தப்லீக் ஜமாஅத்தினரின் உழைப்பு, தியாகம் – குர்ஆன் சுன்னாவின் பார்வையில்
இது சற்று நீளமான பதிவு! எனவே பொறுமையுடன் முழுவதும் படிக்கவும்!
இன்னும் சில தினங்களில் தப்லீக் ஜமாஅத்தின் மாபெரும் இஜ்திமா நடைபெறுவதையொட்டியும் அதில் ஒரு கோடி பேருக்கு மேல் கூட இருப்பதையும் பற்றிய பேச்சு தான் தற்போது எங்கும் பேசப்படுகின்றது!
தப்லீக் ஜமாஅத்தினர்கள் இதுபற்றி அதிகம் பேசுகிறார்களோ இல்லையோ அதில் சம்பந்தப்படாத ஏனையவர்கள் தான் விளம்பரமில்லா அவர்களின் முயற்சிகளையும், தியாகங்களையும் பாராட்டி மகிழ்கின்றனர்! அல்லாஹ்வை மட்டுமே வணக்கத்திற்குரியவனாக ஏற்றுக் கொண்டிருக்கும் ஏகத்துவவாதிகளான உண்மையான முஸ்லிம்களும் இதில் விதிவிலக்கல்ல!
பொதுவாகவே மனிதன் இரக்க சிந்தனை, மற்றவர்களுக்கு உதவும் குணம், சிரமப்படுபவர்களுக்கு தொண்டு செய்யும் உள்ளம் போன்றவைகளோடு படைக்கப்பட்டிருக்கின்றான்!
“மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று கூறி பிற மதங்களும் கூட பிற மனிதர்களுக்கு உதவி கரம் நீட்டுவதற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட மதத்தில், கொள்கையில் ஒருவர் தன்னை அதிமாக ஈடுபடுத்திக்கொள்ளும் போது அவரின் தியாக மனப்பான்மையுடன் கூடிய தொண்டு செய்யும் ஆர்வம் மேலோங்குவதைக் கண்கூடாகக் காணலாம்!
அந்த வகையில் தான் ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகள் கூட அப்போது ஹஜ்ஜிற்காக பல பிரதேசங்களிலிருந்து வந்தவர்களுக்கு உணவு, குடிநீர் போன்றவைகளை தந்து அவர்களுக்கு உதவி செய்வதை பேருபகாரமாக கருதி செயல்பட்டு வந்ததை அறிய முடிகிறது!
தற்காலத்தை எடுத்துக்கொண்டால் கூட, பற்பல கிறிஸ்தவ மிஷனரிகள் தங்களின் பொருளாதாரம், உடலுழைப்பு, ஓய்வு நேரம் போன்றவற்றையெல்லாம் தியாகம் செய்து நாடு விட்டு நாடு வந்து பரம ஏழைகள் மற்றும் தொழு நோயாளிகள் வாழும் பகுதிக்கெல்லாம் சென்று அவர்களுக்குப் பணிவிடை செய்கின்றனர். அதன் மூலம் அவர்கள் தங்களின் மதத்தைப் போதிப்பதாக எடுத்துக் கொண்டாலும் கூட அதற்காக மட்டும் இவ்வளவு பெரிய தியாகத்தை செய்ய முன்வர மாட்டார்கள்! இவ்வாறு செய்வது, நன்மை பயக்கும் என்று கருதியே அதில் இத்தகைய ஈடுபாட்டுன் செய்கின்றனர்.
இவ்வாறாக, பலரும் பல்வேறு விதத்தில் தியாகம் செய்கின்றர். தியாகத்திலேயே பெரிய தியாகம் ஒருவர் தன் இன்னுயிரை தன் கொள்கைக்காக விடுவது ஆகும்!
அல்லாஹ்வை மட்டுமே வணக்கத்திற்கு உரியவனாகவும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான சுன்னாவை மட்டுமே தன் வாழ்வு நெறியாகவும் ஏற்றிருக்கும் ஒரு உண்மையான முஸ்லிமின் பார்வையில் இத்தகைய தியாகங்கள் எவ்வாறு நோக்கப்படுகின்றது என்பது மிக முக்கியமானது! அல்லாஹ் இத்தகைய தியாகங்களுக்கு என்னவிதமாக பரிசளிக்கப் போகின்றான் என்பதைப் பொருத்து தான் அல்லாஹ்வை மட்டும் வணங்கும் முஸ்லிமின் பார்வையும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!
அல்-குர்ஆன் மற்றும் சுன்னா போதிப்பது என்னவெனில், ஒருவர் ஏக இறைவைன மட்டும் வணக்கத்திற்கு உரியவனாகவும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை மட்டும் நேர்வழிக்குரிய வழிமுறை என்றும் ஏற்றுக்கொண்டு அதன்படி செயலாற்றவில்லையெனில், அவன் தன் வாழ்நாள் முழுவதும் சேர்த்த செல்வங்களையெல்லாம் வாரியிறைத்து, வாழ்நாள் முழுவதையும் மக்கள் சேவைக்காக அர்ப்பணித்திருந்தாலும் அதன் மூலம் எவ்வித பயனுமில்லை என்று கூறுகின்றது இஸ்லாம்!
இதுபற்றி அல்லாஹ் கூறும் போது,
”இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தனது அடியார்களில் தான் நாடியோரை, இதன் மூலம் நேர்வழி காட்டுகிறான். (பின்னர்) அவர்கள் இணை கற்பித்தால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்” (திருக்குர்ஆன், 6:88)
இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்ற எச்சரிக்கை என்னவெனில், இணைவைத்தவனின் அனைத்து நல்லறங்களும் அழிந்துவிடும் என்பதாக! இன்னுமொரு வசனத்தில் நபி (ஸல்) அவர்களையே அல்லாஹ் எச்சரிக்கின்றான்:
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது” (திருக்குர்ஆன், 39:65-66)
எனவே, ஒருவர் தியாகங்களிலேயே மிகப்பெரிய தியாகமாகிய தன்னுயிர் நீத்தலைக் கூட ஏகத்துவக் கொள்கையின்றி செய்திருந்தால் அதற்கும் எவ்வித பயனுமில்லை என்பதை மேற்கூறிய திருமறை வசனங்கள் பறைசாற்றுவதை அறியமுடிகிறது!
இப்போது நாம் நமது தலைப்பிற்குள் வருவோம்!
உலகெங்கிலும் வியாபித்திருக்கும் தப்லீக் ஜமாஅத்தை எடுத்துக் கொண்டால் அதிலிருப்பவர்கள், தமது பொருளாதாரம், நேரம், உடலுழைப்பு ஆகியவற்றையெல்லாம் தியாகம் செய்து மனைவி, மக்களையெல்லாம் பிரிந்து ஊர், ஊராக ஏன், சில சமயங்களில் நாடு, நாடாகச் சென்று மக்களை அழைக்கும் பணிகளில் ஈடுபடுவதை யாராலும் மறுக்க முடியாது!
அதே நேரத்தில், வெளிப்பார்வைக்கு அவர்கள் தொழுகைக்கு அழைப்பது போலத் தோன்றினாலும் அவர்கள் தாங்கிப் பிடித்திருக்கும் அகீதா மற்றும் கொள்கைகளை ஆழமாகப் படிக்கும் போது, ஒருவனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றும் படுபாதகமான கொள்கையாக அது இருப்பதை அறிய முடிகின்றது!
ஆம் சகோதர, சகோதரிகளே! அவர்கள் இஸ்லாத்தின் உயிர் நாடியான ஏகத்துவக் கலிமாவாகிய ‘லாயிலாஹ இல்ல்லாஹ்’ என்பதிலேயே கோட்டை விட்டவர்கள்!
தப்லீக் ஜமாஅத்தினரின் ஆறு நம்பர் என்று சொல்லப்படும் ஆறு அடிப்படை அம்சங்களான,
- ‘கலிமா-லாயிலாஹ இல்லல்லாஹ்’, ‘
- தொழுகையை நிலை நாட்டல்’, ‘
- இல்மு–திக்ரு’,
- ‘இக்ராம்-பிற சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல்’,
- ‘இக்லாஸ்–மனத்தூய்மை’,
- ‘தப்லீக்–வக்தில் வெளிக்கிளம்பிச் செல்லல்’
என்பதில் முதலாவது நம்பரான, கலிமா ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ வின் நோக்கம் பற்றி இவர்கள் கூறுவது, முற்றிலும் மக்கத்து முஷ்ரிக்குகளுடையதை ஒத்திருக்கிறது!
அவர்கள் எவ்வாறு ‘தவ்ஹீதுர் ருபூபிய்யாவை’ மட்டும் ஏற்றுக் கொண்டு ‘தவ்ஹீதுல் உலூஹிய்யாவில்’ கோட்டை விட்டார்களோ அதே போலவே இவர்களும் தவ்ஹீதுர் ரூபூபிய்யாவை முன்னிலைப்படுத்தி தவ்ஹீதுல் உலு10ஹிய்யாவை கண்டுக் கொள்வதில்லை!
சற்று விரிவாகப் பார்ப்போம்!
ஆறு நம்பரில்; முதலாவது, கலிமா ‘லாயிலாஹ இல்லல்லாஹ்‘ – இதன் நோக்கம் பற்றி இவர்கள் சொல்லும் போது,‘
‘வஸ்த்துக்களுடைய நம்பிக்கையை உள்ளத்திலிருந்து அகற்றி, வஸ்த்துக்களின் இறைவனான அல்லாஹ்வின் நம்பிக்கையை இதயத்தில் பதிப்பதுதான் இதன் நோக்கம்’
என்கின்றனர். அதாவது,
“நம்மைப் படைத்தது அவனே! நமக்கு உணவளிப்பது அவனே! செல்வத்தைத் தருவது’ வறுமையைத் தருவது’ நோயை விடுவது, குணப்படுத்துவது’ கஷடத்தை நீக்குவது, உயர்த்துவது, தாழ்த்துவது அனைத்தும் அவன்தான்! என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்”
என்று கலிமாவுக்கு விளக்கம் கூறுகின்றனர்.
இதைச் சொல்வதற்காகவா ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வரை நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள்? நிச்சயமாக இல்லை சகோதரர்களே!
அனைத்து நபிமார்களும் அனுப்பப்பட்டதன் பிரான நோக்கம், ‘அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்’ என்ற ஏகத்துவக் கலிமாவை போதிப்பதற்காகத் தான் என்பதை பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
“(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.” (அல்-குர்ஆன் 21:25)
மக்கத்து முஷ்ரிக்குகள் கூட, கலிமாவுக்கு தப்லீக் ஜமாஅத்தினர்கள் கூறும் விளக்கத்தை ஏற்றிருந்தார்கள் என திருமறைக் குர்ஆன் பறைசாற்றுகின்றதே!
“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?’ என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ‘அல்லாஹ்’ என பதிலளிப்பார்கள்! ‘அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?’ என்று நீர் கேட்பீராக” (அல்-குர்ஆன் 10:31)
பிறிதொரு இடத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:
23:84 ‘நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்?’ என்று (நபியே!) நீர் கேட்பீராக!
23:85 ‘அல்லாஹ்வுக்கே’ என்று அவர்கள் கூறுவார்கள்! ‘(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?’ என்று கூறுவீராக!
23:86 ‘ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?’ என்றும் கேட்பீராக.
23:87 ‘அல்லாஹ்வே’ என்று அவர்கள் சொல்வார்கள்! ‘(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?’ என்று கூறுவீராக!
23:88 ‘எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? – யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக – ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)’ என்று கேட்பீராக.
23:89 அதற்கவர்கள் ‘(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)’ என்று கூறுவார்கள். (‘உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?’ என்று கேட்பீராக.
மேற்கண்டவாறு ‘படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே’ என்று நம்பிக்கொண்டிருந்த மக்களிடையே தான் நபி (ஸல்) அவர்கள் போர் புரிந்தார்கள். அவர்களை சிறைபிடித்தார்கள்!
காரணம், ‘தவ்ஹீதுர் ருபூபிய்யாவை – படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கிறது என்ற ஏகத்துவத்தை’ நம்பிக்கைக் கொண்டிருந்த மக்கத்து முஷ்ரிக்குகள், மற்ற இரு தவ்ஹீது வகைகளான, ‘தவ்ஹீதுல் உலூஹிய்யா – வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது’ மற்றும் ‘தவ்ஹீது அஸ்மா-வஸ்ஸஃபாத் – இறைவனின் பெயர்களில், பண்புகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது’ ஆகிய நம்பிக்கைகளில் தவறிழைத்து அவற்றில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்ததே ஆகும்.
‘அல்லாஹ் தான் அனைத்தையும் படைத்து நிர்வகிப்பவன்’ என்று நம்புவது ‘லாயிலாஹ இல்லல்லாஹ்‘ வின் ஒரு பகுதிதான்.
ஆனால், அதை விட முக்கியமாக, “அவனை மட்டுமே வணக்கத்துக்குரியவனாக ஏற்றுக்கொண்டு, அவனல்லாத வேறு யாருக்கும் அல்லாஹ்வின் ஆற்றலில் எவ்விதப் பங்குமில்லை” என்று உறுதியாக நம்பி, “எந்த இபாதத் ஆனாலும் அல்லாஹ்வுக்காகவே அதைச் செய்வதுடன் அதன்படி செயற்படுவதே” இந்தக் கலிமாவின் அடிப்படை நோக்கமாகும்.
ஆனால், தப்லீக் ஜமாஅத் அமைப்பைப் பொறுத்த வரைக்கும் இந்த கலிமாவின் ஒரு பகுதியான ‘அல்லாஹ் தான் அனைத்தையும் படைத்தான்; அவன் தான் அனைத்தையும் இயக்குகின்றான்’ என்ற கோணத்தில் மட்டும் தான் விளக்கம் கொடுக்கப்படுகின்றதேயன்றி, இஸ்லாத்தின் உயிர்நாடியான, ஏகத்துவ முழக்கமாகிய ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் வணக்கத்தில் எவ்வித பங்கும் இல்லை; அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான சுன்னாஹ் – இவ்விரண்டின் அடிப்படையிலேயே இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது; இதிலிருந்து மற்றதைப் பின்பற்றியவர் ஷிர்க் மற்றும் பித்அத் எனும் வழிகேடுகளைச் செய்தவராவார்’ என்பன பற்றிய எந்த ஒரு அகீதாவையும் அவர்கள் போதிப்பதில்லை!
இதன் காரணமாகவே, தப்லீக் ஜமாஅத்தினார்களில் மிகப் பெரும்பாண்மையானவர்கள் தப்லீக்கில் இருந்து வருவதோடு மட்டுமல்லாமல் ஷிர்க் மற்றும் பித்அத்களிலும் சர்வ சாதாரணமாக உழன்று வருவதைப் பார்க்கின்றோம்!
இவர்களின் ஏகத்துவ கலிமாவே சரியான நிலைப்பாட்டில் இல்லாதிருக்கின்ற நிலையில், இவர்களின் இறைவனைப் பற்றிய நம்பிக்கை எப்படி இருக்கிறது? என்று பார்த்தால் இவை முற்று முழுதாக சூஃபித்துவ வழிகேடாக இருப்பதைக் காணமுடிகிறது!
இதற்கு மிகப்பெரிய ஆய்வு எல்லாம் செய்யத் தேவையில்லை! அவர்களின் வேத நூலான “அமல்களின் சிறப்புகள்” என்ற நூலைப் படித்தாலே, ‘இவர்கள் பின்பற்றுவது சூஃபித்துவத்தைத் தவிர வேறொன்றுமில்லை’ என்பதை எளிதாக அறியலாம்! ‘பெரியார்‘, ‘ஞானி‘, ‘செய்கு‘ போன்ற பெயர்களில் சூஃபிகள் செய்ததாக இவர்கள் புளுகியிருக்கும் கட்டுக் கதைகள் இவர்களின் வேத நூலில் ஏராளமாக மலிந்திருப்பதைக் காணலாம்!
இந்தக் கட்டுக் கதைகளைத் தான் இவர்கள் பாமர மக்களுக்கு கூறி, அவர்களை மூளைச் சலவை செய்கின்றனர்.
3, 7, 40 நாட்கள் என வக்தில் வெளிக்கிளம்பிச் செல்லும் அப்பாவி பாமர மக்களுக்குத் தெரியாத இன்னும் பல இரகசியங்களும் இந்த வழிகேடான அமைப்பாகிய தப்லீக் ஜமாஅத்தின் கொள்கையாக இருக்கிறது! இந்த இரகசியமே தப்லீக்கின் அடிப்படைக் கொள்கையாகவும் இருக்கிறது!
ஆம் சகோதரர்களே! அது தான் “வஹ்தத்துல் உஜூத்” என்ற வழிகேட்டுக் கொள்கை! இந்தக் கொள்கையை ஏற்றிருப்பவர்கள் ‘முஸ்லிம்‘ என்ற வட்டத்தைவிட்டே வெளியேறியவர்கள்’ என்றுக் கூறும் அளவிற்கு மோசமான கொள்கை இது!
‘படைத்தவன் வேறு! படைப்பினங்கள் வேறு!’ என்று இஸ்லாம் கூறிக் கொண்டிருக்க,
‘படைப்பினமும் படைத்தவனும் வேறு வேறல்ல! இரண்டும் ஒன்று தான்’ எனப் போதிக்கும் வழிகேட்டுக் கொள்கை தான் இந்த ‘வஹ்தத்துல் உஜூத்’!
இது தான் தப்லீக் ஜமாஅத்தினர்கள் போற்றிப் புகழும் ஜக்கரியா மௌலானா போன்றவர்களின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது என்பதை அவரின் நூல்களிலிருந்து காணமுடிகிறது!
‘வஹ்தத்துல் உஜூது’ என்பதைப் பற்றி ஜக்கரியா மௌலான என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்!
‘ஸூபித்துவத்தின்’ ஆரம்பமே ‘வஹ்தத்துல் வுஜூத்’ (எல்லாம் அவனே எனும் அத்வைதக் கொள்கைதான்) என்று கூறிவிட்டு, மற்றொரு இடத்தில் ‘இப்போதுள்ள காலம் முழு மூச்சுடன் சூபித்துத்தின் பக்கம் அழைப்பதற்கும்! அதன்படி செயற்படுவதற்கும் பொருத்தமான காலமாகும்! என்று கூறுகின்றார்கள்.
(திக்ரு இஃதிகாப் கே அஹமிய்யத் ப: 95)
இப்போது புரிந்து விட்டதா? இவர்களது சுயரூபம்…
“எல்லாமே அல்லாஹ் தான்” என்பதே சூபித்துவத்தின் அடிப்படை என அவர்களே ஏற்றுக்கொண்டு விட்டு, பின்னர் ‘அதன் பக்கம் முழு மூச்சுடன் அழைப்பதற்கான தருணம்’ இதுவே’ என்கின்றார்களே! அப்படியானால், இவர்கள் ‘எல்லாமே அல்லாஹ்வே’ எனும் சூபித்துவத்தின் பக்கம்தான் அழைக்கின்றார்கள்’ என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் என்னவிருக்கின்றது?
மற்றுமொரு இடத்தில் ஜக்கரிய்யா மௌலானா சொல்கின்றார்கள்…
“அல்லாஹூத்தஆலா குர்ஆனிலே ‘ஹூவல் லாஹிறு’ ‘அவனே வெளியானவன்’ என்று கூறும் வார்த்தை உங்கள் சிந்தனையிலிருந்து நீங்காதிருக்க வேண்டும். நீங்கள் நன்கு சிந்தியுங்கள்! ‘ஒரு சிஷ்யனின் யதார்த்தத்திலும் வெளித்தோற்றத்திலும் அல்லாஹ்வே இருக்கின்றான்!’
இதனை அவன் நன்கு இதயத்தில் பதித்தால் ‘அல்லாஹ்வின் தாத்துதான் (சடம் தான்) உலகத்திலும் (மனிதனாக) வெளியாகியுள்ளது’ என்பதை சிந்திப்பான்.”
(ஸக்காலத்துல் குலூப் ப: 89)
மௌலானா அவர்களின் கொள்கை ‘எல்லாமே அல்லாஹ் தான்’ எனும் சூபிகளின் கொள்கை தான் என்பதில் இனியேனும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியுமா?
அவர்கள், “எல்லாம் இறைவனே!” எனும் கொள்கையில் இருந்தார்கள் என்பதற்கு இதை விடப் பெரிய ஆதாரம் வேறு என்ன வேண்டியிருக்கின்றது?
இது போன்ற தப்லீக் ஜமாஅத்தினரின் அத்வைத கருத்துக்கள் பல இருப்பினும் விரிவுக்கு அஞ்சி இரண்டை மட்டுமே நாம் இங்கு குறிப்பிட்டிருக்கின்றோம்.
நாம் இங்கு கூறவருவது என்னவென்றால்,
வெளிப்பார்வைக்கு தப்லீக் ஜமாஅத்தினர்கள் தியாகங்கள் பல செய்து அழைப்புப் பணி செய்வது போலத் தோன்றினாலும் அவர்களுடைய இஸ்லாமிய அகீதாவோ இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணாக அமைந்திருக்கிறது! அதனால் தான் என்னவோ அவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வேண்டும் என்பதில், நன்மையை ஏவுவதை மட்டும் எடுத்துக் கொண்டு தீமைகளைக் களைவதை விட்டும் மொத்தமாக தவிர்ந்துக் கொள்கிறார்கள்! காரணம் அவர்களும் அந்தத் தீமைகளில் உழல்வது தான்!
தப்லீக் ஜமாஅத்தின் கொள்கைகளில் ஏகத்துவக் கலிமா மற்றும் இறைவனைப் பற்றிய அடிப்படை நம்பிக்கையிலேயே அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரண்படுவதால், அவர்களின் அழைப்பு பணியை ஒருபோதும் இஸ்லாமிய அழைப்புப் பணியாக கருத இயலாது!
மாறாக, ‘வழிகேடுகளை நோக்கி அவர்கள் அழைக்கின்றார்கள்’ என்றே நாம் கருத வேண்டும்!
பிறகடவுளர்களின் திருவிழாக்களுக்கும், ஜெபக் கூட்டங்களுக்கும், சூஃபிமத விழாக்களுக்கும், தர்ஹாக்களின் கந்தூரி விழாக்களுக்கும் சிலர் அழைக்கும் போது, அல்லாஹ்வை மட்டும் வணங்கும் ஒரு முஸ்லிம், அத்தகைய அழைப்புகளை எப்படிப் புறக்கணிப்பானோ அதுபோலவே, ‘வழிகேட்டுக் கொள்கைகளைத் தாங்கிப் பிடித்திருக்கும் தப்லீக் ஜமாஅத்தினர்களின் அழைப்பையும்’ ஒரு முஸ்லிம் கருதி அவற்றையும் புறக்கணிக்க வேண்டும்.
தாங்கள் கொண்டிருக்கும் கொள்கைகளைப் போதிப்பதற்காகவும், அவற்றை மக்களிடம் பரப்புவதற்காகவும் மிஷனரிகள் மற்றும் இன்னபிற அமைப்புகள் தங்களின் பொருளாதாரம், உடலுழைப்பு, நேரம் ஆகியவற்றையெல்லாம் தியாகம் செய்து தொண்டு செய்பவர்களை ஒரு முஸ்லிம் எப்படி நோக்க வேண்டுமோ அதே பார்வையில் தான் தப்லீக் ஜமாஅத்தினர்களின் உழைப்பையும், தியாகத்தையும் பார்க்க வேண்டும்!
காரணம் என்னவெனில், நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியவாறு, ‘ஏகத்துவக் கொள்கைத் தெளிவின்றி – அதாவது அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் செய்யப்படும் எந்த ஒரு அமலும் இறைவனால் நிராகரிக்கப்படும்’ என அல்லாஹ் கூறியிருப்பதால் இத்தகைய தியாகங்களுக்கு இறைவனிடத்தில் எவ்வித பெறுமதியும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!
இவர்களின் தியாகங்களைப் போற்றுபவர்கள், இறைவனின் கட்டளைகளை உதாசீனப்படுத்திவிட்டு இறைவனுக்கு இணை கற்பிக்கும் கொள்கைகளைப் பரப்புவதற்காக செய்கின்ற செய்கின்ற செயல்களைப் பாராட்டியவர்கள் போலாவார்கள்!
அதுமட்டுமல்லாமல், தப்லீக்கில் பயனிப்பவர்களில் அதிகமானவர்களுக்கு தப்லீக் ஜமாஅத்தின் அடிப்படை அகீதாவைப் பற்றியே தெளிவில்லாமல், இருப்பதால் அவர்கள் மூளை சலவை செய்யப்பட்டு அந்த அமைப்பின் செயல்பாடுகளில் ஈடுபடுவதால், நீங்கள் அவர்களைப் பாராட்டுவது என்பது, அவர்கள் தங்களின் வழிகேட்டில் இன்னும் அதிகமாக உழல்வதற்கு அவர்களுக்கு ஊக்கமளிக்கும்!
எனவே, அல்லாஹ்வை மட்டும் வணங்கி ஏகத்துவக் கொள்கையுடைய முஸ்லிமாக வாழும் ஒருவர், தப்லீக் ஜமாஅத் போன்ற வழிகேடான இயக்கங்களின் செயற்பாடுகளில் மயங்கி, அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதோ அல்லது அவர்களின் செயல்களை அங்கீகரிப்பதோ அல்லது அவர்களின் செயல்களை பாராட்டுவதோ ஒருபோதும் கூடாது! காரணம், இது தீமைக்கு, பாவத்திற்கு உதவி, துணை போன குற்றத்தில் சேரும்!
அல்லாஹ் கூறுகின்றான்!
“நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்” (அல்-குர்ஆன் 5:2)
அல்லாஹ் அஃலம்.