ஏகத்துவமும் போலி ஒற்றுமையும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
இன்று முஸ்லிம்கள் உலகளவில் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்ற சமூகமாக, வல்லரசுகளின் கிள்ளுக்கீரையாக ஆகி சகலவிதமான அடக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் என்றால் அதன் காரணங்களுள் மிகமுக்கியமான ஒன்றாக முஸ்லிம்களிடையே காணப்படும் ஒற்றுமையின்மையைக் கூறலாம்.
‘ஒன்று பட்டுபட்டால் உண்டு வாழ்வு’ மற்றும் ஒற்றுமையுடன் இருந்த நான்கு மாடுகள் (அ) எருமைகள் சிங்கத்தை விரட்டிய கதைகளை எல்லாம் பள்ளிப்பருவத்திலே நீதிக்கதைகளில் படித்திருக்கிறோம்.
இஸ்லாமிய மார்க்கத்திலோ, திருமறையும் நபிமொழிகளும் நமக்கு முஸ்லிம்களுக்குள் பிரிவினைக் கூடாது என்றும், கட்டுப்கோப்பாக ஒரே கூட்டமைப்பாக வாழவேண்டும் என்று வலியுறுத்தும் போது நம்மில் பலர் சுயஇலாபத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும், தலைமைப்பதவிக்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காகவும் தனித்தனி குழுக்களாக, இயக்கங்களாக, அகீதா அடிப்படையிலான பிரிவுகளாக பிரிந்து அதன் மூலம் பலகீனப்பட்டவர்களாக ஆகி எதிரிகளின் தாக்குதல்களுக்கு இலகுவாக ஆட்பட்டுவிடுகிறார்கள்.
“நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்” (49:10) என்று முஸ்லிம் சகோதரர்களுக்கிடையில் சமாதானத்தை வலியுறுத்துகின்ற மார்க்கத்திலே இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்பது போல ஒருவரை ஒருவர் புறம்பேசி பகைமைத்தீயை மென்மேலும் வளர்த்து வருவது வேதனையளிக்கக்கூடியதாகவே இருக்கிறது.
தங்களை ஏகத்துவவாதிகள் என்று கூறிக்கொண்டே சுயஇலாபங்களுக்காகப் பிரிந்துசென்று தனித்தனி குழுக்களாக செயல்படுபவர்கள் ‘நீங்கள் பிரிந்துவிடாதீர்கள்’ என்ற இறைவனின் கடுமையான எச்சரிக்கையை மீறிய குற்றத்திற்குள்ளாவார்கள்.
ஒருவர் ஏக இறைவனை மட்டுமே வணக்கத்திற்குரியவராக ஏற்றுக்கொண்டு அவனது திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களுக்கேற்ப தம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வாரானால் அவர் நம்முடைய மார்க்கச் சகோதரராவார். எக்காரணத்தைக் கொண்டும் அவரின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் நாம் நடந்துக்கொள்ளக்கூடாது. அவர் தனிப்பட்ட முறையில் செய்கின்ற தவறுகள் அவருக்கும் அல்லாஹ்வுக்கும் உரியது! அவர் அதற்கு அல்லாஹ்விடம் பதில் கூற கடமைப்பட்டுள்ளார்.
ஆனால் ஒருவர் மார்க்கம் அனுமதிக்காக செயல்களை தாம் செய்வதோடல்லாமல்லாமல் அதை சரிகண்டு பிற மக்களையும் அதை செய்வதற்கு தூண்டினால், ஏக இறைவனை மட்டுமே வணக்கத்திற்கு தகுதியானவன் என்று ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு முஸ்லிம் அதை பார்த்துக் கொண்டு சம்மா இருக்க இயலாது. அவரால் இயலுமாயின் அவர் தம் கையால் தடுக்க வேண்டும். அதற்கு சக்தி பெற இயலவில்லையாயின் அவர் தம் நாவால் தடுக்க வேண்டும். அதுவும் இயலவில்லையாயின் குறைந்தபட்சம் அந்த தீமையை வெறுத்து ஒதுங்கிவிடவேண்டும். இதுவே ஈமானின் குறைந்த பட்சமாகும் என நாம் அறிந்திருக்கின்றோம்.
இந்த வகையில், மார்க்கத்திற்கு முரணான அனைத்து தீமைகளையும் அதிலும் குறிப்பாக பாவங்களிலேயே மிகப்பெரும் பாவமாகிய, அநீதிகளிலேயே இறைவனுக்கு இழைக்கப்டும் மாபெரும் அநீதியாகி ‘ஷிர்க்’ இணைவைப்பை ஒவ்வொரு முஸ்லிமும் முழுமூச்சாக எதிர்ப்பதற்கு முன்வரவேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் மேற்கூறப்பட்ட ஹதீஸின் பிரகாரம் கையால், நாவால் தடுக்க வேண்டும் அல்லது மனதால் அவற்றை வெறுத்து ஒதுங்கவேண்டும்.
இவ்வாறு நாம் செய்ய முற்படுகின்றபோது குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே, நண்பர்களுக்கிடையே, ஊர் ஜமாஅத்தார்களுக்கிடையே பிரிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலர் நாம் கூறுவதை ஏற்காமல், நாம் கூறுவதையும் சட்டைசெய்யாமல் அவர்தம் வேலையைச் செய்வர். சிலர் நாம் கூறுவதை வன்மையாக எதிர்ப்பார்கள். இன்னும் சிலரோ நம்மை வன்மையாக எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல் தாக்குவதற்கும் முற்படுவார்கள். ஆனால், நாம் இவற்றையெல்லாம் பொறுமையுடன் சகித்துக்கொண்டவர்களாக, எக்காலத்திலும் நிதானம் இழக்காமல் இறைவன் மேல் பொறுப்பு சாட்டியவர்களாக நமது பணியினைத் தொடர்ந்து செய்யவேண்டும். சிலர் இந்த ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வன்மையாக செயல்படுவார்கள். இது இஸ்லாம் கூறும் வழிமுறையல்ல!
அல்லாஹ் கூறுகின்றான்:
‘(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (அந்நஹ்ல் 16: 125).
நாம் ஒருவிஷயத்தை மறந்துவிடக்கூடாது. நாமும் அவர்களைப் போல ஒருகாலத்தில் அந்த மாபெரும் பாவங்களிலே உழன்றுகொண்டிருந்தவர்கள் தான் என்பதை நினைவில் இறுத்திக்கொண்டு எந்த அளவிற்கு கண்ணியத்தைப் பேணவேண்டுமொ அந்த அளவிற்கு பேணி நிதானத்துடன் அவர்களை சத்தியத்தின் பால் அழைக்கவேண்டும். நேர்வழிகாட்டும் பொறுப்பு இறைவனிடமே உள்ளது என்பதையும் நமது பொறுப்பு எடுத்துச்சொல்வதே என்பதையும் ஒருகணமும் நாம் மறந்துவிடலாகாது.
இவ்வாறு ஏகத்துவத்தை பிறருக்கு எத்திவைக்கின்ற சமயத்திலே சிலர் தம்மை நடுநிலைவாதிகள் என்று என்று கூறிக்கொண்டு, தாம் சமாதானத்தை விரும்புவதாக கூறிக்கொண்டு ‘நீங்கள் உங்கள் கொள்கைகளைப் பின்பற்றுங்கள்; அவர்கள் அவர்கள் கொள்கைளைப் பின்பற்றட்டும். நாமெல்லாம் சமாதானமாய் வாழலாமே! நமக்கு இன்றைய சூழலில் பொது எதிரிகள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள்! அவர்கள் நம்மை அழிப்பதற்கு கங்ஙகனம் கட்டிக்கொண்டு செயல்பட்டுவருகிறார்கள்! நாம் ஒன்றுபட்டாலே தவிர அவர்களை எதிர்கொள்வது கடினம் என்று கூறி, ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை இடுவார்கள்.
அல்லாஹ்வையும், மறுமையும் உறுதியுடன் நம்பும் ஒருவர் இத்தகைய நடுநிலைவாதிகளின் சொற்களுக்கு மயங்கி அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் வழிகாட்டுதல்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை விட்டுவிடுவாராயின் அவரும் நஷ்டமடைந்தோரில் ஒருவராவார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல் அஸ்ர் 103: 1-3).
இதுபோல் இன்னும் பல வசனங்களும் நபிமொழிகளும் அழைப்புப்பணியைச் செய்வதன் அவசியத்தை நமக்கு நன்கு உணர்த்துகின்றது. பார்க்கவும்: 9:71, 41:33, 3:110, 3L:104, 5:78-79
பொதுஎதிரிகளைச் சந்திக்கின்றபோதும் பொதுவான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றபோதும் ஒன்றுபட்டு இயங்குவதில் எவ்வித தவறுமில்லை! மாறாக அது வரவேற்கக்கூடியதாகவே இருக்கின்றது. ஆனால், அதை காரணமாக வைத்து நமது ஏகத்துவப் பிரச்சாரத்தை நிறுத்துவது என்பது எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே!
ஷிர்க் மற்றும் பித்அத் புரிபவர்களின் செயல்களை சுட்டிக்காட்டப்படும் போது எதிர்ப்புகள் வருவது இயல்பே! நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் அருளப்பட்டு ஏறத்தாழ முதல் பத்தாண்டுகள் இணைவைப்புக்கு எதிராகவே பிரச்சாரம் செய்தார்கள் என்பதையும் நாம் நினைவில் வைக்கவேண்டும். மக்கத்துக்காஃபிர்கள் தமது மக்களிடைய பிரிவினைகளை ஏற்படுத்துகிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் மீது குற்றம் சுமத்தவே செய்தார்கள். பிரிவினைகள் ஏற்படுமே என்று நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தை எள்முனையளவும் நிறுத்தவில்லை என்பதையும் நாம் நினைவில் கூறவேண்டும்.
நாங்கள் சமாதானப்புறாக்கள் என்று கூறிக்கொண்டு சிலர் குர்ஆன் வசனங்களையும் ஹதீதுகளில் சிலவற்றையும் கூட தமக்கு ஆதாரமாக கூறி, ஏகத்துவப் பிரச்சாரத்தை கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டும் என்று கூறமுற்படுவர்! (உதாரணம் ஹாரூன் (அலை) அவர்கள் பற்றிய வசனம்). மார்க்கத்தில் போதிய தெளிவில்லாத சிலர் அவர்கள் கூறுவதும் சரிதானே என்று இந்த போலி ஒற்றுமை வாதத்தில் மயங்கியவர்களாக இறைவன் நமக்கிட்ட கட்டளையை நிறைவேற்றுவதை விட்டும் தவிர்ந்துக் கொண்டால் நாம் தான் நஷ்டவாளியாக நேரிடும்.
நடுநிலைவாதிகள் என்றும் சமுதாய ஒற்றுமைக் காப்போம் என்றும் கூறிக்கொண்டு ஷிர்க் பித்அத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் இவர்கள் இந்த ஒற்றுமையின் மூலம் எந்த வெற்றியை நாடப்போகின்றார்கள்? இறைவனுக்கு இணைவைப்பவர்களின் அனைத்து நல்லறங்களும் மறுமையில் பயனளிக்காது போய்விடும் நிலையில் இவர்கள் இம்மையில் வெற்றிபெற்று என்ன பிரயோசனம்? அழியா மறுமை வாழ்விற்கு பதிலாக அழியும் இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுக் கொண்டவர்களின் வாய்ஜாலங்களுக்கு மயங்கி ஏகத்துவப்பிரச்சாரத்தை நிறுத்தியவர்கள் இறைவனை பயந்துக்கொள்ளட்டும்.
இன்னும் சிலரோ நமது சமூகத்தவர்கள் ஏழைகளாகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களின் ஏழ்மையைப் போக்கி அவர்களுக்கு படிப்பறிவை ஊட்டினால் அவர்கள் தாமாகவே சீர்திருந்திவிடுவார்கள் என்றும் காரணம் கூறுவர். இதுவும் அர்த்தமற்ற வாதமாகும். நபி (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும் செல்வந்தர்களாகவா இருந்தார்கள்? மாற்றுத்துணிக்கு கூட வழியில்லாமல் தானே பல சஹாபாக்கள் வறுமையில் உழன்றனர். ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டதற்குப் பிறகே அவர்கள் சிறந்த கல்விமான்களாகத் திகழ்ந்தார்கள் என்பதை நாம் படிக்கவில்லையா?
‘உங்களை இரவும் பகலைப் போன்ற வெள்ளை வெளேர் என்கின்ற தெளிந்த நிலையில் விட்டுச் செல்கின்றேன். தெளிவான இம்மார்க்கத்திலிருந்து எனக்குப் பின்னர் அழிந்து நாசமாகுபவனைத் தவிர வேறு எவனும் வழி கெட மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)
எனவே ஷிர்க் மற்றும் பித்அத்துக்களைத் தவிர்ந்த ஏகத்துவ கொள்கையை உடைய அகீதாவே மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த அகீதாவை கண்டுகொள்ளாமல் இதிலே வளைந்துக் கொடுத்துக் கொண்டு அல்லது சமரசம் செய்துக்கொண்டு, நாம் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கவேண்டும் எனவும், நமக்கெதிராக செயல்படுபவர்களை நாம் எதிர்கொள்ள வேண்டும் எனவும் கூறி அகீதா வேறுபாடுகளை மறந்து நாம் ஒன்றுபட வேண்டும் எனக்கூறப்படுவதெல்லாம் போலி ஒற்றுமை என்பதை நாம் உணரவேண்டும்.
ஏனென்றால், இறைவனுக்கு இணை கற்பிப்பவர்கள் ஒரு காலத்திலும் ஏக இறைவனை ஏற்றுக் கொண்டிருப்பவர்களுடன் ஒற்றுமையாக இருக்க இயலாது. ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தமது கொள்கையில் சமரசம் செய்துகொண்டு இணைவைப்பவர்களிடம் எவ்வித ஏகத்துவப் பிரச்சாரத்தையும் செய்யாது இருந்தால் மட்டுமே அவர்கள் இவர்களோடு ஒன்றுபட வாய்ப்பு உள்ளது. இல்லையேல் இது ஒருகாலும் சாத்தியமாகாது.
“நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்” (5:82)
எனவே சகோதர, சகோதரிகளே! நிரந்தர மறுமையின் வெற்றிக்கு வழிவகுக்கின்ற ஏகத்துவப் பிரச்சாரத்தை, நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கின்ற இணைவைப்பிலே உழன்றுக் கொண்டிருக்கின்ற நமது பெற்றோர், சகோதர, சகோதரிகள், உறவினர், ஊர் ஜமாத்அத்தார்களிடம் செய்து அவர்களை அம்மாபெரும் பாவத்திலிருந்து மீட்டெடுக்க முயற்சிப்போமாக! இவ்வாறு செய்யும் வேளையில் சமுதாய ஒற்றுமை என்ற போலி ஒற்றுமை பேசும் போலிகளையும் இனம்கண்டு அவர்களை ஒதுக்கிவிட்டு நமது முயற்சியில் தொடர்ந்து செயல்பட அல்லாஹ் அருள்புரிவானாகவும்.
//”நாம் ஒருவிஷயத்தை மறந்துவிடக்கூடாது. நாமும் அவர்களைப் போல ஒருகாலத்தில் அந்த மாபெரும் பாவங்களிலே உழன்றுகொண்டிருந்தவர்கள் தான் என்பதை நினைவில் இறுத்திக்கொண்டு எந்த அளவிற்கு கண்ணியத்தைப் பேணவேண்டுமொ அந்த அளவிற்கு பேணி நிதானத்துடன் அவர்களை சத்தியத்தின் பால் அழைக்கவேண்டும். நேர்வழிகாட்டும் பொறுப்பு இறைவனிடமே உள்ளது என்பதையும் நமது பொறுப்பு எடுத்துச்சொல்வதே என்பதையும் ஒருகணமும் நாம் மறந்துவிடலாகாது”//
//”எனவே ஷிர்க் மற்றும் பித்அத்துக்களைத் தவிர்ந்த ஏகத்துவ கொள்கையை உடைய அகீதாவே மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த அகீதாவை கண்டுகொள்ளாமல் இதிலே வளைந்துக் கொடுத்துக் கொண்டு அல்லது சமரசம் செய்துக்கொண்டு, நாம் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கவேண்டும் எனவும், நமக்கெதிராக செயல்படுபவர்களை நாம் எதிர்கொள்ள வேண்டும் எனவும் கூறி அகீதா வேறுபாடுகளை மறந்து நாம் ஒன்றுபட வேண்டும் எனக்கூறப்படுவதெல்லாம் போலி ஒற்றுமை என்பதை நாம் உணரவேண்டும்”//
இந்த வரிகளை, ஒவ்வொரு இஸ்லாமிய (அழைப்பாழ)னும் அவசியம் தன் மனத்தில் இருத்திக் கொள்வது அவசியம். மிகவும் அருமையான பதிவு.கட்டுரையாளருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. அதே நேரம் கட்டுரையாளர் தன் கட்டுரையில் கையான்டுள்ள சில நுனுக்கங்கள் பிரம்மிக்கத்தக்கது.அனைவருக்கும் இதனை அனுப்பலாம்.
நன்றி ஜஸாக்கல்லாஹ் ஹைர்
அன்ஸார்