ஆண்களுக்கு ஹுருல் ஈன்கள் எனில் இருப்பது போல் பெண்களுக்கு என்ன இருக்கிறது?
கேள்வி: – நல்லடியார்களான ஆண்களுக்கு ஹுருல் ஈன்கள் இருப்பது போல் நல்லடியார்களான பெண்களுக்கு என்ன இருக்கிறது? செய்யத், யாஹூ மின்னஞ்சல் வழியாக!
பதில்: -அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
தன்னுடைய கட்டளைகளை முறையாகப் பேணி நடந்த ஆண் அடியார்களுக்கு இறைவன் மறுமையில் வழங்கவிருக்கும் சுவனத்து இன்பங்களில் ஹூருல் ஈன்களும் உண்டு. ஹூருல் ஈன்களைப் பற்றி அல்குர்ஆனும் ஆதாரப் பூர்வமான பல ஹதீஸ்களும் நிறைய கூறுகின்றன.
ஹூருல் ஈன்கள் அழகிய நெடிய கண்களையுடையவர்கள் ஆவார்கள்: –
அல்லாஹ் கூறுகிறான்: – (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். (அல்குர்ஆன் 56:22)
ஹூருல் ஈன்கள் மறைக்கப்பட்ட பவள முத்துக்களைப் போல் இருப்பார்கள்!
அல்லாஹ் கூறுகிறான்: – மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). (அல்குர்ஆன் 56:23)
அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். (அல்குர்ஆன் 55:58)
ஹூருல் ஈன்கள் எந்த மனிதரும் ஜின்களும் தீண்டியிராத புதிய படைப்பாகும்: –
அல்லாஹ் கூறுகிறான்: – அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (அல்குர்ஆன் 55:56)
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி; அப்பெண்களைக் கன்னிகளாகவும்; (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). (அல்குர்ஆன் 56:35-38)
நற்குணமுள்ள, அடக்கமான பார்வையுடைய, தூய ஹூருல் ஈன்கள் கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்: –
அல்லாஹ் கூறுகிறான்: – அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 55:70)
அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (அல்குர்ஆன் 55:56) இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு (அல்குர்ஆன் 2:25)
ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். (அல்குர்ஆன் 55:72)
ஹூருல் ஈன்கள் பிரகாசமானவர்கள்: –
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: – இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண்இ உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரம் : புகாரி. சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் ‘ஹூருல் ஈன்’ எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும். ஆதாரம்: புகாரி.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த சுவனத்து ஹூருல் ஈன்களை இறைவன் இந்த உலகில் அவனது ஏவல் விலக்கல்களை பேணி நடந்தவர்களுக்காக வாக்களித்திருக்கின்றான். அப்படியாயின் அவனது கட்டளைகளை முறையாகப் பேணி நடந்த பெண் அடியார்களுக்கு என்ன கிடைக்கும் என்பது தான் சகோதரர் கேட்ட கேள்வி.
இறைவனின் கட்டளைகளை முறையாகப் பேணி நடந்த பெண் அடியார்கள்: –
முதலாவதாக நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் இந்த உலகில் வாழும் போது அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று மறுமையில் அவன் தன்னுடைய நல்லடியார்களுக்காக வாக்களித்திருக்கும் சுவனபதியையும் அவன் சுவர்க்க வாசிகளுக்கு அளிக்கவிருக்கும் வெகுமதிகளை பெறுவதுமே முஃமினான ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய குறிக்கோளாகும். அதை அடைவதற்காக இறைவனின் ஏவல் விலக்கல்களை முறையாகப் பேணி நடந்தால் இன்ஷா அல்லாஹ் மறுமையில் சுவனபதியில் நுழைய முடியும். அந்த சுவனபதியில் எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத எந்த மனிதர்களும் நினைத்துப் பார்த்திராத பலவகையான இன்பங்களும் மகிழ்ச்சிகளும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்ற நல்லடியார்களான முஃமினான ஆண் பெண்களுக்கு கிடைக்கும். விரும்பியவைகள் அனைத்தும் அவர்களுக்கு கிடைக்கும். அவர்கள் மனவேதனையடையும் எதுவும் அங்கு நிகழாது. அவர்கள் என்றென்றும் சந்தோசத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்: –
41:30 நிச்சயமாக எவர்கள்: ‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, ‘நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
41:31 ‘நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது – அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
41:32 ‘மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்’ (இது என்று கூறுவார்கள்). (அல்குர்ஆன் 41:30-32)
சுவர்க்கத்தில் ஆண்கள் விரும்புவது ஹூருல் ஈன்களை. பெண்களைப் பொறுத்த வரையில் அதற்குச் சமமான சிறந்தவைகள் அவர்களுக்கு கிடைக்கும். நுண்ணறிவாளனான அல்லாஹ் அவனுடைய அளவிட முடியாத மதி நுட்பத்தைக் கொண்டு ஆண்களுக்கு ஹூருல் ஈன்கள் கிடைப்பது போன்ற அளவிற்கு பெண்களுக்கு என்ன கிடைக்கும் என வெளிப்படையாக குறிப்பிடவில்லை. இது அல்லாஹ் மிகவும் கண்ணியமானவன் என்பதையும் நாணமுறுபவன் என்பதையும் குறிக்கின்றது. மேலும் எதைக் குறித்து பெண்களே மிகவும் நாணமுறுபவர்களாகவும் கண்ணியமானவர்களாகவும் இருக்கின்றார்களோ அதையே எப்படி அல்லாஹ் வெளிப்படையாகக் கூறி அதை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள் எனக் கூறுவான்? எனவே அல்லாஹ் தன்னுடைய திருமறையில் பின்வரும் வசனத்தில் மறைமுகமாகக் கூறியிருக்கிறான்.
உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது (அல்குர்ஆன் 41:31)
அல்லாஹ்வின் நல்லடியார்களான பெண்கள் ஹூருல் ஈன்களை விட உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பார்கள்: –
ஹூருல் ஈன்கள் எவ்வளவு தான் அழகிலும் குணத்திலும் அவர்களின் படைப்பிலும் சிறப்பு மிக்கவர்களாயினும் இவ்வுலகில் நல்லறம் புரிந்த பெண்கள் சுவர்க்கத்தில் ஹூருல் ஈன்களை விட அந்தஸ்த்தில் உயர்ந்தவர்களாகவும் அழகில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள். ஏனென்றால் ஹூருல் ஈன்கள் இறைவனின் நல்லடியார்களை மகிழ்விப்பதற்காக சுவர்கத்தில் படைக்கப் பட்டவர்களாவார்கள். அவர்கள் இவ்வுலகில் நல்லறங்கள் புரிந்த நல்லடியார்களுக்கு கட்டுப்பட்டவர்களாக சுவனத்தில் இருப்பார்கள். ஆனால் இறைவனின் நல்லடியார்களான பெண்களோ தாங்கள் செய்த நற்செயல்களின் விளைவாக சுவனம் சென்றவர்கள். எனவே இவர்களுக்கும் ஹூருல் ஈன்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றது.
அஷ் ஷெய்ஹூ இப்னு உதைமீன் அவர்களிடம் ஹூருல் ஈன்கள் பற்றிக் குறிப்பிடப்படுவது இவ்வுலகில் உள்ள பெண்களையும் குறிக்கின்றதா? என வினவப் பட்டபோது அதற்கு ஷெய்ஹூ அவர்கள் பின்வருமாறு பதில் அளித்தார்கள்.
“(நல்லறங்கள் புரிந்த) இந்த உலகத்தின் பெண்கள் ஹூருல் ஈன்களை விட அந்தஸ்திலும் வெளிப்புற தோற்றத்திலும் உயர்ந்தவர்களாக இருப்பார்கள். அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்” என்று கூறினார்கள்.
மேலும் சில மார்க்க அறிஞர்கள், ” ‘ஹூர்’ என்ற சொல் பொதுவான சொல். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை. மறுமை வாழ்க்கை என்பது மறைவான விஷயங்களில் உள்ளவையாகும். மறைவான விஷயங்களில் நமது கவணத்தைச் செலுத்தி ஆராய்ந்துக் கொண்டிருக்காமல் அல்லாஹ் குர்ஆனில் கூறியவாறே நம்பிக்கைக் கொண்டு அதன்படி செயலாற்றுவதே சாலச் சிறந்தது” என்று கூறுகின்றனர்.
எனவே சகோதர சகோதரிகளே, அல்லாஹ் வாக்களித்திருப்பது போல் ‘மனம் விரும்பிதெல்லாம் அங்கு கிடைக்கும்’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நமது செயல்களை அமைத்துக் கொண்டு சுவர்க்கத்தை அடைவதையே நமது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு அந்த சுவனத்தின் நற்பாக்கியங்களை அடைய முயற்சிப்போமாக!. அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாகவும். நுண்ணறிவாளனும், சர்வ வல்லமையும் படைத்த அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.