இறைவனிடத்தில் சிபாரிசு செய்யக்கூடியவைகள்
நீங்கள் குர் ஆனை ஓதுங்கள். அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
குர்ஆனையும் அதைக்கொண்டு உலகத்தில் அமல் செய்தவர்களையும் நாளை மறுமையில்கொண்டு வரப்படும். சூரத்துல் பகராவும், ஆல இம்ரானும் முன்வந்து, குர் ஆனை ஓதியவருக்கு (சுவர்க்கத்தை பெற்றுக் கொடுப்பதற்காக) வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
நிரந்தரமற்ற இந்த உலகத்தின் தேவைகளுக்காக யார் யாரிடமோ சிபாரிசுக்காக அலைகின்றோம். அதற்காக அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்.
அனால் நிரந்தரமான மறுமை உலத்தில், இறைவனிடம் சிபாரிசு செய்யக்கூடிய குர் ஆனுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
மறுமையில் இந்த உம்மத்தினருக்காக முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு, நோன்பும் சிபாரிசு செய்யக்கூடியதாக இருக்கிறது. நம்முடைய வாய்க்கு முத்திரை இடப்பட்ட்டு கைகள் நாம் செய்தவற்றை சொல்லும், கால்கள் சாட்சி சொல்கின்ற வேளையில், நமக்காக இறைவனிடத்தில் பரிந்து பேசுபவர்களுக்காக ஏங்கக்கூடிய நேரத்தில், இந்த குர் ஆன் இறைவனிடத்தில் சிபாரிசு செய்யக்கூடியதாக இருக்கிறது.
குர் ஆனை ஓதுவதினால் எந்த அளவுக்கு நன்மைகள் குவிகின்றன என்பதை எண்ணிப்பாருங்கள். மொழியாக்கத்தையும் படிப்பினை பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு நிதானமாக படியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நமது ஈருலக வாழ்க்கையையும் வெற்றி பெற்ற வாழ்க்கையாக ஆக்கப் போதுமானவன்.
யாஅல்லாஹ்! இந்த குர் ஆனை நாளை மறுமையில் எங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடிய குர்ஆனாக ஆக்கி வைப்பாயாக.