உறவு எனும் ஓர் அருட்கொடை
எந்த ஒரு மனிதனும் உறவுகள் இல்லாமல், உறவுகளே வேண்டாம் என்று சொல்லி தன்னந் தனியாக வாழ்ந்து விட முடியாது! உறவுகள்தான் மனிதனின் மிகப் பெரிய பலம்.
ஆபத்துகளில் கை கொடுக்கும்! துயரங்களில் ஆறுதல் கூறும்! துன்பங்களில் அக்கரையோடு பங்கெடுக்கும் ஒன்றுதான் உறவுகள்.
இன்றைக்கு உறவுகளின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணராமல் உறவுகளோடு சேர்ந்து வாழாமல், உறவுகளை முறித்துக் கொண்டும், பகைத்துக் கொண்டும் வாழ்கின்றனர்.
மார்க்கம் உறவுகளின் முக்கியத்துவத்தையும் உறவுகளால் ஏற்படும் நன்மைகளையும் தெளிவுபடுத்துகிறது.
குர்ஆனின் பல வசனங்களில் உறவுகளிடம் உறவாக இருக்க வேண்டும் என்றும், உறவினர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் உரிமையை வழங்க வேண்டும் என்றும், இதுதான் சிறந்தது என்றும், நன்மையானது என்றும், அல்லாஹ் வலியுறுத்திகிறான்.
உறவினர்களுக்கு நன்மை செய்யாவிட்டால், அவர்களுக்குரிய உரிமையை வழங்காவிட்டால், இறைவனின் தண்டனை நமக்கு கிடைக்கும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்:
“உறவினர்கள் விஷயத்தில் நீங்கள் (அஞ்சுங்கள்) அல்லாஹ் உங்களை கண்காணிப்பவனாக இருக்கிறான்.” (அல்-குர்ஆன் 4:1)
“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5984)
ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றி, ஜகாத் வழங்கி, நோன்பு நோற்று, ஹஜ்ஜையும் முடித்து விட்டால் நாம் சுவனம் சென்று விடலாம் என்று நம்மில் பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர்
ஆனால்,சுவனம் செல்வதற்கு மேற்கண்ட காரியங்கள் மட்டும் கடைமைகளல்லாமல் வேறு பல காரியங்களும் கடமைகளாக இருக்கின்றன. அவற்றையும் கவனத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். அவற்றை செய்யத் தவறிவிட்டால் ஒருவர் சுவனம் செல்ல முடியாது என்பதை கவனிக்கத் தவறிவிடுகின்றனர். இப்படிப்பட்ட காரியங்கள் நிறைய உண்டு! அவற்றில் மிக முக்கியமான ஒன்று தான் உறவினர்களை ஆதரிப்பதாகும்.
கடமையான வணக்கங்களில் பிடிப்பும், பேணுதலும் காட்டுகின்ற மக்கள், உறவு விஷயத்தில் அதே பிடிப்பையும், பேணுதலையும் காட்டத் தவறி விடுகின்றனர்.
எனவே, ஒருவர் சுவனம் செல்ல வேண்டுமாயின், அவர் தம்முடைய உறவினர்களை ஆதரித்தே ஆக வேண்டும். இல்லையேல் அவருக்கு நரகம் தான் என்பதை மேற்கண்ட ஹதீஸ் நமக்குத் தெரிவிக்கின்றது.
“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்” என்ன நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் பல நல் அமல்களைச் செய்து விட்டு துண்டித்து விட்டு வாழ்வாரேயானால் அவர் சுவனம் செல்ல முடியாது என்பதால் சுவனம் செல்ல உறவை ஆதரித்தே ஆக வேண்டும்.
உறவினரின் உறவே அல்லாஹ்வின் உறவு!
நாம் அனைத்து விதமான வணக்கங்களையும் செய்வதற்கான காரணமே அல்லாஹ்வின் உறவைப் பெறுவதற்காகத் தான். அதன் முலம் அவனது அன்பை, உதவியைப் பெறுவதற்காகத்தான்.
நாம் உறவினர்களின் உறவைத் துண்டித்து விடும் போது அல்லாஹ்வின் அருள் அறுந்து போய் விடுகிறது. அவனது உதவி துண்டிக்கப்பட்டு விடுகிறது.
“உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். ஆகவே அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவை பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன்” என்று (அல்லாஹ் கூறியதாக ) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5989)
ஆயுள் அதிகமாகும்!
பொருளாதார வசதிகளுடனும், செல்வ சீமானாக வாழ வேண்டும், நீண்ட ஆயுளோடும் வாழ வேண்டும் என்று தான் மனிதன் ஆசைப்படுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தமது வாழ்வாதாரம் (ரிஜ்க்) விசாலமாக்கப்படுவதையும், வாழ்நாள் நீடிக்கப்படுவதையும் விரும்புகின்றவர் தமது உறவை பேணி வாழட்டும்” (புகாரி 5986)
நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்தவுடன் அவர்கள், ‘சொந்த பந்தங்களை அரவணைக்க வேண்டும்! அவர்களோடு ஒட்டி உறவாட வேண்டும்!’ என்பதைதான் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்தார்கள்.
நபித்துவம் கிடைப்பதற்கு முன்பாகக் கூட நபிகளாரின் குணங்களில் ஒன்றாக உறவுகளை அரவணைப்பது இருந்தது.
கடமைகளை நிறைவேற்றுவதுடன், உறவுகளுடன் உறவாக இருந்தால் தான் சொர்க்கத்தில் நுழையலாம். தன் தாய் இணைவைப்பாளராக இருந்தாலும் உறவைப் பேண வேண்டும்.
பதிலுக்கு பதில் – இன்றைய உறவுகள் நிலை!
‘நீ உறவாக இருந்தால், நான் உறவாக இருப்பேன்!’
‘நீ எனக்கு அன்பளிப்பு கொடுத்தால், நான் உனக்கு அன்பளிப்பு கொடுப்பேன்!’
‘நீ எனக்கு உதவி செய்தால் தான், நான் உனக்கு உதவி செய்வேன்!’
இப்படி தான் இன்றைய உறவுகளின் நிலை இருக்கின்றது!
இன்ப, துன்பங்களில் கலந்து கொள்வது, அன்பளிப்பு செய்வது, பழகுவது, உறவாக இருப்பது, போன்ற அனைத்து விஷயங்களிலும் உறவினர்கள் எவ்வாறு தங்களிடம் நடந்து கொள்கிறார்களோ அவ்வாறு இவர்களும் அவர்களிடத்தில் நடந்து கொள்கின்றனர். அவர் நம்மிடம் உறவாக இல்லை, அதனால் நான் உறவாக இல்லை என கூறித்தான் பெரும்பாலானோர் உறவை துண்டித்துக் கொள்கின்றனர்.
அதாவது பதிலுக்கு பதில் உறவாடுகின்றனர். இவ்வாறு பதிலுக்கு பதில் உறவாடுவது மார்க்கத்திற்கு முரணானதாகும். பதிலுக்குப் பதில் உறவாடுவது குறித்து நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கின்றார்கள்:
“பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்மையாக) உறவை பேணுகின்றவர் அல்லர்! மாறாக உறவு முறிந்தாலும், அந்த உறவுடன் இணைகின்றவரே உறவை பேணுபவர் ஆவார்” (புகாரி 5991)
எனவே, எவ்வித பிரதிபலனும் எதிர் பார்க்காமல் சொந்தங்களுக்கு உறவாக இருப்பது, உதவி செய்வதும் தான் உறவை பேணுதலாகும். உறவினர்களில் யாரேனும் நம்மைப் பகைத்துக் நம்மிடம் கொண்டால், அவர்களிடம் வலியச் சென்று உறவைத் தொடரவேண்டும்.
உறவை ஆதரிக்கச் செல்கையில் உறவினர்கள் மிஞ்சினாலும் நாம் கெஞ்சி உறவை தொடரவேண்டும்! அவர்கள் துரோகமிழைத்திருந்தாலும் நமது உறவை தொடர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்களிடம் உறவு பாராட்டுகிறேன்; அவர்களோ என்னிடம் பகைமை பாராட்டுகின்றனர். நான் உதவி செய்கின்றேன்; அவர்கள் எனக்கு ஊறு விளைவிக்கின்றனர்! அவர்களிடம் நான் பொறுமையை மேற் கொள்கின்றேன்; அவர்கள் என்னிடத்தில் அறிவீனத்தையே கடைப்பிடிக்கின்றனர்” என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ சொல்வது போன்ற நிலையில் இருந்தால் நீ அவர்களை சூடான சாம்பலை திண்ணச் செய்தவன் போலாவாய் (அதாவது அவர்கள் தங்கள் மீது தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கின்றனர்). இதே நிலை நீ தொடர்கிற வரை அவர்களின் தீமையை விட்டு காப்பதற்காக ஓர் வானவர் உன்னுடன் இருந்து கொண்டே இருப்பார்கள்” (முஸ்லீம் 4640)
உறவு எனும் உன்னத வணக்கம்!
ரமளான் மாதம் வந்ததும்,
– பள்ளிவாசல் பக்கம் திரும்பிப் பார்க்காதவர்கள் கூட பள்ளிவாசல் தவமாக கிடப்பது,
– இறுகிய மனமுடையவர்கள் கூட இளகிய மனமுடையவர்களாக மாறுவது,
– மற்றும், தொழுகை, ஜகாத், குர்ஆன் ஓதுதல், தான தர்மங்கள் செய்தல் என பல் வேறு விதமான நன்மைகள் முஸ்லீம்களுக்கிடையே பெருக்கெடுத்து பெரு வெள்ளமாய் ஓடுகின்றன.
இதற்கெல்லாம் ஊற்றுக் கண்ணாக இருப்பது உந்து சக்தியாக இருப்பது குர்ஆன்! இந்தக் குர்ஆனின் மிக முக்கியமான ஒரு போதனை மட்டும் இன்னும் மக்களிடம் போய் சரியாகச் சேரவில்லை அல்லது சேர்க்கப்படவில்லை!
– ரமளான் மக்களை ஈர்த்த அளவிற்கு ,
– மக்களை இன்னும் ஈர்க்காத,
– மக்கள் இன்னும் திரும்பிப் பார்க்காத,
ஓரிடம் இன்னும் வெற்றிடமாக உள்ளது.
அதுதான்,
– உறவினர்களை ஆதரித்தல்,
– சொந்த பந்தங்களை அரவனைத்தல்.
என்ற உன்னத வணக்கமாகும்.
உறவினர் ஆதரிப்பு, அரவணைப்பு போதனையை மார்க்க அறிஞர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
அந்த மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் இந்த ரமளான் நமக்கு அளிக்கட்டுமாக!