பயம் இல்லாத, பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்திட

இன்றைய உலகம் மிகக் கடுமையாக முகம் கொடுத்து கொண்டிருக்கும் பட்டினி மற்றும் பாதுகாப்பின்மை ஆகிய இரு பேரவலங்கள் நீங்கிட மனித குலத்தை படைத்து பரிபாலிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் துல்லியமான தீர்வை சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

பசி இல்லாத செழிப்பான மற்றும் பயம் இல்லாத பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்திட வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு…

இவ்வெதிர்பார்ப்பு நிறைவேறிட நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்! அதுதான் எல்லாம் வல்ல அந்த

அல்லாஹ் ஒருவனை மாத்திரம் வணங்கிடுவது!

அவனக்கு எதையும் இணை கற்பிக்காது கலப்படம் இல்லாமல் அவனை வணங்கும் போது மேற்படி நமது எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வாக்களிக்கின்றான்.

நபி (ஸல்) அனுப்பட்ட சமுதாயமாகிய அந்த மக்காவாசிகளுக்கு இந்த இரண்டையும் வழங்கியிருந்தாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். பசி மற்றும் பயம் இல்லாத வாழ்க்கை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியது தொடர்பாக கூறும் போது,

“அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்” (அல்-குர்ஆன் 106:4)

என்று சூரத்துல் குறைஷியின் கடைசி வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

இதற்கு முந்தைய அத்தியாயமாகிய சூரத்துல் பீலில் ஆப்ரஹாவின் யானைப்படையின் தாக்குதலில் இருந்து மக்காவாசிகளை காப்பாற்றியதை ஞாபகப்படுத்துகின்றான்.

அன்னிய படையெடுப்புக்களில் இருந்து பாதுகாப்பு பெறுவது என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயாமாகும். மேலும் அவர்கள் பாதுகாப்பாக அவர்களது ஜிவனோபாயத்தின் பிரதான அம்சமாக இருந்த மாரி கால, கோடை கால வர்த்தகப் பயணங்களை எந்த ஒரு கெடுபிடியும், ஆபத்தும் இல்லாது மேற்கொள்வதற்கான அனைத்துவிதமான பாதுகாப்பு எற்பாடுகளையும் அல்லாஹ் வழங்கியிருந்தாக சூரத்துல் குறைஷின் ஆரம்ப வசனங்களில் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ்வின் இந்த வாக்குறிதியின் வெளிப்பாடாகத்தான் மதீனாவில் இருந்த முஸ்லிம்கள் ஷாம் தேசத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த கோடை கால மக்கத்து வர்த்தகக் குழுவை வழி மறித்திட முற்பட்ட போது எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் அபூ ஸுபியானுடைய தலைமையில் மக்கா வந்தடையச் செய்தமை உலக வரலாறு.

இப்படிப்பட்ட பேருதவியை புரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களிடம் வேண்டிக் கொண்டது ஒன்றே ஒன்று தான். அதுதான்,

தன்னை மாத்திரம் வணங்க வேண்டும்

என்ற கோரிக்கை.

“குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி, மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் (வர்த்தகப்) பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக, இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக” (அல்-குர்ஆன் 106:1-3)

மக்கத்து வாசிகளுக்கு பசி இல்லாத மற்றும் பயம் இல்லாத பாதுகாப்பான வாழ்க்ககையை வழங்குவதற்கான ஏற்பாட்டை எல்லாம் வல்ல அல்லாஹ் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே செய்தான் என்பதனை நபி இப்ராஹீம் அவர்களின் வாழ்க்கையை படிக்கும் போது விளங்கிக் கொள்ளலாம்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், தனது அன்பு மனைவி ஹாஜரையும் தனது அருமை மகனார் இஸ்மாயீலையும் அல்லாஹ்வின் கட்டளையோடு அவனது ஆலயமாகிய கஃபாவின் நிழலில் விட்டுவிட்டு, பின்வருமாறு பிரார்த்தித்தார்கள் என்று அல்-குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

“இப்ராஹீம், ‘இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக’ என்று கூறினார்” (அல்-குர்ஆன் 2:126)

சூரத்து இப்றாஹீம் என்ற அத்தியாயத்தின் 35வது வசனத்தில்,

“யா அல்லாஹ் இந்த தேசத்தை அபயமளிக்கப்பட்ட பூமியாக ஆக்குவாயாக!”

என்று பிரார்த்தித்து விட்டு, அதே வசனத்தில் மக்களின் பாதுகாப்பு பறிக்கப்படுவதற்கான காரணத்தையும் கூறினார்கள்.

‘அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்கப்படும் நிலையே மேற்படி பாதுகாப்பான சூழ்நிலையை இல்லாமல் ஆக்கிவிடும்’

என்பதனை நபி இப்ராஹீம் சரிவர அறிந்து வைத்திருந்தார்கள்.

“நினைவு கூறுங்கள்! ‘என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!’ என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).” (அல்-குர்ஆன் 14:35)

தனது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரார்தித்த நபி இப்ராஹீம் தொடர்ந்து பசி, பட்டினையை போக்கிடவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விம் இரு கரம் ஏந்தினார்கள்.

“எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! – தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!'” (அல்-குர்ஆன் 14:37)

இவ்வாறு மக்காவாசிகளின் பாதுகாப்பு மற்றும் செழிப்பான வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட்டமைக்கு மிக முக்கிய காரணம்,

‘நபி இப்ராஹீமுடைய சந்ததிகள் ஏகத்துவத்தில் உறுதியாக இருந்தமை’

என்றால் அது மிகையான கூற்றாகாது.

அல்லாஹ்வின் மேற்படி வாக்குறுதி, ‘மக்காவாசிகளோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை’ என்பதனை நடப்பு உலகத்தில் வாழும் நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

எந்த தேசத்தில் வாழக்கூடிய மக்களாக இருந்தாலும், ‘அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டிய விதத்தில் நம்பி அவனுக்கு எதனையும் இணைகற்பிக்காமல் அவனது ஏகத்துவத்தை உறுதி செய்யும் போது பயம் மற்றும் பட்டினி இல்லாத வாழ்க்கையை பெற்றுக் கொள்ளலாம்.’

இதோ அல்லாஹ்வின் வாக்குறுதியை கூர்ந்து அவதானியுங்கள்!

“நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் – பரகத்துகளை – பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர். ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.

அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?

அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?” (அல்-குர்ஆன் 7: 96-98)

பட்டினியை போக்கி அருட்கொடைகளும் இறைவன் புறத்தில் இருந்து இறக்கப்படும். அதே நேரம் பாதுகாப்பற்ற வேதனையும் அவன் புறத்தில் இருந்து இறக்கப்படும் என்று அல்லாஹ் மேற்படி வசனங்களில் மிகத் துள்ளியமாக சுட்டிக் காட்டுகின்றான். இவற்றில் எதனை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்? என்பதனை நாமே தீர்மானிக்க வேண்டும்.

இன்றைய நடப்பு உலகில் முஸ்லிம் தேசங்கள் பலவற்றில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதோடு பட்டினியும் தலைவிரித்தாடுவதை பார்கின்றோம்.

உள்நாட்டு, வெளிநாட்டு யுத்தங்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய தேசங்கள் யூதர்களின் சதிவலைகளில் அகப்பட்டு நாளாந்தம் கருவருக்கப்படக் கூடிய அகோர காட்சிகளை பார்த்து நமது மக்களுக்கு பழகிப்போய்விட்டது! உள்ளங்கள் இறுகி கல்லாகிவிட்டன!

‘ஜனநாயக ஆட்சி’, ‘சுயாட்சி’, ‘அரபு வசந்தம்’ என்ற வசீகரமான வாசங்களுடன் வேறு பாதைக்கு இறங்கிய நமது உறவுகள், இன்று சொந்த தேசத்தை அன்னிய சக்திகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டு மேற்கத்திய நாடுகளில் ‘அகதி அந்தஸ்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்பதற்காக தமது உயிரை விட மேலான இறை நம்பிக்கையை அடகு வைத்து வாழக்கூடிய அவல நிலைகளை பரவலாக பார்த்து வருகின்றோம்.

ஏன், சில பொழுதுகளில் இஸ்லாமிய கொள்கையை தூக்கி எறிந்து விட்டு கிறிஸ்தவக் கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு மாறிவிட்டார்கள் என்றால், வயிற்றுப் பசிக்காக கற்பை பறிகொடுப்பது, குழந்தைகளை விற்பனை செய்வது போன்ற விடயங்களைப் பற்றி பேசி எந்தப் பிரயோசனமும் இல்லை.

நமது சமுதாயம், பெயரளவில் முஸ்லிம் என்ற நிலையில் இருந்து விடுபட்டு மீண்டும் உண்மையான முஸ்லிம்களாக மாறாத வரைக்கும் நாம் எதிர்பார்க்கும் பாதுகாப்பான, செழிப்பான வாழ்க்கை ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.

மேற்கத்தேய நாடுகளில் அகதி அந்தஸ்து பெற்று அந்த நாட்டு மக்களின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அந்த அரச தலைவர்களில் பெயர்களை தமது பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்ந்தாலும் இந்த மகிழ்ச்சி நிரந்தரமானது கிடையாது.

நாளை மறுமையுடைய வாழ்க்கையில் நிரந்தர நரகத்திற்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படும் என்பதனை உங்களது பிள்ளைகளுக்காவது சொல்லிக் கொடுக்க மறக்க வேண்டாம்.

இறுதியாய் வாக்குறுதி வழங்கினால் அதில் கடுகளவேனும் மாற்றம் செய்திடாத எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வரிகளை நாம் அனைவரும் மிக ஆழமாக பதிய வைத்துக் கொள்வோம்.

“எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.” (அல்-குர்ஆன் 6:82)

எம் றிஸ்கான் முஸ்தீன்
அல் கப்ஜி, சவூதி அரேபியா
24-10-2018

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *