சில முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிவதில்லை?
பொதுவாக நாம் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்பந்தம் என்பது கிடையாது.
இறைவன் கூறுகிறான்: –
2:256 (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது.
இஸ்லாம் என்பதற்கு தன்னுடைய விருப்பு வெறுப்புகளை இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப அமைத்துக் கொண்டு தன்னை முழுவதுமாக இறைவனுக்கு அர்பணிப்பது என்று பொருள். எனவே ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார் என்றால் அவர் அதன் மூலம் அவர் இறைவனுக்கு கட்டுபடுவதாக உறுதி கொள்கிறார்.
இவ்வாறு எந்தவித கட்டாயமுமில்லாமல் தன்னுடைய சுய விருப்பத்தின் அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒருவர் இறைவன் விதித்த கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பது அவசியம். ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதி கொண்ட ஒரு பெண் அதன் அடிப்படையான இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப பர்தா அணியவில்லை என்பது அவருடைய இறைவனின் கட்டளையை வரம்பு மீறி நேரடியாக நிராகரித்தல் என்பதாகும்.
முஸ்லிம் பெண்களில் சிலர் ஏன் பர்தா அணிவதில்லை என்று கேட்பது, 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது என்று என்று கட்டுப்பாடுள்ள ஒரு சாலையில் ஒருவர் ஏன் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்கிறார் என்று கேட்பது போலாகும். இவர்கள் அந்த சாலையின் விதிகளை நன்கு அறிந்துக் கொண்டே தாங்களாகவே அந்த விதியை மீறிச்செல்வது என்ற முடிவுடன் செல்கின்றனர். அவர்கள் பிடிபடும் போது தண்டணை கிடைக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். தண்டணை கிடைக்கும் என்று அறிந்தே தான் அந்த தவறைச் செய்கின்றனர்.