துஆ ஓர் மிகச்சிறந்த வணக்கம்

‘தவா’வை விட ‘துஆ’ படா என்பார்கள்.
‘தவா’ (மருந்து) வை விட ‘துஆ’ தான் சிறந்தது.

‘துஆ ஓர் வணக்கம்’ ஆதலால் அதைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.

1) வணக்கங்களில் சிறந்தது எது?
2) இறந்தவர்களிடம் ஏன் பிரார்திக்கிறார்கள்?
3)  தவறுசெய்தவர்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுமா?
4) நாம் காலம் காலமாக பிரார்த்தித்து பயனளிக்கவில்லையே ஏன்?
5) துஆ வை எப்படி கேட்க வேண்டும்?
6) துஆ விற்கான ஒழுங்குகளை கடைபிடித்தும் துஆ  அங்கிகரிக்கப்படவில்லை என எண்ணலாமா?

இந்த தலைப்புகளில் நாம் பார்ப்போம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘பிரார்த்தனைதான் வணக்கமாகும்’ (அபூதாவுது)

‘வணக்கங்களில் தலை சிறந்தது இறைவனிடம் பிரார்ப்பது தான்’ (ஹாகீம்)

வணக்கம் இறைவனுக்கு மட்டுமே!

‘பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை’ ( ஹாகீம்)

அல்லாஹ் கூறுகின்றான்:

“(நபியே) எனது அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நான் அருகில் இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன்; அவன் என்னிடமே கேட்கட்டும்;  என்னையே நம்பட்டும். அவர்கள் நேர் வழியடைவார்கள் (எனக் கூறுவீராக)” (அல்-குர்ஆன்  2:186)

“நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் பிடரி நரம்பை விட அவனுக்கு மிக அருகில் நாம் இருக்கின்றோம்.” (அல்-குர்ஆன் 50:16)

இறந்தவர்களிடம் ஏன் பிரார்திக்கிறார்கள்?

பேராற்றலுடைய அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களை வணங்குவதும்,அவர்களிடம் பிரார்திப்பதும் ஏன்? இதற்கு அடிப்படை காரணம் என்ன?

இறைவன் மீதும் அவனது ஆற்றலின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பது காரணமா? என்றால்  நிச்சயமாக இல்லை.

‘இறைவன் மிக பெரியவன்; பேராற்றலுடையவன் நினைத்ததை முடிப்பவன். ஆனாலும், மிகச் சாதாரணமான நிலையில் உள்ள நாம், இறைவனை நெருங்க முடியாது! அவனை நெருங்குவதற்கும், நேரடியாக பேசுவதற்கும் நமக்கு தகுதி கிடையாது! அவனை விட்டு நாம் வெகு தொலைவில் இருக்கிறோம்’ என்ற தவறான நம்பிக்கையே இதற்கு காரணம்.

ஆனால், ‘இறைவன் மிக அருகில் இருக்கிறேன்’ என்று மேலே குறிப்பிட்ட (50:16)  வசனத்தின் மூலம் கூறுகிறான்.

மேலும் சிலர்,

‘இறைவன் மிக அருகில் இருப்பது உண்மைதான்!  ஆனால், அவனிடம் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் நாங்கள் நடந்து கொள்ளவில்லை. அவனது கட்டளைகளை மீறியுள்ள நாம் நேரடியாக கேட்டால், அவன் கோபித்துக் கொள்வானே’ என்று சிலர் இறந்தவர்களை நாடுவடுவதற்காக காரணங்களைக் கூறி வாதிடுகிறார்கள். இந்த வாதம் போலித்தனமானது என்பதை  2:186 வசனத்தின் மூலம் அல்லாஹ் கூறுகின்றான்.

மனிதனுக்கு மிக அருகில் இறைவன் இருக்கும் போது மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையில் எவரும் தேவையில்லை.

இறைவன் மிக அருகில் இருக்கிறான் என்று நம்புவதால் என்ன பயன்?

இறைவன் மிக அருகில் இருக்கின்றான்; நம் பிரார்தனையை கேட்கின்றான்; நம் மனதை அறிகின்றான் என்று நம்புவதால் , மனிதன் அடையக்கூடிய நன்மைகள் ஏராளம், ஏராளம்!

– இறைவன் மிக நெருங்கிய இடத்தில் இருக்கின்றான் என்று நம்பக்கூடியவர்கள் எவர் முன்னிலையிலும் தனது சுய மரியாதையை இழக்கமாட்டார்கள்.
– எவர் பொருளையும் முறைகேடாக பெற முயற்சிக்க மாட்டார்கள்!
– யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள்.
– திருடமாட்டார்கள்.
– கொலை செய்ய மாட்டார்கள்.
– பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட மாட்டார்கள்.

‘இறைவன் பிடரி நரம்பைவிட மிக அருகில் இருக்கின்றான்’ என்ற நம்பிக்கையால் மனிதன் அடையக்கூடிய நன்மைகள் ஏராளம், ஏராளம்!

நாம் கேட்கும் எந்த பிரார்த்தனைகளுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என சிலர் கூறுகின்றனர்.

1) பிரார்த்தனை செய்வதற்குறிய ஒழுங்குகளை கடைபிடிக்காதது (இன்று ஒழுங்குகள் கடைபிடிக்கப்படுவதில்லை)

2) பிரார்த்தனை ஏற்கப்படுவதற்குரிய நிபந்தனைகளை அவர்கள் பேனாதது

3) மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட வழியில் சம்பாதித்து உண்பது

“நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு , ஆடைகளும், உடம்பும்,  புழுதிப் படிந்த நிலையில், “இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கின்றான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது  அவனது துஆ எவ்வாறு அங்கிகரிக்கப்படும்?” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லீம்)

தங்களின் துஆ அங்கிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்ப கூடியவர்கள் ஹலாலான முறையில் பொருளீட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

4) அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது, அவசரப்படக் கூடாது.

“நான் துஆ செய்தேன் அங்கிகரிக்கப்படவில்லை என்று கூறி அவசரபடாதவரை உங்கள் துஆக்கள் அங்கிகரிக்கப்படும்” என்பது நபிமொழி

5) துஆ கோட்கும் போது இறைவன் எதை தடை செய்துள்ளானோ அதை கேட்க கூடாது.

“இம் மண்ணுலகில் இருக்கும் எவரும் எதையாவது அல்லாஹ்விடம் கேட்டால், அதை கொடுக்காமல் இருப்பதில்லை! ஆனால் அவன் பாவமானவற்றையும், உறவினரை பகைப்பதையும் கேட்க கூடாது” என்பது நபி மொழி

6) நாம் கேட்பதை இறைவனால் நிச்சயம் தர முடியும்! நிச்சயம் தருவான் என மன உறுதியுடனும், நம்பிக்கையுடனும் கேட்க வேண்டும். ‘கிடைத்தால் கிடைக்கட்டும்’ என்ற எண்ணத்தில் கேட்க கூடாது.

“ஏற்கப்படும் என்று உறுதியாக நம்பி அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்! கவனமற்ற ஈடுபாடு இல்லாத உள்ளங்களிலிருந்து வெளிப்படும்  துஆக்கள் அங்கிகரிக்கப்படுவதில்லை”  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

7) ஏற்கப்படும் என்று உறுதியாக நம்பி அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.

“கவனமற்ற ஈடுபாடு இல்லாத உள்ளங்களிலிருந்து வெளிப்படும் துஆக்கள் அங்கிகரிக்கப்படுவதில்லை” என்பது நபி மொழி

(இது மிக மிக முக்கியம்! நாம் இறைவனிடம் நேரடியாக துஆ கேட்டால் அல்லவா உள்ளத்தில் இருந்து வெளிப்படும்)

8) “உங்களில் எவரேனும் துஆச் செய்தால் வலியுறுத்திக் கேட்கட்டும்!  ‘நீ விரும்பினால் தா’  என்று கேட்க வேண்டாம். ஏனெனில், அவனை நிர்பந்தம் செய்பவன் எவனுமில்லை” என்பது நபி மொழி

9) எந்த ஒரு சாதாரன சின்ன விஷயங்களை கூட அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். குழந்தை வேண்டும்; பணம் வேண்டும் என்றால் மட்டும் கேட்கின்றோம். சின்ன, சின்ன விஷயங்களில் அவனுக்கு அதிகாரம் இல்லை என்று கூறாமல் செயல்படுகின்றோம்.

சிறியவை, பெரியவை என்று பேதம் பார்க்காமல் அனைத்தையும் அவனிடமே கேட்க வேண்டும்!

10) நாம் துஆ செய்யும் போது பணிவும் அடக்கமும் வேண்டும்.

11) அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே கொண்டிருப்பவன் முன்னிலையில் பயத்துடனும்  அடக்கத்துடனும் துஆ செய்ய வேண்டும்.

12) ‘நமது மனதை அறியக்கூடியவனிடம் கேட்கிறோம்’ என்பதை உணர்ந்து தாழ்ந்த குரலில் துஆ கேட்க வேண்டும்.

“உங்களுடைய இறைவனிடம் பணிவுடனும், அந்தரங்கமாகவும் துஆ செய்யுங்கள். நிச்சயமாக வரம்பு மீறியவர்களை அவன் நேசிப்பதில்லை”    (அல்-குர்ஆன் 7:55)

13) இந்த ஒழுங்குகளை எல்லாம் பூரணமாக பேணிய பிறகும் துஆக்கள் அங்கிகரிக்கப்படாவிட்டால், அதனால் நம்பிக்கை இழந்து விடக்கூடாது! அல்லாஹ் அங்கிகரிக்கவில்லை என்று எண்ணிவிடக் கூடாது.

“ஒன்றை நீங்கள் வெறுக்கலாம்; அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும்! ஒன்றை நீங்கள் விரும்பலாம்; அது உங்களுக்கு கெட்டதாக இருக்கும்! அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.”  (அல்-குர்ஆன் 2:216)

விபரமறியாத குழந்தை தாயிடம் ஆபத்தான கத்தியை வாங்கி கேட்டால் வாங்கி கொடுப்பார்களா?

மாறாக, அதை விட அதிக விலையில் வேறு பொருளை வாங்கிக் கொடுப்பாள். தாயை விட அதிக கருனையுடைய இறைவன், அவன் கேட்டதை விட சிறந்ததை நிச்சயம் வழங்குவான்

ஒருவன் பெரும் செல்வத்தை கேட்கலாம்.  அச்செல்வம் அவனை தவறான வழியிலும், இறை நிராகரிப்பிலும் செலுத்திவிடும் என்று இருந்தால், இறைவன் அவன் கேட்டதை கொடுக்காமல் அதை விட சிறந்ததை கொடுப்பான்.

அல்லாஹ் அடியானுக்கு  ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் வேறு தேவைகளை கேட்டால்,  அதை கொடுப்பதற்குப் பகரமாக அந்த ஆபத்தை நீக்குவான்.

நாம் கேட்டும் துஆ நிறைவேறாவிட்டால், ஏதோ ஒரு நன்மைக்காக அல்லாஹ்  நிறைவேற்றவில்லை என நம்பிக்கை கொள்ள வேண்டும்.

“பாவமற்ற விஷயங்களிலும்,உறவினர்களை பகைக்காத விஷயத்திலும்,யாரோனும் அல்லாஹ்விடம் கேட்டால், மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கிகரிக்கின்றான்.

1) அவன் கேட்டதை கொடுப்பான்! 

அல்லது

2) அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான்!

அல்லது 

3) அவனுக்கு ஏற்படும் தீங்குகளை நீக்குவான்!” 

என்பது நபி மொழி.

எனவே, ‘இறைவனிடம் கேட்கப்படும் அனைத்து துஆக்களையும் இறைவன் அங்கிகரிக்கின்றான்’ என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளக் கூடாது’

இறைவன் மனதை அறியக்கூடியவன்!

‘பிடரி நரம்பை விட மிக அருகில் உள்ளவனிடம் பிரார்திக்கின்றோம்’ என்ற எண்ணத்துடன், அச்சமுடனும், அடக்கத்துடனும், பணிவுடனும், ரகசியமாக, கவனமாக மன ஓர்மையுடன்  இறைவனிடம் மட்டும்  நேரடியாக பிரார்த்தியுங்கள்.

துஆ கேட்கும் முன் அல்லாஹ்வை புகழ்ந்தும், தொடர்ந்து ஸலாவாத் கூறியும், பிரார்த்தனையை தொடருங்கள்.

கையேந்தியும் பிரார்த்திக்கலாம்!
மனதளவிலும் பிரார்த்திக்கலாம்!

– எந்த சிறிய, பெரிய செயல்பாட்டிற்கு முன்பும், பயணிக்கும் போதும் பிரார்த்திவிட்டு ஆரம்பியுங்கள். பயணியுங்கள்!

– எந்த ஒரு சிறிய, பெரிய வியாதியானாலும், பிரார்த்திவிட்டு நிவாரணம் தேடுங்கள்!

– எந்த ஒரு சிறிய,பெரிய தேவைகளாகட்டும், மற்றும் சிறிய பெரிய பாதுகாப்புக்காகவும் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்!

– அல்லாஹ்வும், ரசூலும் கற்றுதந்த துஆக்களை முடிந்தவரை அர்த்தம் தெரிந்து கொண்டு பிரார்த்தியுங்கள்.

– துஆ கேட்கும் போது, உங்கள் மனம் ஒன்றி பிரார்திக்க தமிழில் பிரார்த்தியுங்கள்.

– அது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.

– இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்த நிம்மதி ஏற்படும், அதுவே உங்கள் மனதை நிறைவுபடுத்தும்.

– நீங்கள் செய்த பாவங்களை நினைத்து, இறைவனிடம் மன்னிப்பு கேட்டும், நீங்கள் செய்த நல்லறங்களை நினைவு கூர்ந்தும் பிரார்த்தியுங்கள்

எனவே, ‘இறைவனிடம் கேட்கப்படும் அனைத்து துஆக்களையும், தாயைவிட அதிக கருனையுடைய இறைவன் நிச்சயம் நிறைவேற்றுவான்’ என நம்பி அடிக்கடி துஆ கேட்போமாக.

வஸ்ஸலாம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “துஆ ஓர் மிகச்சிறந்த வணக்கம்”
  1. அல்ஹம்துலில்லாஹ். இலகுவாகவும், அழகாகவும் விளக்கப்பட்டுள்ளது. ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed