இறைவனுக்கு இணைவைப்பதன் தீமைகள்
1) இறைவன் இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்
2) ஒருவர் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் பாழாகிவிடும்
3) இணை வைத்தவனின் கதி மிகவும் மோசமானது!
4) இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்! அவனுக்கு சொர்க்கம் ஹராமாக்கப்பட்டுவிடும்!
இவற்றுக்குரிய ஆதாரங்களைப் பார்ப்போம்!
1) இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்:
அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.” (அல்குர்ஆன் 4:48 )
2) நல்லமல்களை அழித்துவிடும் ஷிர்க்:
அல்லாஹ் கூறுகிறான்:
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88)
அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்குர்ஆன் 39:65 & 66)
3) இணை வைத்தவனின் கதி மிகவும் மோசமானது:
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)
4) இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.
அல்லாஹ் கூறுகிறான்:
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
இந்த அளவிற்கு படுபயங்கரமான இணைவைத்தல் என்பது பற்றி நாம் முழுவதுமாக அறிந்திருக்கவில்லையானால் அவற்றிலிருந்நு பரிபூரணமாக தவிர்திருப்பது என்பது இயலாத காரியம்.
எனவே ஷிர்க் என்றால் என்ன? என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் அறிந்து அதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்!
தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் பரவலாக காணப்படும் இணைவைப்புகள்!
– மரணித்து சமாதிகளில் அடக்கமாகியிருப்பவர்களிடம் பிரார்த்தித்து, அழைத்து, உதவி தேடுதல்!
– ஷிர்க்கான மௌலூதுகள் நபி (ஸல்) அவர்கள் பெயரிலும் அவுலியாக்களின் பெயரிலும் ஓதுவது!
– இறந்துவிட்டவர்களிடம் நாம் எங்கிருந்துக் கொண்டு கோரிக்கை வைத்தாலும் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டுப் அவற்றை நமக்குப் பெற்றுத் தருவார்கள் என்று நம்பிக்கை கொண்டு அவர்களிடம் கோரிக்கை வைப்பது!
– அல்லாஹ் அல்லாத அவுலியாக்களிடம் நேர்ச்சை செய்வது!
இவைகள் போன்று இன்னும் பல ஷிர்க்கான செயல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு முஸ்லிமும் மறுமையை பாழடித்து நிரந்தர நரகில் கொண்டு சேர்க்கும் இத்தகைய வபரீதமான இணைவைப்பு செயல்களைப் பற்றி நன்கறிந்து அவைகள் அனைத்திலிருந்தும் முற்றாக விலகியிருப்பது மிக மிக அவசியமாகும்.