1- பிஸ்மில்லாஹ் எனக் கூறி கதவை மூடுங்கள்:

“இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால்’ அல்லது ‘அந்திப் பொழுதாம்விட்டால்’ உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல)விட்டுவிடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடிவையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள்.” என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள், (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹுமா, புஹாரி 5623)

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்” என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடி வையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன். புஹாரி 5624).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவு களைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக்கூடிய (எலியான)து (விளக் கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிருப்பவர்களை எரித்து விடக்கூடும்.” இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புஹாரி 6295).

===============================

2- வீட்டிற்குள் நுழையும் போதும், சாப்பிடும் போதும் பிஸ்மில்லாஹ் எனக் கூறுங்கள்:

“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை” என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்” என்று சொல்கிறான் (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 4106).

===============================

3- வீடுகளில் அதிகம் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை மரணித்தவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.” (அறிவிப்பவர்: அபூமூசா (ரலி) அவர்கள், முஸ்லிம் 1429).

===============================

4- உபரியான தொழுகைளை வீட்டில் தொழுங்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்கள் தொழுகைகளில் சிலவற்றை உங்கள் இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்கள் இல்லங்களை மண்ணறைகளாக (கப்றுகள்) ஆக்கிவிடாதீர்கள்.” அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், புஹாரி 432

“மக்களே! நீங்கள் (இரவுத் தொழுகையை) உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில், ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தனது வீட்டில் தொழுவதுதான்; கடமையான தொழுகையைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், புஹாரி 7290

“உங்கள் இல்லங்களிலேயே (கூடுதலான – நஃபில்) தொழுகையைத் தொழுதுவாருங்கள். கடமையாக்கப்பட்ட தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தமது வீட்டிலேயே நிறைவேற்றுவதுதான் சிறந்ததாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், முஸ்லிம் 1431)

===============================

5- அல்பகரா அத்தியாயத்தை வீடுகளில் ஓதிவாருங்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். “அல்பகரா” எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்”. (இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 1430).

===============================

6- அருள் வானவர்கள் உங்கள் வீட்டுக்கு வருகை தர வேண்டுமா? இவற்றை அப்புறப்படுத்துங்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நாயும் (உயிரினங்களின்) உருவப்படமும் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.” இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 4275

===============================

7- மார்க்கம் அனுமதித்த காரணங்களுக்காகவே அன்றி நாய்களை வளர்க்காதீர்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எந்த வீட்டார் (தமது இல்லத்தில்) நாய் வளர்க்கின்றனரோ அவர்களுடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு “கீராத்”கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டை நாயையும் தவிர.” (இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 3207).

===============================

8- இவற்றை உங்கள் வீடுகளை விட்டு அப்புறப்படுத்துங்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நாயும், மணியோசையும் உள்ள பயணிகளுடன் (அருள்) வானவர்கள் வரமாட்டார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 4294).

===============================

9- இசைக் கருவிகளை, ஒலியெழுப்பும் மணி ஓசைகளை விட்டு வீடுகளைத் தூய்மைப் படுத்துங்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒலியெழுப்பும் மணி, ஷைத்தானின் இசைக் கருவியாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 4295).

===============================

10- மார்க்கம் தடுத்த வற்றை வீடுகளில் அனுமதிக்காதீர்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு) என்னிடம் வந்தார்கள். அப்போது நான் (வீட்டுவாசலை) உருவப்படம் உள்ள திரைச் சீலையால் மறைத்திருந்தேன். அதைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது. அந்தத் திரைச் சீலையை எடுத்துக் கிழித்துவிட்டார்கள். பிறகு “மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோரில், அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படைக்(க நினைக்)கின்றவர்களும் அடங்குவர்” என்று சொன்னார்கள். முஸ்லிம் 4282)

===============================

11- இவற்றை உங்கள் வீடுகளை விட்டு அப்புறப்படுத்துங்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டுவைத்ததில்லை.” (புஹாரி 5952).

===============================

12- பெண்கள் வீடுகளில் தனித்திருக்கும் போது அந்நிய ஆடவர்களை வீடுகளுக்கு அனுமதிக்காதீர்கள்:

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள் புஹாரி 5232).

===============================

13- ஸலாம் கூறி நுழையுங்கள் அது பரக்கத்தாகும்:

“என் அருமை மகனே நீ உன் வீட்டாரிடம் நுழையும் போது ஸலாம் சொல். அது உனக்கும், உனது வீட்டாருக்கும் பரக்கத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் ரலி அவர்கள், திர்மிதி 2698).

===============================

14- தேவைக் கேற்ப வீடுகளை அமைத்துக் கொள்ளுங்கள்:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “ஒரு விரிப்பு ஆணுக்குரியது. மற்றொரு விரிப்பு அவன் துணைவிக்குரியது. மூன்றாவது விரிப்பு விருந்தாளிக்குரியது. நான்காவது விரிப்பு ஷைத்தானுக்குரியது” என்று சொன்னார்கள். (முஸ்லிம் 4232).

===============================

இந்தத் தலைப்பில் உரையை கேட்க விருமபினால் கீழுள்ள தலைப்பின் மீது அழுத்தவும்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *