நமது பிறந்த நாளன்று நோன்பு வைக்கலாமா?
வாசகர் கேள்வி:
السلام عليكم
நபி (ஸல்) அவர்கள் திங்கள் கிழமை நோன்பு பிடித்தற்கு அவர்களின் பிறந்தநாளும் ஒரு காரணம் என்றால். எமது பிறந்த நாளன்று எமக்கும் நோன்பு பிடிக்கலாமா?
தெளிவு:
நபி (ஸல்) அவர்களிடம் திங்கள் கிழமை நோன்பு நோற்பது தொடர்பாக கேட்க்கப்பட்ட போது,
“அந்த நாளில் நான் பிறந்தேன், அந்த தினத்திலே எனக்கு வஹி அருளப்பட்டது”
என்றும் மற்றும் ஒரு அறிவிப்பில்,
“அந்த தினத்தில் நல்லறங்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காண்பிக்கப்படுகின்றது”
என்ற விளக்கத்தை கூறினார்கள். ஆதாரம் முஸ்லிம் 1162, திர்மிதி 747
மேற்குறிப்பிட்ட ஹதீஸ்களில் இருந்து விளங்குவது என்னவென்றால், நபியவர்கள் வெறுமனே தமது பிறந்த நாள் என்பதற்காக திங்கள் கிழமை நோன்பு நோற்காது அவர்களுக்கு வஹி அறிவிக்கப்பட்டமை, அமல்கள் அங்கீகரிக்கப்டுகின்றமை போன்ற காரணங்களையும் தெளிவுபடுத்தினார்கள். இது வஹியின் அடிப்படையில் எடுத்த தீர்மானமாகும். இந்த தீர்மானத்தை நபியவர்களின் அனுமதியின்றி நம்மில் யாருக்கும் எடுக்க முடியாது.
நபியவர்கள் பிறப்பு உண்மையில் இந்த மனித குலத்திற்கே மிகப் பெரும் அருளாக அமைந்தது என்பதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. அல்லாஹ் இதனை அவனது திருமறையில் உறுதி செய்கின்றான்.
“(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.” (அல்-குர்ஆன் 21:107)
இந்த சிறப்பை சாதாரண மக்களாகிய நாம் யாரும் அடைந்து விட முடியாது. எனவே நமது பிறந்த தினம் சிறப்புக்குரியதாக மாறமுடியாது. ‘பிறந்த தினத்தில் நோன்பு நோற்கலாம்’ என்ற வழிமுறையை நபியவர்கள் தங்களது ஸஹாபாக்களுக்கு காட்டிக் கொடுக்கவில்லை.
அவ்வாறு காட்டியிருந்தால் இப்படிப்பட்ட ஒரு நல்ல செயலை செய்வதற்கு, ‘நமது முன்சென்ற நல்லடியார்கள் நம்மை விட பல மடங்கு முந்தியிருப்பர்’ என்பதில் சந்தேகம் கிடையாது.
எனவே, ஸஹாபாக்களோ அவர்களை பின்தொடர்ந்த நல்லடியார்களோ செய்யாத இந்த செயலை நாம் செய்வதன் மூலம் மார்க்க அங்கீகாரம் இல்லாத ஒரு பித்அத்தை செய்த பாவத்திற்கு ஆளாக வேண்டி வரும்.
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,
அழைப்பாளர்,
அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம்,
சவூதி அரேபியா