ஸதக்கத்துன் ஜாரியா – நிலையான தர்மம்

ஒருவன் உயிருடன் இருக்கும் வரையில் தான் அவனால் அமல்களைச் செய்ய இயலும்! அவன் மரணமடைந்துவிட்டால் அவனால் எந்தவித அமல்களையும் செய்ய இயலாது! அதே நேரத்தில், அவன் உயிருடன் இருக்கும் செய்த சில காரியங்களின் மூலம் அவன் இறந்த பிறகும் நன்மைகள் அவனுக்கு வந்து சேர்ந்துக்கொண்டே இருக்கும்! இத்தகைய நல்லறங்களைத் தான் சதகத்துன் ஜாரியா – நிலையான தர்மம் என்றழைக்கப்படுகின்றது!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும்.

1.நிலையான தர்மம்
2.பயனுள்ள கல்வி
3.இறைவனிடம் பிரார்த்திக்கும் ஸாலிஹான குழந்தைகள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் 3084

இதுகுறித்து அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

“நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.” (அல்-குர்ஆன் 36:12)

“அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.” (அல்-குர்ஆன் 2:261)

நபி (ஸல்) அவர்கள் கூறிய, ஒருவரின் மரணத்திற்குப் பிறகும் தன்மைத் தரக்கூடிய சதகத்துன் ஜாரியா எனப்படும் நிலையான தர்மங்களில் சிலவற்றைப் பார்ப்போம்!

கிணறுகள் அமைத்தல், நீர்நிலைகளை ஏற்படுத்துதல்:

‘அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டேன். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅது பின் உபாதா (ரலி); நூல்: நஸயீ 3604, 3606

பலன் தரும் மரங்களை நடுதல்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை.

அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்!

அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்!

அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்!

அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்!

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: 3159

எந்த ஒரு முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டு, அம்மரத்திலிருந்து மனிதர்களோ, மற்ற விலங்கினங்களோ சாப்பிட்டால் அது அவர் செய்யும் தர்மமாகக் கருதப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்கள்: புகாரி 6012, 2320, முஸ்லிம் 2904

ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவரது தாயார் இறந்து விட்டார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் வெளியே சென்றிருந்த போது என் தாய் இறந்து விட்டார். அவருக்காக நான் ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு ஏதும் பயன் இருக்குமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை அவர் சார்பில் நான் தர்மம் செய்கிறேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன் என அவர் கூறினார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2756, 2762, 2770

உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்” என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்’’ என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்-926

இது தவிர மேற்கண்ட ஹதீஸ் ஆதாரஹ்களின் அடிப்படையில்,

– பள்ளிவாசல் கட்டுவதற்கு நிலம் வாங்க உதவுவது,
– பள்ளிவாசல் கட்டுதல்,
– மக்களின் பயன்பாட்டிற்காக நீர்நிலைகளை ஏற்படுத்துவது,
– இம்மை, மறுமைக்குப் பயன் தரும் கல்விக் கூடங்களை நிறுவுவது,
– அநாதை இல்லங்களை நிறுவுவது, அதற்கு உதவி செய்வது

போன்ற நற்காரியங்கள் அனைத்தும் மரணத்திற்குப் பின்னரும் நன்மைத் தரக்கூடியவற்றில் சேரும் என்பதை அறியலாம். மரணித்தவர்களுக்காக உயிருடன் இருக்கும் வாரிசுகளும் இறந்த தங்களின் பெற்றோர்களுக்காக இத்தகைய நிலையான தர்மங்களைச் செய்து அவர்களுக்கு நன்மையைச் சேர்க்கலாம்.

அல்லாஹ் அஃலம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed