ஏகத்துவவாதிகளே சொர்க்கம் செல்ல இயலும்
அல்லாஹ் கூறுகின்றான்:
“எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்” (அல்-குர்ஆன் 6:82)
மேற்கண்ட இறைவசனத்திற்கு விளக்கமாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
‘இறைநம்பிக்கைகொண்டு (பின்னர்) தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்’
என்னும் (திருக்குர்ஆன் 6:82) வசனம் அருளப்பட்டபோது அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமானதாகத் தென்பட்டது. எனவே, அவர்கள்,
‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் தனக்குத் தானே அநீதியிழைத்துக் கொள்ளாதவர் யார்?’
என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
‘(இந்த வசனம் குறிப்பிடுவது) அதுவல்ல! அது இணைவைப்பையே குறிக்கிறது. ‘என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே. நிச்சயமாக, இணை வைப்பு மாபெரும் அநீதியாகும்’ என்று (அறிஞர்) லுக்மான், தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறதே, (திருக்குர்ஆன் 31:13) அதை) நீங்கள் கேட்க வில்லையா?’
என்று கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)
மேற்கூறப்பட்ட இறைவசனத்தில் (6:82), ஏக இறைவனின் மீது ஈமான் கொண்டு, தங்களுடைய ஈமானில், இறை நம்பிக்கையில் யாதொரு இணைவைப்பு என்ற அநீதியைக் கலக்காமல் அவனையே வணங்கி வழிபட்டு வருபவர்களுக்கு சுபசெய்தி கூறப்பட்டுள்ளது.
மாபெரும் அநீதியாகிய இணைவைப்பு என்பதிலிருந்து அவர்கள் விலகியிருப்பதால் அவர்களுக்கு நேர்வழியும், மறுமையில் இறைவனின் தண்டணையிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.
அடுத்ததாக, இணைவைப்பு என்றால் சிலைகளை வணங்குவது மட்டும் தான் என்று நமது சமுதாயம் அறிந்திருப்பது தான் பலவாறான இணைவைப்புகளில் அவர்கள் உழன்றுக் கொண்டிருப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது!
‘சிலைகளை வணங்குவதும் இணைவைப்பு’ என்பதில் மாற்றுக் கருத்தில்லை! ஆயினும் அவைகள் மட்டுமின்றி,
சமாதிகளில் இடக்கமாகியிருப்பவர்களிடம் உதவி கோருவதும்!
நபி (ஸல்) அவர்களிடம் உதவி கோருவதும்!
அல்லாஹ் அல்லாத ஏனையவர்களிடம் உதாரணமாக முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் சாகுல் ஹமீது பாதுஷா, ஏர்வாடி இப்ராஹீம், ஆலிம்ஷாஹிப் அப்பா, நூர் முஹம்மது ஒலியுல்லாஹ் போன்ற அவுலியாக்களாகாக கருதப்படுகின்ற இன்னபிற மரணித்த மனிதர்களிடம் உதவி கோருவதும்
அல்லது
அவர்களை அழைத்து அவர்களிடம் தம் தேவைகளை வேண்டுவதும்
அல்லது
என்றோ மரணித்து விட்ட அவர்களுக்கு நாம் நம் மனதில் கேட்கும் தேவைகளைக் கூட அறிந்து அவர்கள் அல்லாஹ்விடம் அந்த தேவைகளை நிறைவேற்றித் தருவார்கள் என்று நம்புவதும்
ஏக இறைவனுக்கு இணைவைத்த மாபெரும் குற்றத்தில் சேரும்!
எனவே,
பிரார்த்தனை, அழைத்து உதவி தேடுவது, நேர்ச்சை செய்வது, அறுத்துப் பலியிடுவது போன்றவைகள் எல்லாம் வணக்கங்களைச் சார்ந்தது* என்று நன்கு அறிந்து அந்த வணக்கங்கள் யாவற்றையும் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரம் செய்ய வேண்டும்* என்பதையும் நன்றாக அறிந்து அதன்படி செயலாற்ற வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.
“’வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை’ என்று (மனமார) அறிந்த நிலையில் இறந்து விடுபவர் சொர்க்கம் செல்வார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி); (ஆதாரம்: முஸ்லிம்)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ் கூறுகிறான்: மனிதனே! நீ பூமியின் அளவு பிழைகளைச் செய்து, எனக்கு இணை வைக்காமல் நீ என்னைச் சந்தித்தாலும் நான் உனக்கு பூமியின் அளவு மன்னிப்புத்தந்து உன்னை மன்னிப்பேன்’ (ஆதாரம் : திர்மிதி)
அல்லாஹ் கூறுகிறான்:
”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்” (திருக்குர்ஆன், 5:72)
எனவே சொர்க்கம் ஹராமாக்கப்படுவதற்கு காரணமான அந்த மாபெரும் பாவமாகிய இணைவைப்பு என்றால் என்ன? என்பதை நன்கறிந்து அவற்றிலிருந்து ஒரு முஸ்லிம் முற்றிலும் விலகியிருக்க வேண்டும்