கனவுகள் குறித்து நபியவர்களின் கூற்று
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்” என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி 6983)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும்” என அபூ கத்தாதா அல்அன்சாரி (ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி 6984)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது” என அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி 6985)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, ஒருவர் கெட்ட கனவு கண்டால் அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். தம் இடப் பக்கத்தில் துப்பட்டும். ஏனெனில், அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது” என அபூ கத்தாதா (ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி 6986)
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நற்செய்தி கூறுகின்றவை (‘முபஷ்ஷிராத்’) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை’ என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் ‘நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?’ என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் ‘நல்ல (உண்மையான) கனவு’ என்று விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி 6990)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, எவரேனும் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தம் இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது. மேலும், ஷைத்தான் என் உருவத்தில் காட்சி தரமாட்டான்” என அபூ கத்தத்தா (ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி 6995)
‘கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான்.’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: ’நபி(ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி(ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)’ என்று இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி 6993)