1- ளுஹாத் தொழுகையைப் பேணித் தொழுது வாருங்கள் என்பது நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு செய்த வஸிய்யத்துக்களில் ஒன்றாகும்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “என் உற்ற தோழர் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரக்அத்கள் ளுஹாத் தொழுவது, வித்ர் தொழுதுவிட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை எனக்கு அறிவுறுத்தினார்கள். (முஸ்லிம்1303).

அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் நேசர் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ளுஹாத் தொழுவது, வித்ர் தொழாமல் உறங்கலாகாது ஆகிய மூன்று விஷயங்களை நான் வாழ்நாளில் ஒருபோதும் கைவிடக்கூடாது என எனக்கு அறிவுறுத்தினார்க (முஸ்லிம்1304).

===============================

2- ஒருவர் இரண்டு ரக்அத் ளுஹாத் தொழுவதன் மூலம் தமது உடலிலுள்ள ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்த நன்மையை அடைந்து கொள்கிறார்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு “ஓரிறை உறுதிமொழி”யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும். (இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்1302).

===============================

3- வானவர்கள் சாட்சியமளிக்கக்கூடிய, வருகை தரக் கூடிய தொழுகை:

அம்ர் பின் அபசா அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி: “தொழுகையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹுத் தொழுகையைத் தொழுங்கள். பிறகு சூரியன் உதயமாகி உயரும்வரை தொழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அது உதயமாகும் போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போதுதான் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர். பிறகு தொழுங்கள்! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படக்கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும். ஈட்டியின் நிழல் கிழக்கிலோ மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும் (நண்பகல் நேரம்)வரைத் தொழுங்கள்! பிறகு தொழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகிறது.” (முஸ்லிம்1512).

மேலுள்ள ஹதீஸில் ளுஹாத் தொழுகையின் ஆரம்ப நேரம், முடிவு நேரம் பற்றிய தெளிவும் உள்ளது. சூரியன் உதித்து சுமார் ஒரு 10 நிமிடத்திற்குப் பிறகிலிருந்து ழுஹருடைய அதானுக்கு 10 நிமிடம் இருக்கும் வரை ஒருவருக்கு ளுஹாத் தொழுகையை தொழுது கொள்ளலாம்.

===============================

4- ளுஹாத் தொழுகைக்கு சிறந்த நேரம்:

காசிம் பின் அவ்ஃப் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் “ளுஹா” தொழுதுகொண்டிருந்த ஒரு கூட்டத்தாரைக் கண்டார்கள். அப்போது “இந்தத் தொழுகையை இந்நேரத்தில் அல்லாமல் வேறு நேரத்தில் தொழுவதே சிறந்தது என இவர்கள் அறிய வேண்டாமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சுடுமணலில் ஒட்டகக்குட்டியின் கால் குழம்புகள் கரிந்துவிடும் நேரமே அவ்வாபீன் தொழுகையின் நேரமாகும்” எனக் கூறினார்கள்” என்றார்கள் (முஸ்லிம்1361).

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) குபாவாசிகளை நோக்கிச் சென்றார்கள். அப்போது குபாவாசிகள் (ளுஹா) தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது “சுடுமணலில் ஒட்டகக்குட்டியின் கால் குழம்புகள் கரியும் நேரமே “அவ்வாபீன்” தொழுகையின் நேரமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 1362).

அவ்வாபீன் என்பதும் ளுஹாத் தொழுகைக்குரிய பெயரே. “அவ்வாபீன்” என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதை கீழுள்ள அல்குர்ஆன் வசனத்தை நீங்கள் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்

اِنْ تَكُوْنُوْا صٰلِحِيْنَ فَاِنَّهٗ كَانَ لِلْاَوَّابِيْنَ غَفُوْرًا‏

“நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.: (பனீ இஸ்ராயீல் 17: 25)

===============================

5- ளுஹாத் தொழுகை குறைந்தது 2 ரக்அத்துகள். நபியவர்கள் 8 ரத்அத்துகளும் தொழுதிருக்கிறார்கள், அதை விட அதிகமாகாவும் தொழுதிருக்கிறார்கள் என்பதற்கு பின் வரும் நபி மொழிகள் சான்றாக உள்ளன:

உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்காவின் மேட்டுப் பகுதியில் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளியலுக்காக எழுந்தார்கள். அப்போது அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்கள் திரையிட்டு மறைத்தார்கள். (குளித்த) பிறகு தமது ஆடையை வாங்கிப் போர்த்திக்கொண்டார்கள். பின்னர் முற்பகல் தொழுகை (ளுஹா) எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். (முஸ்லிம் 562).

பிரயாணத்தில் ளுஹாத் தொழுவதற்கும் மேலுள்ள செய்தி சான்றாக உள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் நான்கு ரக்அத்கள் (ளுஹா) தொழுவார்கள்; அல்லாஹ் நாடிய அளவு கூடுதலாகவும் தொழுவார்கள்.” (இதை முஆதா அல் அதவிய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 1297).

===============================

6- நபியவர்கள் தொடர்ந்து ளுஹாத் தொழுகையைத் தொழாததற்குக்குரிய காரணத்தை பின் வரும் செய்தி விளக்குகின்றது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில (கூடுதலான) வழிபாடுகளைச் செய்ய விருப்பம் கொண்டிருந்தாலும் கூட, அவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவதுண்டு. (எங்கே தாம் செய்வதைப் போன்று) மக்களும் அவற்றைச் செய்ய, மக்கள் மீது அவை கடமையாக்கப்பட்டுவிடுமோ எனும் அச்சமே இதற்குக் காரணம்.” (முஸ்லிம் 1295).

===============================

7- அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் ளுஹாத் தொழுகை பித்அத் எனக் கூறியதன் விளக்கமென்ன?:

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம். அங்கே ஆயிஷா (ரலி) அவர்களின் அறையோடு சாய்ந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் பள்ளிவாசலில் முற்பகல் நேரத்தொழுகை (ளுஹா) தொழுதுகொண்டிருந்தனர். நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் மக்களின் அந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், “இது (மார்க்க அடிப்படையற்ற) புதிய நடைமுறை (பித்அத்)” என்றார்கள் (முஸ்லிம் 2407)

மஸ்ஜிதில் இவ்வாறு அனைவரும் கூட்டமாக தொடர்ந்து தொழும் முறையை அவர்கள் பித்அத் என்றார்களே தவிர ளுஹாத் தொழுகையை அல்ல என அறிஞர்கள் இதற்கு விளக்கமளிக்கின்றனர். ஏனெனில் ளுஹாத் தொழுகைக்கு அதிமகான ஹதீஸ்கள் சான்றாக உள்ளன.

நமது சமூகத்தில் உள்ள ஒரு தவறான பார்வைதான் இந்த ளுஹாத் தொழுகை வயதான முதியவர்கள் மட்டும் தொழும் தொழுகை என்பது. இந்த தவறான புரிதலை மாற்றி அனைவரையும் இதற்கு ஆர்வப் படுத்தி, இந்த வலியுறுத்தப்பட்ட உபரியான ளுஹாத் தொழுகையைத் தொழுது அதன் சிறப்புகளை அடைந்துகொள்வோமாக!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *