ஹஜாப் அணிவது சுய மரியாதைக்கு இழுக்கு அல்லவா?
இஸ்லாத்தை தனது வாழ்வு நெறியாக ஏற்றுக்கொண்ட ஒரு பெண் தன்னுடைய அழகு அலங்காரத்தை என் இரத்த பந்த உறவினர்களைத் தவிர்த்து மற்றவர்கிடமிருந்து மறைத்துக்கொள்ள வேண்டும் என இறைவன் கட்டளையிட்டிருக்கின்றான். ஏனென்றால் அவள் தன்னுடைய இறைவனுடைய கட்டளைகளுக்கு முழுவதும் கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் இறையச்சமுடைய பெண் என அறியப்படுவதற்கும் மேலும் சமுதாயத்தில் கண்ணியமான பெண் என அறியப்பட்டு பிறருடைய கேலி, கிண்டல்கள் இன்னும் பிற தொல்லைகளிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் தான்.
இறைவன் தன்னுடைய அருள்மறையாம் திருமறையிலே கூறுகிறான்: –
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (அல் குர்ஆன் 33:59)
இந்த அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலித்து, உணவளித்து, பாதுகாத்து வரும் ஒரே இறைவன் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட, இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு இரத்த பந்த உறவினர்கள் அல்லாத மற்றவர்களிடமிருந்து தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்பது இறை கட்டளையாகும். ஏனெனில் அதற்கான காரணத்தையும் இறைனே கூறியிருக்கிறான்.
முஸ்லிம் பெண்களின் முழுமையான அந்த ஆடை பிறரிடமிருந்து அவர்களை வேறுபடுத்தி இறைநம்பிக்கையுள்ள கண்ணியமான பெண்கள் என அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருப்பதற்காக இறைவன் புறத்திலிருந்து பெண்களுக்கு அருளப்பட்ட ஒரு தற்காப்பு கவசமாகும். மேலும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை தேர்வு செய்வதன் மூலம் அது அவள் இறைவனின் கட்டளைக்கு வழிபடுகிறார்கள்.
பொதுவாக பெண்கள் ஆண்களுக்கு கவர்ச்சியானவர்களாகவும், ஆண்கள் பெண்களை விட எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் தெருவில் நடந்து செல்லும் போது அங்குள்ள அனைத்து ஆண்களின் பார்வையும் அந்தப் பெண்ணை நோக்கியே செல்லும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. மேலும் அவ்வாறு அரை குறை ஆடையுடன் செல்லும் அந்தப் பெண்ணை கேலி செய்து பார்க்க சிலருக்கு தோன்றும். அதுவும் அந்தப் பெண் தனியாகச் சென்றால் அதைவிட மோசமான நிலைக்குத் தள்ளப்படுவாள் என்பது நமக்குத் தெரியும். இந்த மாதிரியான சிக்கல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இந்த பர்தா அவசியம் தேவைப்படுகிறது.
இறைவன் கூறுகிறான்: –
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அல் குர்ஆன் 24:30)
24:31 இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
எனவே இறைவனை ஏற்று விசுவாசிக்கும் ஒவ்வொரு ஆடவரும் இறை கட்டளைக்கு ஏற்ப தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். இறை நம்பிக்கையுள்ள உள்ள ஒவ்வொரு முஸ்லிமான பெண்ணும் இறைவனின் கட்டளைக்கு ஏற்ப தன்னை பிற ஆடவர்களிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும்.