவர்களோ, அன்னாரது தோழர்களோ அந்த நாளை சிறப்பித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவே மிஃராஜ் தினத்தை சிறப்பிப்பதென்பது தெளிவான ஒரு வழிகெட்ட பித்அத்தாகும்.
‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாக உண்டாக்குகிறாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும்.” இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 2697).
அல்லாஹ்வின் தூதரை பின்பற்றி செய்யப்படும் அமல்களுக்கு மாத்திரமே அல்லாஹ்விடம் அங்கிகாரம் உள்ளது. எனவே அல்லாஹ்வின் தூதர் காட்டித் தராத விடயங்களுக்கு அல்லாஹ்விடம் எந்த அங்கிகாரமுமில்லை அவைகள் நிராகரிக்கப்படும். எனவே பித்அத்துக்களை விட்டு எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாக இருப்போமாக.
ரஜபில் குறிப்பாக அமல்களை சிறப்பித்து செய்வதற்கு ஆதாரமில்லை மாறாக எல்லாக் காலங்களிலும் நாம செய்யும் அமல்களை ரஜபிலும் செய்து கொள்ளலாம்.
வழி கெட்ட பித்அத்துக்களிலிருந்து விலகி, நபி வழியில் பயணித்து ஈருலக வெற்றியை அடைவோமாக!
*✍நட்புடன்*
அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி
2025/01/05
➖➖➖➖➖➖➖➖➖➖➖
இந்தத் தலைப்பில் உரையை கேட்க விருமபினால் கீழுள்ள லிங்கில் அழுத்தவும்