இஸ்லாம் என்றால் என்ன பொருள்? இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் யாவை?
இஸ்லாம் என்றால் என்ன பொருள்?
இஸ்லாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவர் ‘தன்னுடைய விருப்பங்களை இறைவனுடைய விருப்பங்களுக்கு ஏற்ப அர்பனித்தல்’ என்று பொருள்.அதாவது ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை இறைவனுடைய கட்டளைகளுக்கு ஏற்ப அமைத்துக் கொண்டு தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்பனித்தல் என்பதாகும்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் யாவை?
இஸ்லாம் அடிப்படைக் கடமைகள் ஐந்து! அவைகள்:
முதலாவது கடமை – ஏகத்துவக் கலிமாவை மொழிந்து சாட்சி கூறுவது:
ஏகத்துவக் கலிமாவாகிய
லாயிலாஹ இல்லல்லாஹ்
முஹம்மது ரஸூலுல்லாஹ்
என்ற திருக்கலிமாவின் உண்மையான பொருளைஉணர்ந்து, அது கூறும் விளக்கங்கங்களை அறிந்து, அந்தக் கலிமாவை உள்ளத்தால் ஏற்றுக்கொண்டு வாயால் உறுதிமொழி கூறுவதாகும்.
இரண்டாவது கடமை – தொழுகையை நிறைவேற்றுவது:
பருவ வயதை அடைந்த முஸ்லிமான ஆண், பெண் இரு பாலரும் தினமும் ஐந்து நேரம் தன்னைப் படைத்த ரப்பாகிய அல்லாஹ்வை தொழுகை என்ற வணக்கத்தைக் கொண்டு வணங்குவது!
ஐங்காலத் தொழுகையின் நேரங்கள்: –
ஃபஜ்ர் : அதிகாலை உதயமானதிலிருந்து சூரியன் உதயமாகும் வரைக்குமாகும்.
லுஹர் : சூரியன் உச்சி சாயத்துவுங்கியதிலிருந்து ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தின் அளவிற்கு வரும் வரைக்குமாகும்.
அஸர் : ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தின் அளவை அடைந்தவுடன் ஆரம்பமாகி சூரியன் மறையும் வரை நீடிக்கின்றது.
மஃரிப் : சூரியன் மறைந்ததிலிருந்து செம்மேகம் மறையும் வரைக்குமாகும். செம்மேகம் என்பது சூரியன் மறைந்த பிறகு தோன்றுவதாகும்.
இஷா : செம்மேகம் மறைந்ததிலிருந்து இரவின் பகுதி வரைக்குமாகும்.
முன்றாவது கடமை – நோன்பு இருப்பது:
ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் ஃபஜ்ருடைய நேரம் முதல் சூரியன் மறையும் வரை (மஃரிபுடைய நேரம்) உண்ணாமலும், பருகாமலும் உடலுறவு கொள்ளாமலும் அல்லாஹ்வுக்காக நோன்பு இருப்பது!
இது பருவ வயதை எய்திய ஆண், ணெ; இரு பாலர் மீதும் கடமையாகும்.
நான்காவது கடமை – ஜக்காத் கொடுப்பது:
பொருளாதாரத்தில் இஸ்லாம் வரையறுத்துள்ள அளவுகளில் செல்வங்களை சேர்த்து வைத்திருப்பவர்கள் அவைகள், பணமாகவோ அல்லது தங்கமாகவோ அல்லது வெள்ளியாகவோ அல்லது கால்நடைகளாகவோ அல்லது வியாபார சரக்குகளாகவோ அல்லது பங்குகளில் மூதலீடாகவோ இருந்தாலும் அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அல்லாஹ் தன்னுடைய திருக் குர்ஆனிலே கூறியுள்ள தகுதியானவர்களுக்கு ஜக்காத் கொடுப்பது!
ஐந்தாவது கடமை – ஹஜ் செய்வது:
பொருளாதாரத்திலும், உடல் வலிமையிலும் சக்தியுள்ளவர்கள் தங்களின் ஆயுளில் ஒருமுறையேனும் மக்கா சென்று அங்கு தங்களின் மீது கடமையாகியிருக்கும் ஹஜ் என்ற வணக்கத்தை நிறைவேற்றுவது!