இப்றாஹீம் அலை அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வோம்
நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் பல வருடங்கள் சோதிக்கப்பட்ட போதிலும் எப்படியாவது எனக்கு ஒரு குழந்தையை தந்திடுவாயாக என்று பிரார்த்திக்காமல்,
‘நல்ல ஸாலிஹான வாரிசுகளை தந்திடுவாயாக!’
என்று பிரார்த்தித்தார்கள்.
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
“ரப்பி ஹப்லீ மினஸ் ஸாலிஹீன்”
பொருள்: “என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக’ (என்று பிரார்த்தித்தார்).
எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்” (37:100,101)
“ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்” (37:112)
அவர்களது துஆவை ஏற்றுக் கொண்டு ஸாலிஹான இரு பிள்ளைகளை அல்லாஹ் வழங்கியதாக அல்-குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
பிள்ளைப் பாக்கியத்தை பெற்றதும்,
‘தன்னையும், தன் மக்களையும் இணைவைப்பில் இருந்து பாதுகாத்திடு ரஹ்மானே!’
என்று அடுத்தகட்டமாக பிரார்த்தித்து, ஏகத்துவ கொள்கை மாசுபட்டுவிடக் கூடாது என்பதனை முதன்மை படுத்தி பிரார்த்தித்தார்கள்.
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ
“ரப்பி இஜ்அல் ஹாதல் பலத ஆமினன் வஜ்னுப்னீ வபனிய்ய அன் நஃபுதல் அஸ்னாம்.”
பொருள்: “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!’ என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).” (14:35)
பின்னர், அதே அத்தியாயத்தில் 5 வசனங்களுக்கு பின்னால்,
‘தொழுகையை நிலைநாட்டக் கூடியவர்களாக எம்மை ஆக்கிடு!’
என்று பிரார்த்தித்தார்கள்.
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
“ரப்பி இஜ்அல்னீ முகீமஸ் ஸலாதி வமின் துஃர்ரிய்யதீ, ரப்பனா வதகப்பல் துஆ”
பொருள்: “(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!” (14:40)
நமது வாரிசுகளிடம் ‘மார்க்கத்தின் அடிப்படை கொள்கைத் தெளிவு முதன்மைப்படுத்தப்பட வேண்டும்’ என்பதற்கு நபி இப்றாஹீம் அவர்களின் துஆ மிகப் பொரிய எடுத்துக்காட்டாக உள்ளது.
எவ்வாறான வணக்கங்களை அல்லஹ்வுக்கு செய்ய வேண்டும்? என்று தெளிவுபடுத்துமுன் இணைவைப்பின் விபரீதங்களை இளம் தலைமுறையினருக்கு விளக்குவது நம்மீதான கடமையாகும். இதனையே லுக்மானுல் ஹகீமும் தனது மகனக்கு செய்த உபதேசத்தில் முற்படுத்தியதாக அல்லாஹ் சூரா லுக்மானில் குறிப்பிடுகின்றான்.
கொள்கைத் தெளிவு கிடைத்ததும் வணக்க வழிபாடுகளில் கரிசனை செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக வணக்கங்களில் தலையாய வணக்கமாகிய தொழுகையை நாமும் எமது சந்ததியினரும் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதற்காக அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்த வேண்டும்.. அப்போது தான நாம் எதிர்பார்க்கும் கண்குளிர்சியான பிள்ளைகளாக எமது பிள்ளைகள் மாறுவார்கள்.
(13-04-2018 அன்று அல் ஜுபைல் தஃவா நிலையத்தினால் நடத்தப்பட்ட ஒரு நாள் மாநாட்டில் அஷ்ஷெய்க் அலி அக்பர் (உமரி) அவர்களின் உரையில் இருந்து…)