சூரத்துல் இஸ்ரா ல் 25 இறைக்கட்டளைகள்

1) ஏகத்துவத்தின் சிறப்பு மற்றும் இணைவைப்பின் விபரீதம்

அல்லாஹ்வுடன் மற்றோர் ஆன்டவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்; அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், (17:22-23)

2) பெற்றோருக்கு நன்மை செய்யல்!

பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; (17:23)

3) பெற்றோருடன் சலிப்படைந்து சீ என்று கூட சொல்லிவிட வேண்டாம்!

அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – (17:23)

4) அவர்களை விரட்ட வேண்டாம்! (விட்டை விட்டோ அல்லது தனது இருப்பிடத்தை விட்டோ முதியோர் இல்லங்களுக்கு விரட்டி விட வேண்டாம்)!

அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – (17:23)

5) அவர்களோடு கனிவாக பேசுவது!

இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (17:23)

6) இரக்கத்தோடும், பணிவோடும் அவர்களுடன் நடந்து கொள்வது!

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக. (17:24)

7) அவர்களுக்காக பிரார்த்திப்பது!

மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (17:24)

8) உறவினர்கள் விஷயத்தில் நேர்மையாக நடப்பாயாக!

இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக (17:26)

9) ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உதவி செய்ய வேண்டும்!

மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) (17:26)

10) விரையஞ் செய்யாதீர்!

வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர். (17:26)

11) விரயஞ் செய்பவர்கள் முடிவு!

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)

12) நீ வேலைப் பளுவுக்கு மத்தியில் இருக்கும் போது சிலரை புறக்கணிக்க நேரிட்டால் அவர்களோடும் கனிவாகவும் அன்பாகவும் நடந்து கொள்!

(உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை) எதிர்ப்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக! (17:28)

13) உலோபித் தனத்தை விட்டுவிடும்!!

(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; (17:29)

14) ஊதாரியாகவும் இருந்து விடாதே!

அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர். (17:29)

15) வறுமைக்குப் பயந்து குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்!

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். (17:31)

16) விபச்சாரத்தை நெருங்காதீர்கள்!

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (17:32)

17) கொலை செய்து விடாதீர்கள்!

(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; (17:33)

18) பலிக்குப் பலி தீர்கும் போது எல்லை மீறிவிடாதீர்!

எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிசுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார். (17:33)

19) அநாதைகள் சொத்தில் நீதியாக நடந்து கொள்ளுங்கள்!

அநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின் பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். (17:34)

20) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்!

இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும். (17:34)

21) அளந்தால் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்!

மேலும் நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்; (17:35)

22) நிறுவையில் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்!

(இன்னும்) சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகவும். (17:35)

23) அறிவு இல்லாத விடயத்தில் மௌனமாக இருப்பது!

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (17:36)

24) பெருமையாய் நடக்க வேண்டாம்!

மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. இவையனைத்தின் தீமையும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது. இவையெல்லாம் உம்முடைய இறைவன் உமக்கு வஹீ (மூலம்) அறிவித்துள்ள ஞான உபதேசங்களாகும். (17:37-39)

25) கடைசியாக மீண்டும் ஏகத்துவத்தை ஞாபகப்படுத்தி ஏகத்துவத்திற்கு எதிரான இணைவைப்பின் விபரீதங்களை சுட்டிக் காட்டுவதை அவதானிக்க முடியும்!

ஆகவே அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர். (17:37-39)

சூரத்துல் இஸ்ரா 17வது அத்தியாயம் 23 வது வசனம் தொடக்கம் 39 வது வசனம் வரை

தொகுப்பு: எம் றிஸ்கான் முஸ்தீன் மதனி
அல் கப்ஜி, சவுதி அரேபியா.
30-10-2018

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *