அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 10
‘ஜஹன்னமிய்யூன்’ எனப்படுபவர்கள் யார்?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் சிலர் தாங்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக நரக நெருப்பினால் தீண்டப்பட்டு, அவர்களின் சருமத்தின் நிறமே மாறிவிடும். பிறகு அல்லாஹ் அவர்களைத் தன் தனிக் கருணையினால் சொர்க்கத்தில் அனுமதிப்பான். அவர்களுக்கு ‘ஜஹன்னமிய்யூன்’ (நரக விடுதலைபெற்றோர்) என்று சொல்லப்படும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. (ஆதாரம்: புகாரி)
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை!
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
“நான் (என் சிறியது தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்தில், இரவில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறுள்ளது என்பதைப் பார்ப்பதற்காக (ஒரு நாள்) இரவு தங்கினேன். அப்போது மைமூனா அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிவிட்டுத் தூங்கிவிட்டார்கள்.
‘இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி வந்தபோது’ அல்லது அதன் ‘ஒரு பகுதி வந்தபோது’ அவர்கள் (எழுந்து) அமர்ந்து கொண்டு வானத்தை நோக்கியவாறு, ‘நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவு பகல் மாறி மாறிவருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன’ எனும் (திருக்குர்ஆன் 03:190 வது) வசனத்தை ஓதினார்கள்.
பிறகு எழுந்து அங்கசுத்தி (உளூ) செய்தார்கள்; பல் துலக்கினார்கள். பிறகு, பதினொன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
பின்னர் பிலால்(ரலி) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு அழைப்புக் கொடுத்தார்கள். உடனே இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுதுவிட்டுப் புறப்பட்டு பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு சுப்ஹு தொழுகை நடத்தினார்கள்.” (ஆதாரம்: புகாரி)
தாயின் கருவறையில் விதிக்கப்படும் விதி!
உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரின் கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது ‘பகல்’ அல்லது ‘இரவு’ சேமிக்கப்படுகிறது. பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அது (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறுகிறது.
பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன:
அவர், (கருவாக இருக்கும்) அந்த மனிதனின் வாழ்வாதாரத்தையும், அவனுடைய வாழ்நாளையும், செயல்பாட்டையும், அவன் (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா என்பதையும் (இறைவனின் கட்டளைப்படி) பதிவு செய்கிறார்.
பிறகு அவனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால்தான்,
உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்செயல்களைப் புரிந்துகொண்டே செல்வார். இறுதியில் சொர்க்கத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் (இடைவெளி) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ள அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாக நரகம் புகுந்து விடுவார்.
(இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் செயலைப் புரிந்து கொண்டே செல்வார். இறுதியில் நரகத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் இடைவெளி தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக்கொள்ளும். அவர் சொர்க்கத்திற்குரியவர்களின் (நற்) செயல்களைச் செய்து அதன் விளைவாக சொர்க்கம் புகுவார்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)
இறைவழியில் போரிடுகிறவர் யார்?
அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே!
ஒருவர் இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார். ஒருவர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடுகிறார். இன்னொருவர் பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகப் போரிடுகிறார்.
இவர்களில் இறைவழியில் போரிடுகிறவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,
‘அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவரே இறைவழியில் போரிடுபவராவார்’
என்று பதிலளித்தார்கள். (ஆதாரம்: புகாரி)
அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது வலியுறுத்திக் கேளுங்கள்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்தனை புரியும்போது வலியுறுத்திக் கேளுங்கள். நீ விரும்பினால் எனக்குக் கொடு என்று கேட்காதீர்கள். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அல்லாஹ்வை நிர்பந்திப்பவர் எவருமில்லை.
என அனஸ்(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)
மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்!
அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் ஒரு (நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம் ‘நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?’ என்று கேட்டார்கள்.
நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான்’ என்று சொன்னேன்.
நான் இவ்வாறு சொன்னபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றார்கள்.
திரும்பிச் சென்ற நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையில் தட்டிக் கொண்டே ‘மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன். (ஆதாரம்: புகாரி)