1- வானவர்கள் எதன் மூலம் படைக்கப்பட்டுள்ளனர்?:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். “ஜின்”கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப் பட்டார். (இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 5722).
===============================

2- மலக்குகளின் எண்ணிக்கையை அறிந்தவன் அல்லாஹ்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள். (இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 5464).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பிறகு, ‘அல்பைத்துல் மஅமூர்’ எனும் (வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும்) இறையில்லம் எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், ‘‘இதுதான் ‘அல்பைத்துல் மஅமூர்’ ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இங்கு வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகிவிடும்” என்று சொன்னார். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், புஹாரி 3207).
===============================

வானவர்களின் படைப்பு ரீதியான தன்மைகள்:

3- இறக்கைகளைக் கொண்டவர்களாக வானவர்கள் படைக்கப்பட்டுள்ளனர்:

“அல்ஹம்து லில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.” (அல்குர்ஆன் 35: 1).
===============================

4- ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு 600 இறக்கைகள் உண்டு:

ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(வளைந்த) வில்லின் இரு முனை களுக்கிடையிலான நெருக்கத்தைப்போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்” எனும் (53:9, 10) வசனங்களைக் குறித்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்வருமாறு தெரிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள். (புஹாரி 4856).
===============================

5- ஜிப்ரீல் (அலை) அவர்களின் பிரமாண்டமான தோற்றம்:

மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(நபி (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்க்கவில்லை என்று கூறிய) ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், “(வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போன்று, அல்லது அதைவிடச் சமீபமாக (அவர்கள் இருவருக்கும் இடையிலான) நெருக்கம் இருந்தது. பிறகு அல்லாஹ் தன் அடியாருக்கு எதை அறிவித்தானோ அதை அறிவித்தான்” எனும் (53:9-11) வசனங்களின் பொருள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “அது (வானவர்) ஜிப்ரீலை (நபியவர்கள் பார்த்ததை)யே குறிக்கிறது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் மனித உருவிலேயே நபி (ஸல்) அவர்களிடம் வருவார்கள். ஆனால், இம்முறை மட்டும் அடிவானத்தையே அடைத்தபடி (பிரமாண்டமான) தமது (நிஜ) உருவத்தில் வந்தார்கள்” என்றார்கள். (முஸ்லிம்: 290).
===============================

6- வானவர்கள் மிக அழகானவர்கள்:

“அப் பெண்கள் அவரை (யூஸுப் நபியை)ப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்: “அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள். ((அல்குர்ஆன் 12: 31).
===============================

7- அர்ஷை சுமக்கும் வானவர்களின் பிரமாண்டம்:

“அல்லாஹ்வுடைய வானவர்களில் அர்ஷை சுமக்கும் ஒரு வானவரைப் பற்றிக் கூறுவதற்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டது எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள் அவரின் காதின் சோனைக்கும் தோளுக்குமிடையே 700 வருட தொலை தூரமாகும்” என கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், (அபூதாவுத் 4727).
===============================

8- வானவர்கள் பலமிக்கவர்கள்:

“மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார். (அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.” (அல்குர்ஆன் 53: 5,6)

“ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.” (அல்குர்ஆன் 96: 17, 18)

“அதன் (ஸகர் எனும் நரகத்தின்) மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.” (அல்குர்ஆன் 74: 30)

“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்;” (அல்குர்ஆன் 66: 6)
===============================

9- அல்லாஹ் நாடிய தோற்றத்தில வானவர்கள் வருகை தருவார்கள்:

அல்லாஹ் நாடிய தோற்றத்தில வானவர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு அவர்கள் வேறு தோற்றத்தில் வரும் போது அவர்கள் வானவர்கள்தான் என்பதை மனிதர்களால் அறிய முடியாது. எனினும் அவர்களை தங்கள் கண்களால் காண்பார்கள். ஆனால் மலக்குகளின் இயற்கைத் தோற்றத்தில் அவர்களைக் காண்பதற்குரிய சக்தியை அல்லாஹ் மனிதர்களில் தனது தூதர்களுக்கு மாத்திரம் வழங்கினான். இறைவன் நாடும் போது அந்த வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

1) நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும், மற்றும் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும் மனித தோற்றத்தில் வானவர்கள் வருகை தந்தனர். வானவர்கள் கூறும் வரை வந்தவர்கள் வானவர்கள்தான் என்பதை அவர்கள் அறியவில்லை.
“இப்ராஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி: “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று எண்ணிக் கொண்டார்).
எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார். அதை அவர்கள் முன் வைத்து, “நீங்கள் புசிக்க மாட்டீர்களா?” என்று கூறினார்.
(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.” (அல்குர்ஆன் 51: 24- 28).

வானவர்கள் உணவு, தண்ணீர் போன்ற தேவைகளுக்கு அப்பாற்பட்டபவர்கள் என்பதையும் இந்த வசனத்திலிருந்து அறிஞர்கள் விளக்கமாகக் கூறுகின்றனர்.

லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்த நிகழ்வு அல்குர்ஆனில் (11: 77-81) வசனங்களில் இடம் பெற்றுள்ளது.
===============================

10- நபிமார்கள் அல்லாத நல்லவர்களிடம் வந்துள்ளனர் என்பதற்கு சான்றாக மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்ததைக் குறிப்பிடலாம். அதுவல்லாத இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. ஸஹாபாக்கள் நபியவர்களுடன் இருக்கும் போது அன்னாரது சபைக்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் மனித உருவில் வருகை தந்தார்கள் என்பதற்கு ஹதீஸ்களில் சான்றுள்ளது.
“அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார். (அல்குர்ஆன் 19: 17).
===============================

11- உண்மையான ஓர் இறை நம்பிக்கையாளன் மறைவான விடயங்களில் அல்குர்ஆனும், நபி மொழிகளும் கூறிய விடயங்களுடன் நின்று கொள்வானே தவிர அதைக் கடந்து செல்ல மாட்டான். ஆனால் நிறாகரிப்பாளர்களின் நிலை இதற்கு நேர் எதிரானதாகும். அவர்கள் வானவர்களை அல்லாஹ்வுடைய பெண் மக்கள் என்று அபாண்டமாக பொய்யுரைத்தனர். இதற்காக இவர்களுக்கு கடும் எச்சரிக்கை அல்குர்ஆனில் வந்துள்ளது.

“அன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.” (அல்குர்ஆன் 43: 19)

(நபியே!) அவர்களிடம் கேளும்: உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று. அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?
“அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.” “அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்” (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே! (அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்? நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?” (அல்குர்ஆன் 37: 149-155).

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *