ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களா அல்லது ஐம்பதாயிரம் வருடங்களா?

இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:

கேள்வி எண்: 32

குர்ஆனின் உள்ள ஒரு குறிப்பிட்ட வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. மற்றொரு வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. இவ்வாறு குர்ஆன் தனக்குத் தானே முரண்படுகிறதே. சரியா?

பதில்:

அருள்மறை குர்ஆனின் இரண்டு வசனங்கள் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 47வது வசனமும், அத்தியாயம் 32 ஸுரத்துஸ் ஸஜ்தாவின் 5வது வசனமும் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது மனிதர்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. அருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துல் மஆரிஜ்ன் 4வது வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது மனிதர்கள் கணக்கிடும் ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது.

மேற்படி வசனம் உணர்த்தும் பொதுவான கருத்து என்னவெனில் அல்லாஹ் கணக்கிடும் காலம் பூமியில் மனிதர்கள் கணக்கிடும் காலத்தோடு ஒப்பிட முடியாததது என்பதுதான். மேற்படி வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஐம்பதினாயிரம் ஆண்டுகள் என்பது பூமியில் மனிதர்கள் கணக்கிடும் காலம் ஆகும். ஆயிரம் ஆண்டுகள் என்பது மனிதர்களின் பார்வையில் மிகவும் அதிகமான காலகட்டம் ஆகும். ஆனால் ஆயிரம் ஆண்டுகள் என்பது அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாளைக்குச் சமமானது.

1. ‘யவ்ம்’ என்றால் காலம் என்றும் பொருள் கொள்ளலாம்:

மேற்படி வசனங்களில் ‘யவ்ம்’ என்ற அரபி வார்த்தை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ‘யவ்ம்’ என்ற அரபி வார்த்தைக்கு நாள் என்ற பொருள் தவிர, காலம் என்றும் ஒரு நீண்ட காலம் என்றும் பொருள் கொள்ளலாம். மேற்படி வசனங்களில் வரும் ‘யவ்ம்’ என்ற அரபி வார்த்தைக்கு நாள் என்று பொருள் கொள்ளாது, காலம் என்று பொருள் கொண்டால் எந்த குழப்பமும் இ;ல்லை.

அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 47வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

‘(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும். (அல் குர்ஆன் – 22:47)

இறை நம்பிக்கை கொள்ளாதவர்கள் தங்களது தண்டனைக்காக அவசரப் பட்ட பொழுது, அல்லாஹ் இறக்கியருளிய வசனம் இது. அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாள் என்பது, மனிதர்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும் என்று கூறுகிறது.

அருள்மறை குர்ஆனின் 32வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸஜ்தாவின் 5வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்: ஒருநாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும். அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். (அல் குர்ஆன் – 32:5)

மேற்படி அருள்மறையின் வசனம் ஒருநாளில் எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மேலேறிச் செல்லும் என்றும், அந்த நாளின் அளவு நாம் (மனிதர்கள்) கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும் என்றும் குறிப்பிடுகிறது.

அருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துஸ் மஆரிஜ் – ன் 4வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

ஒருநாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்: அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். (அல் குர்ஆன் 70:4)

மலக்குகளும், ஆன்மாக்களும் அல்லாஹ்வை சென்றடையக் கூடிய காலம் ஐம்பதினாயிரம் வருடங்களாக இருக்கும் என்று மேற்கண்ட அருள்மறை வசனம் குறிப்பிடுகிறது.

இரண்டு மாறுபட்ட செயல்கள் நடைபெறக் கூடிய காலகட்டங்கள் சமமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உதாரணத்திற்கு நான் சென்னையிலிருந்து செங்கல்பட்டைச் சென்றடைய இரண்டு மணி நேரம் பிடிக்கிறது என்கிறேன். அதே வேளையில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்றடைய 14 மணி நேரம் பிடிக்கிறது என்கிறேன். மேற்படி நான் சொன்ன எனது இரண்டு கூற்றுக்களும் ஒன்றோடு ஒன்று முரண்படவில்லை.

அதே போன்றுதான் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் ஒன்றோடு ஒன்று முரண்படுவதே இல்லை. மாறாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு சமன்படுகிறது.

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன்  அனைத்து மதத்தவர்களும்

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *