மறந்துவிட்ட மென்மை எனும் அழகிய நற்பண்பு
ஆலமரம்போல் வேறூன்றி, உலகமே அதற்கு எதிராக சாட்டையை சுழற்றிக் கொண்டிருந்தாலும், தனித்துவத்துடன் வளர்ந்து கொண்டிருக்கும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நாம் வாழும் இந்த உலகம் சான்று பகன்று கொண்டிருக்கிறது. இப்படி இஸ்லாம் தனித்துவத்துடன் / மற்ற மதங்களில் இருந்து வேறுபட்டு இருப்பதற்கு முக்கிய காரணியாக இருந்தவர், 1400 ஆண்டுகளுக்கு முன்பு இந்த  மார்க்கத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைத்த  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள்.

நபியவர்களின் வாழ்க்கை, இறைத்தூதர் ஆவதற்கு முன்னரே தூய்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருந்தது. இளமைப் பருவத்திலேயே ‘நம்பிக்கையாளர்’ (அல் அமீன்), ‘உண்மையாளர்’ (அஸ்ஸாதிக்) என்று மக்களால் அழைக்கப்பட்டார்கள். வார்த்தைகளால்  வர்ணிக்க முடியாத அழகிய குணங்களையும் சிறந்த பண்புகளையும் கொண்டவர்களாக இருந்தார்கள்.  எதிரிகள்கூட அவர்களைக் குறை கூறியதில்லை. அவர்களுடைய பரம எதிரி அபூஜஹ்ல், “முஹம்மதே! நீர் கொண்டு வந்த மார்க்கத்தைத்தான் நான் பொய்யாகக் கருதுகிறேன். ஆனால் நீர் பொய்யர் அல்லர்” என்று கூறினான்.
நபியவர்கள் பல நற்பண்புகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள். அப்படிப்பட்ட  நற்பண்புகளில் ஒன்றுதான் மென்மை/நளினம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நளினத்தை/மென்மையை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்” 
(அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) , ஆதாரம்: முஸ்லிம் 5052)
‘பிறரிடத்தில் நளினமாக, மென்மையாக நடந்து கொள்ளும் பக்குவம் இழந்தவர் எந்த நன்மையையும் பெறமுடியாது’ என்று நபிகளார் கூறுகின்றார்கள். நபியவர்கள் மக்களிடையே மார்க்கத்தை எடுத்துரைக்கும் போது, வாயால் சொல்வதை விட, செயல்களால் செய்து காட்டினார்கள்/ நடைமுறை படுத்தினார்கள். அப்படிப்பட்ட மென்மையை நம்முடைய வாழ்க்கையில் கடை பிடிக்கின்றோமா? என்பதை சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம்.
நம்முடைய செயல்கள் மூலம், மற்றவர்களை ஈர்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஆட்சி பொறுப்பு, 11 மனைவிகளுடனான குடும்ப வாழ்க்கை, பல போர்கள், அன்றாட பிரச்சனைகளுக்கு மத்தியில் தன்னுடைய நளினத்தை எப்போதும் இழந்ததில்லை என்பதை கீழே உள்ள ஹதீஸ் உறுதி செய்கிறது.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது,
“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை (மனம் வேதனைப்படும்படி) “ச்சீ” என்றோ “இதை ஏன் செய்தாய்?” என்றோ, “நீ இப்படிச் செய்திருக்கக் கூடாதா?” என்றோ எதற்காகவும் அவர்கள் (கடிந்து) சொன்னதில்லை.”(ஆதாரம்: முஸ்லிம் 4623).
மேலே உள்ள ஹதீஸ் ஒரு சாதாரண விஷயம் என்று நாம் கடந்து சென்று விட முடியுமா? இது போன்ற ஒரு வீட்டு உரிமையாளரை இந்த உலகம் இதுவரை கண்டதுண்டா? நம்முடைய வீட்டில் வேலை பார்க்கும் ஒருவரை அல்லது நம் கடைகளில் பணி செய்யும் ஒருவரை இவ்வாறு நாம் நடத்தி இருக்கிறோமா என்பதை இந்த ஹதீஸ் நம்மை சிந்திக்கத் தூண்ட வேண்டாமா?
“அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது (அல்-குர்ஆன் 33:21)
தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு இருப்பவர்களிடம், எத்தனை பேர் தங்களுடைய அன்றாட வாழ்வில் நளினமாக இருக்கின்றீர்கள்? என்று கேட்டால், அவர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம்.
சினிமா நட்சத்திரங்களையும், கிரிக்கெட் வீரர்களையும் தங்களுடைய முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இருப்பவர்கள், மேலே உள்ள குர்ஆன் வசனத்தின் படி நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டாமா?
மக்கா மாநகருக்கு தென் கிழக்கே சுமார் எழுபது மைல் தூரத்தில் உள்ள ‘தாயிப்’ நகருக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்க, தன்னுடைய வளர்ப்பு மகன் ஜைது (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு நபிகளார் சென்றார்கள். அங்கு செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களைச் சந்தித்து இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் கூறினார்கள். அவர்கள் நபிகளாரை கேலியும் கிண்டலும் செய்தனர். அதோடு அவர்கள் நிற்கவில்லை. சிறுவர்களை ஏவி நபிகளாரை கற்களாலும் சொற்களாலும் தாக்கினார்கள்.
இவ்வாறு பத்து நாட்கள் பாடாய்ப்படுத்தினார்கள். பதினோறாம் நாள் அவர்கள் இருவரும் தாயிப் நகரத்தைவிட்டு வெளியேறினார்கள். அப்போதும் அந்தக் கொடிய மனம் கொண்டோர் ஓட ஓட விரட்டினார்கள். அவர்கள் நபிகளாரை கல்லால் அடித்தார்கள். அவர்கள் உடலில் காயங்கள் ஏற்பட்டன. ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அருகில் தென்பட்ட ஒரு தோட்டத்திற்குள் இருவரும் தஞ்சம் புகுந்தனர். வேதனையைப் பொறுக்க முடியாமல் நபிகளார் கீழே சாய்ந்தார்கள். பக்கத்தில் இருந்த ஜைத், நபி (ஸல்) அவர்களைத் தாங்கியபடி, அவர்களிடம், “நாசக்காரர்கள் நாசமடைய இறைவனைப் பிரார்த்தித்தால் என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்கு நபிகளார்,
“நான் மக்களிடம் அன்பு பாராட்டவும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யவும் அனுப்பப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு வேதனையை வழங்குவதற்காக அனுப்பப்படவில்லை. இன்றில்லாவிட்டாலும் நாளை இவர்கள் நேர்வழியில் வருவார்கள். இவர்கள் வராவிட்டாலும் இவர்களுடைய வழித்தோன்றல்கள் நிச்சயம் இஸ்லாத்தை ஏற்பார்கள்’’ என்றார்கள்.
“நபியே! நிச்சயமாக நீர் மகத்தான நற்குணம் உடையவராகவே இருக்கின்றீர்” (அல்-குர்ஆன் 68:4)
என்ற இறைக் கூற்றுக்கு ஏற்றவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் மென்மை எனும் நற்குணத்தை கொண்டிருந்தார்கள்.
ஆனால் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் யாரிடமாவது கொடுக்கல்/வாங்கல் போன்ற சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும்போது, நமக்கு தீங்கு இழைத்தவரிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் எனபதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவரிடம் பேசுவது, ஸலாம் சொல்வது கிடையாது. அவர்களுக்கு எதிராக இறைவனிடம் கையேந்துபவர்களாக இருக்கிறோம். நம்மை சுயபரிசோதனை செய்யவேண்டிய நிலையில் இருக்கிறோம் என்தையே இது காட்டுகிறது.
“ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலின் ஒரு பகுதியில் சிறுநீர் கழித்தார். அப்போது அவரை மக்கள் விரட்டினார்கள். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள், அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அம்மனிதர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர், ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரக் கட்டளையிட்டார்கள். அது சிறுநீரின் மீது ஊற்றப்பட்டது” என அனஸ்(ரலி) அறிவித்தார். (புஹாரி 221)
பள்ளிவாசல் புனிதமான தொழுமிடம் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு தெரியாமல் இல்லை. தோழர்கள் அவரை விரட்டியபோது தடுத்ததோடு மட்டுமல்லாமல், அசாதாரண சூழ்நிலையில் மென்மையாக நடந்து கொள்வது எப்படி என்பதையும் கற்றுக் கொடுக்கிறார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நபி (ஸல்) அவர்கள் மென்மை எனும் பண்பை இழந்ததில்லை.
“நபி (ஸல்) அவர்கள் ‘நஜ்து’ மாநிலத்தை நோக்கி குதிரை வீரர்களின் படை ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த யமாமாவாசிகளின் தலைவரான ‘சுமாமா இப்னு உஸால்’ எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் சுட்டி வைத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்து, ‘சுமாமாவே, உங்களிடம் என்ன (செய்தி) உள்ளது?’ என்று கேட்டார்கள். அவர், ‘முஹம்மதே! என்னிடம் நல்ல செய்திதான் உள்ளது’ என்று கூறினார். இறுதியில் நபி(ஸல்) அவர்கள், ‘சுமாமாவை அவிழ்த்துவிட்டு விடுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள்……….. “ என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கக்கூடிய  நீண்ட ஹதீஸ் புஹாரியில் பதிவாகியுள்ளது.
இது நபி அவர்களின் மென்மையான அனுகுமுறையை படம் பிடித்து காட்டக்கூடிய ஒரு நீண்ட ஹதீஸ்.
சுமாமா அவர்கள் மூன்று நாட்கள் தூணில் கட்டப்படுகிறார்கள். குர்ஆன் அன்பளிப்பாக கொடுக்கவில்லை, பயான்கள் இல்லை, தாவா நடக்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் மென்மை, சஹாபாக்களின் அனுகுமுறையை பார்த்த இஸ்லாத்தின் எதிரி, இறுதியில் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்கிறார்கள்.
இஸ்லாத்தை தழுவுவதற்கு முன் நபி (ஸல்) அவர்களின் முகம் போல் வெறுப்பான முகம், நபியவர்களை போல வெறுப்பான மனிதர், மதீனாவை போல வெறுப்பான நகரம் இருந்ததில்லை என்று சொன்ன சுமாமா, இன்று நபியவர்களின் நற்குணங்களின் மூலமாக அனைத்தும் தனக்கு விருப்பமானதாக ஆகிவிட்டதாக கூறுகிறார்கள்.
ஆனால், நம்முடைய பண்புகளை பார்க்கக் கூடியவர்கள், நம்மை விட்டு வெருண்டு ஓடக் கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் பண்புகளை அங்குலம் அங்குலமாக பின்பற்றிய தோழர்கள் எங்கே? நம்முடைய பண்புகள் எங்கே?. சீர்தூக்கிபார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நபி (ஸல்) அவர்கள் கடினமாக நடந்து கொள்ளவில்லை என்பதை குர்ஆன் நமக்கு தெளிவாக எடுத்துறைக்கிறது.
“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்”(அல்-குர்ஆன் 3:159)
நம்முடைய அணுகுமுறை எப்படி உள்ளது? நாம் தாவா பணி செய்யும்போது கூட மென்மையான சொற்களை பயன்படுத்துவது இல்லை. பிறரின் மானத்தோடு விளையாடி, குரோதங்களை வளர்த்து, பிறரின் மனம் புண்படியான சொற்களை உபயோகித்து, சலாம் சொல்வதில் பாகுபாடு காட்டி இப்படி எங்கு பார்த்தாலும் மென்மை என்பது மறந்து போன ஒன்றாய் ஆகிவிட்டது.
ஆகையால், நம்முடைய வாழ்வில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித்தந்த வழியில் மென்மை எனும் நற்குணத்தை வளர்த்து சொர்க்கம் செல்வதற்கு முயற்சி செய்வோம்.
வல்ல இறைவன் அதற்கு உதவி புரிய போதுமானவனாக இருக்கின்றான்.
சகோதரர் M. அன்வர்தீன்,
பெரம்பலூர்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *