இஸ்லாம், கேள்வி பதில்கள் பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)

Q1) முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் ஏன் நோன்பு நோற்க வேண்டும்?

A) ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியிருக்கின்றான்.

“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன்  2:183)

“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன்  2:185)

Q2) ரமலான் நோன்பு ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான வணக்கமா?

A) இஸ்லாம் மார்க்கம் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதை முஸ்லிம்கள் அவசியம் நிறைவேற்ற வேண்டிய ஐம்பெரும் கடமையான வணக்கங்களுள் ஒன்றாக ஆக்கியிருக்கிறது.

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Q3) ரமலான் மாதத்தின் சிறப்புகள் யாவை?

A) ரமலான் மாதத்தின் சிறப்புகள்:

  1. நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது.(திர்மிதீ)
  2. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. (திர்மிதீ)
  3. ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.(நஸயீ)
  4. ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும்.(திர்மிதீ)
  5. ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார். (திர்மிதீ)
  6. அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.(புகாரி)
  7. நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். (நஸயீ)
  8. ஆயிரம் மாதங்களை விட மகத்துவமிக்க ஓர் இரவு (லைலத்துல் கத்ர்) இம்மாதத்தில் தான் இருக்கிறது.
  9. ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது
  10. ரமலானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து சிலரை விடுதலை செய்கின்றான். (இப்னுமாஜா)
  11. புனிதமிக்க அல்-குர்ஆன் ரமலானில் தான் இறக்கியருளப்பட்டது. (2:185)

Q4) நோன்பு நோற்பதன் சிறப்புகள் யாவை?

A) நோன்பு நோற்பதன் சிறப்புகள்

  1. நோன்பு கெட்ட செயல்களில் இருந்து பாதுகாக்கும் (புகாரி)
  2. நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகும். (அஹ்மத்)
  3. நோன்பு சுவர்கத்திற்குள் நுழைவதற்கு காரனமான அமலாக இருக்கிறது (நஸயீ)
  4. நோன்பு அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் (அஹ்மத்)
  5. நோன்பாளிகள் மட்டுமே ரய்யான் என்னும் வாசல் வழியாக சுவனத்திற்குள் பிரவேசிப்பார்கள் (புகாரி)
  6. நோன்புக்குரிய கூலியை அல்லாஹ்வே கொடுக்கின்றான். (திர்மிதி)
  7. நோன்பு தக்வாவுக்கு (அல்லாஹ்வை பயப்படுவதற்கு) முக்கிய காரணமாக அமைகின்றது. (2:183)
  8. நோன்பாளியின் வாய்வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரி வாடையை விட மிக நறுமணமுள்ளது. (புகாரி)
  9. நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை அவருக்காக மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றனர்.
  10. நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. (பைஹகி)

Q5) நோன்பு யாருக்கு கடமை?

A) புத்தி சுவாதீனமுள்ள, பருவமடைந்த, ஊரில் இருக்கக்கூடிய நோன்பு நோற்க சக்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் நோன்பு நோற்பது கடமையாகும்.

Q6 ) நோன்பை விடுவதற்கு யாருக்கு சலுகை இருக்கிறது? இந்த சலுகைகளையுடையவர்கள் என்ன நோன்பு நோற்பதற்கு பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்?

A) நோன்பை விட்டுவிட சலுகைகளையுடையவர்கள்:

  1. தற்காலிக நோயாளி (குணமாக கூடிய நோயாளி): நோன்பு நோற்பது இவருக்கு சிரமமாக இருந்தால் இவருக்கு நோன்பை விட்டுவிட சலுகை இருக்கிறது. ஆயினும் விடுபட்ட நோன்பை பின்னர் நோற்க வேண்டும்.
  2. நிரந்தர நோயாளி: நோய் குணமாகாது என்ற அளவிற்கு நிரந்தர நோயாளியாக இருப்பவர் நோன்பு நோற்பது கட்டாயமில்லை. ஆயினும் அவர் அதற்கு பகரமாக ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
  3. பயணி: பயணிகளுக்கு அவர் தன் ஊருக்கு திரும்பி வரும்வரை நோன்பை விட்டுவிட சலுகையிருக்கிறது. பிரயாணி தன் பிரயாணத்தை முடித்துக் கொண்டதும் விட்ட நோன்புகளை நோற்க வேண்டும்
  4. கர்ப்பிணிப்பெண் மற்றும் பாலூட்டும் தாய்: இவர்கள் நோன்பு நோற்பதினால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதும் ஆபத்து ஏற்படுமென்று பயந்தால் நோன்பை விட்டுவிடலாம், இவர்கள் குழந்தையை பெற்றெடுத்ததற்கு பிறகு அல்லது பாலூட்டியதற்கு பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
  5. நோன்பு நோற்க இயலாத முதியவர்கள்: இவர்களுக்கு நோன்பை விடுவதற்று அனுமதி உண்டு. இவர்கள் ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு வீதம் உணவளிக்க வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவன்.

Q7) மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் என்ன செய்யவேண்டும்?

A) மாதவிடாயின் போது நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது. மாதவிடாயின் போது விடுபட்ட நோன்புகளை ரமலானுக்குப் பிறகு நோற்க வேண்டும்.

Q8) ரமலான் மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றனவா?

A) “ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நகரத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதீ, இப்னுமாஜா)

Q9) ரமலானின் துவக்கம் எப்போது?

A) பிறையைக் கண்டே நோன்பு நோறுங்கள், நோன்பை விடவும் செய்யுங்கள். மேகம்(பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

Q10) சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்கலாமா?

A) ரமளான் மாதத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்  சந்தேகமான நாட்களில் சுன்னத்தான நோன்பு நோற்கக்கூடாது.

“ரமளான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்கு முன்னால் உங்களில் யாரும்(சுன்னத்தான) நோன்பு நோற்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்பவர் நோற்றுக் கொள்ளட்டும்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரி)

Q11) நோன்பை முறிக்கும் விஷயங்கள் யாவை?

A) நோன்பை முறிக்கும் விஷயங்கள்:

  1. உடலுறவில் ஈடுபடுதல்
  2. சாப்பிடுவது, குடிப்பது
  3. மாதவிடாய் ஏற்படுதல்
  4. பிரசவ கால இரத்தம் வெளியேறுதல்
  5. வேண்டுமென்றே வாந்தியெடுப்பது
  6. முத்தமிடுதல், சுய இன்பம் போன்றவற்றின் மூலம்  இந்திரியம் வெளிப்படுத்துவது
  7. நரம்பு வழியாக சத்தூசி போன்றவற்றை உட்கொள்ளுதல்
  8. இரத்ததானம் போன்றவற்றிக்காக இரத்தம் வெளியேற்றுதல்

Q12) நோன்பை முறிக்காத செயல்கள் யாவை?

A) நோன்பை முறிக்காத செயல்கள்:

  1. வேண்டுமென்று என்றில்லாமல் மறதியாக சாப்பிடுவது, குடிப்பது
  2. கணவின் மூலம் விந்துவெளிப்படுதல்
  3. இரத்தப் பரிசோதனைக்காக குறைவான இரத்தம் எடுத்தல்
  4. சுயவிருப்பமின்றி காயம், பல் பிடுங்குதல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் தானாக வெளியாகுதல் (மேற்கண்டவைகளை மறதியானால் அல்லாமல் வேண்டுமென்றே செய்தால் நோன்பு முறிந்துவிடும்.)
  5. குளித்தல், நீந்துதல்
  6. வெப்பத்தைத் தனித்துக்கொள்வதற்காக தண்ணீரை உடலில் தெளித்துக்கொள்வது
  7. பல் துலக்குதல் (விரும்பத்தக்கது)
  8. வாய் வழியாக உட்கொள்ளாத வகையில் வைத்தியம் செய்துகொள்வது (உ.ம். ஊசி போடுவது, கண், மூக்கு, காது ஆகியவற்றிக்கு சொட்டு மருந்து இடுதல்)
  9. வயிற்றுக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்ப்பது
  10. வாய்கொப்பளிப்பது
  11. வயிற்றினுள் தண்ணீர் சென்றுவிடாத வகையில் பக்குவமாக நாசிக்கு தண்ணீர் செலுத்துவது.
  12. வாசனைப் பொருட்களை உபயோகிப்பது, அவற்றை நுகர்வது
  13. நேரம் தெரியாது, சூரியன் மறைந்துவிட்டதாக எண்ணி, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது பஜ்ரு நேரம் வரவில்லை என்று எண்ணி, பஜ்ர் நேரம் வந்ததற்குப் பின்னரோ, சாப்பிட்டு விட்டால் நோன்பு முறியாது. எனினும் சரியான நேரத்தை தெரிந்து விட்டால், உடனே உணவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  14. கண்ணுக்கு சுருமா இடுதல்

Q13) நோன்பின் சுன்னத்துக்கள் யாவை?

A) 1) ஸஹர் செய்தல் 2) விரைந்து நோன்பு துறத்தல் 3) துஆச் செய்தல்

Q14) ஸஹர் செய்வதன் சிறப்பு யாது?

A) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ஸஹர் செய்யுங்கள்; ஏனெனில் ஸஹர் உணவில் பரக்கத் உள்ளது’ (புகாரி, முஸ்லிம்)

இரவின் கடைசி வரை ஸஹர் செய்வதை பிற்படுத்துவது சுன்னத்தாகும்.

Q15) நோன்பின் நிய்யத்தை எப்போது வைக்க வேண்டும்?

பர்ளான நோன்பு நோற்கும் விசயத்தில் பஜ்ர் உதயமாவதற்கு முன் நோன்பிற்குரிய நிய்யத்தை வைத்துக்கொள்வது கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘யார் நோன்பு நோற்க பஜ்ருக்கு முன்னால் நிய்யத்தை சேர்த்து வைக்கவில்லையோ அவரது நோன்பு கூடாது’ (அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி), ஆதாரம் : அபூதாவுது, திர்மிதி, நஸயீ)

Q16) நோன்பின் நிய்யத்தை எவ்வாறு வைக்க வேண்டும்?

நிய்யத் (எண்ணம்) வைப்பது உள்ளத்தில் தான்! வாயால் அல்ல!

Q17) நோன்பாளிகள் தவிர்ந்துக்கொள்ள வேண்டியவைகள் யாவை?

யார் கெட்ட, பொய் பேச்சுக்களையும், அதை செயல்படுத்துவதையும் விட்டுவிடவில்லையோ அவன் நோன்பு நோற்று அவனது சாப்பாட்டையும் குடிப்பையும் விட்டு பசியில் இருப்பதனால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை!’ (புகாரி)

Q18) நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ ஏற்றுக்கொள்ளப்படுமா?

A) “நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ மறுக்கப்படமாட்டாது” (இப்னுமாஜா)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” மூன்று துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ, பயணியின் துஆ” (பைஹகி)

Q19) நோன்பு திறந்தவுடன் கூறவேண்டிய துஆ எது?

A) ‘தஹபள் ளமவு வப்தல்லதில் உரூக் வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’

பொருள்: தாகம் தனிந்தது. நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்.

Q20) எதைக்கொண்டு நோன்பு திறக்க வேண்டும்?

A) கனிந்த பேரித்தம் பழம் மூலம் நோன்பு திறப்பது சுன்னத் ஆகும். அது கிடைக்காவிடில் காய்ந்த பேரீத்தம் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் தண்ணீர் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் கிடைப்பதைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.

Q21) ரமலான் இரவுத் தொழுகையின் (தராவீஹ்) சிறப்பு என்ன?

A) ‘எவர் ரமலான் இரவில் ஈமானுடனும் நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடனும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (புகாரி, முஸ்லிம்)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
19 thoughts on “இஸ்லாம், கேள்வி பதில்கள் பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)”
  1. Assallamu Allaikkum ( Var ….)
    It is very useful for Ramalan months.

    Thanks for your tips .

  2. அஸ்ஸலாமு அழைக்கும் இந்த தளம் மிக உபயோகமாக உள்ளது இதை தொலைகாட்சியல் ஒளிபரப்பினால் அதிக பேர் பயன் அடைவார்கள்

  3. Assallamu Allaikkum,

    This tips is very useful for all. If is it possible means please play for TV Channel for this Ramadan Month.

    Shajeeda Jaffar

    Thanks for

  4. puthithaga islam mathathai yetravarkal nonmbu vaikalama tholukai mulumaiyaga katrukollamal?

    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

      ஒரு முஃமினுக்கு அவன் இஸ்லாத்தை தழுவியது முதல் அவன் மீது தொழுகை, நோன்பு முதற்கொண்ட அனைத்தும் கடமையாகிறது. ஆணாக இருந்தால் பள்ளியில் சென்று இமாமைப் பின்தொடர்ந்து தொழவேண்டும். பெண்ணாக இருந்தால் வீட்டிலும் தொழலாம்; விரும்பினால் பள்ளிக்குச் சென்றும் தொழலாம்.

      தொழுகை முறை என்பது மிக எளிதானது. முஸ்லிமாக மாறிய அடுத்த கணமே அவன் மீது தொழுகை கடமையாகிறது. படிப்படியாக ஒருவர் முறைப்படி தொழும் முறையை பின்னர் கற்றுக்கொள்ளலாம்; அதற்காக நான் முiறாக தொழும் முறையைக் கற்றுக்கொண்ட பிறகு தான் தொழுவேன் என்பதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை!

      அதுபோல தான் நோன்பும். ஒருவர் இஜ்லாத்தை ஏற்றவுடன் ரமலான் வந்துவிட்டால் அவர் மீது நோன்பு கடமையாகிறது.

  5. These are very useful tips for Ramalan month.
    Allah may accept all our fastings…

    Aameen….

  6. பெண்கள் ரமளான் மாதத்தில் விடப்பட்ட நோன்பை மற்ற நாட்களில் பிடிக்க நினைத்தால் கணவன் அனுமதித்தால் தான் பிடிக்கவேண்டுமா?

    1. ரமளான் மாதத்தில் விடப்பட்ட நோன்பை பொருத்தவரை அது சுன்னத்தான நோன்பு அன்று அந்த நோன்புகளை கட்டாயம் ஒரு பெண் மீட்டிப் பிடித்து ஆகவேண்டும். எனவே இந்த விடயத்தில் கணவனின் அனுமதி கேட்க வேண்டியதில்லை. சுன்னத்தான நோன்புகளை நோற்கும் போது கணவன் ஊரில் இருந்தால் அனுமதி கேட்குமாறு நபியவர்கள் வழிகாட்டுகின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  7. சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது இடையில் தண்ணீர் அருந்தக் கூடாது என்று சிலர் சொல்கின்றார்கள், சிலர் சாப்பிட்டு முடித்த பின் தண்ணீர் அருந்தக் கூடாது என்று சொல்கின்றார்கள்.

    இது உண்மைதானா?

    1. நேரடியாக அல் குர்ஆனிலோ, ஹதீஸிலோ தடைகள் வந்ததாக எந்த ஒரு சான்றும் இல்லை. என்றாலும் சில நல்லறிஞர்கள் இது தொடர்பாக தமது கருத்தை பதிவு செய்துள்ளனர். இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடிப்பது சுகாதார ரீதியில் கேடுகளை விளைவிக்கும் என்கின்றார். மேலும் இப்னு முப்லிஹ் (ரஹ்) அவர்களும் பழங்கள் சாப்பிடும் போது தண்ணீர் அருந்தக் கூடாது என்று தனது “அல் ஆதாபுஷ் ஷரஇய்யா” எனும் புத்தகத்தில் (3/214) பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
      மேலும் இமாம் அல் மர்தாவி (ரஹ்) மற்றும் இமாம் இப்னுல் உஸைமீன் (ரஹ்) போன்றோரும் வழமையாக சப்பிடும் போது தண்ணீர் அருந்தும் பழக்கம் இல்லாதவர் இடையில் தண்ணீர் குடிப்பது சுகாதார ரீதியாக சமீபாட்டு தொகுதியில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர். “அஷ் ஷரஹுல் மும்திஃ” (12/366)
      ஆனால் நவீன மருத்துவ ஆய்வுகளில் இந்த விடயத்தில் கருத்து முரண்பாடுகளை காணமுடிகின்றது.
      அல்லாஹ் மிக அறிந்தவன்.
      அரபு மூலம் நன்றி: https://islamqa.info/ar/129300

      1. வழமைக்கு மாற்றமாக சாப்பிட்டு முடிந்த உடனே தண்ணீர் அருந்துவதும் கூடாது என சிலர் குறிப்பிடுவதாக இமாம் இப்னுல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் மேற் சொன்ன புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்கள்.

  8. உங்களில் எவரேனும் துஆச் செய்தால் வ­யுறுத்திக் கேட்கட்டும்! நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்பந்தம் செய்பவன் எவனுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி­) நூல்: புகாரி 6338, 6339, 7464, 7477

    அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான். அல் குர்ஆன் (3. 159)

    அல்லாஹ் நம்மை நேசிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்லாஹ்விடம் வற்புறுத்திக் கேட்க்காமல் அவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டால், நம்முடையே துஆ அங்கீகரிக்க படாதா?

    இந்த இரண்டிற்கும் தெளிவுப்படுத்தவும்.

    1. உங்களில் எவரேனும் துஆச் செய்தால் வலி­யுறுத்திக் கேட்கட்டும்! என்று தானே ஹதீஸில் வந்துள்ளது. எனவே அடியான் அல்லாஹ்விடம் வலியுறுத்திக் கேட்பதில் தவறு கிடையாது. ஆனால் நீ விரும்பினால் தா! என்று கேட்பதே தவறானது.

      அவ்வாறே அடியான் அல்லாஹ்விடம் முழுமையாக பொறுப்புச் சாட்டிவிட்டாலும் குறித்த காரியத்தை நிறைவேற்றித் தர அல்லாஹ் போதுமானவன்.

      மேலும் அவன் வாக்களித்த நேசமும் எமக்கு கிடைத்திடும். இன்ஷா அல்லாஹ்.

  9. அதிக அவதூறுக்கு ஆளாகிய ஒரு பெண் எதை ஓதி துஆ செய்தால் உடனே அவற்றிலிருந்து விடுப்படலாம்?

    1. நாம் அறிந்த வரை பிரத்தியேகமான துஆக்கள் எதுவும் வந்ததாக தெரியவில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன். ஆனால் தாராளமாக தான் அனியாயம் இழைக்கப்பட்டிருப்பின் குறித்த நிலையை அல்லாஹ்விடம் முன்னிருத்தி கேட்கும் போது அதனை அல்லாஹ் ஏற்று பதிலளிப்பான். ஆனால் அவசரமாக பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. குறித்த சோதனையை எப்போது போக்க வேண்டும் என்ற அறிவு அல்லாஹ்விடம் உள்ளது என்பதை நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

  10. கிரகணம் பிடித்திருக்கும் நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் அதை நேரடியாக பார்க்க கூடாது, பார்த்தால் வயிற்றில் உள்ள குழைந்தைக்கு ஆபத்து என்று சொல்கிறார்கள்.
    அது உண்மையா?
    அதை பற்றி நபி (ஸல்) அவர்கள் எதாவது கூறி இருக்கிறார்களா?
    நான் நேரில் பார்த்து விட்டேன். பயமாக இருக்கிறது.
    சற்று வேகமாக பதில் சொல்லுங்கள்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

      ‘கிரகணம் பிடித்திருக்கும் நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் அதை நேரடியாக பார்த்தால் வயிற்றில் உள்ள குழைந்தைக்கு ஆபத்து’ என்பது ஒரு மூட நம்பிக்கை!

      மேலதிக விளக்கத்திற்கு பின்வரும் மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்களின் ஆடியோவை கேட்கவும்.

      ஆடியோ: Play

  11. குலா’க்கொடுப்பதற்கு உண்டான சட்டத்தை விவரிக்கவும்

  12. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). நோன்பு வை‌த்து வி‌ட்டு சுபுஹு தொழுதுவிட்டு தூங்கி விட்டேன் தூக்கத்தில் விந்து வெளியேறி விட்டது இதனால் நோன்பு முடியுமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed