குர்பானி பிராணியின் வயது மற்றும் அதன் தன்மைகள்
குர்பானி கொடுக்க தகுதியான பிராணிகள்:
நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் குர்பானி கொடுப்பதற்கு ஆடு, மாடு மற்றும் ஒட்டகங்கள் தான் தகுதியான பிராணிகள். இவற்றைத் தவிர வேறு பிராணிகளை குர்பானி கொடுக்கக் கூடாது.
“நபி(ஸல்) அவர்கள் உயர்தரமான கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தார்கள். அந்த ஆட்டின் வாய், கால்கள், கண்கள் ஆகியவை கறுப்பு நிறமாக இருந்தது”.
அறிவிப்பாளர்: அயூ ஸயீத்(ரலி); நூல்: திர்மிதி, அபூதாவூத் ,நஸயீ, இப்னுமாஜா.
“நாங்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது ஏழு நபர் ஒரு ஒட்டகத்தையும், ஏழு பேர் ஒரு மாட்டையும் அறுத்தோம்”.
அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி); நூல்: முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா.
குர்பானி பிராணிகளின் வயது:
குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகம் ஐந்து வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆடு, மாடு, இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
“முஸின்னத் என்ற பருவமுடையதைத் தவிர மற்றதை நீங்கள் அறுக்க வேண்டாம். அது கிடைப்பது உங்களுக்குச் சிரமமாக இருந்தால், ஜத்அத் எனும் பருவமுடைய பிராணியையே அறுக்கலாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி); நூல்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.
முஸின்னத் என்று கூறப்படும் வார்த்தை ஆடு, மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்குப் பயன்படுத்தப்படும். ஒட்டகத்திற்கு ஐந்து வயது முடிந்தவுடனும் ஆடு, மாடு ஆகிய இரண்டு வகை கால்நடைகளுக்கும் இரண்டு வயது முடிந்தவுடன் இரண்டு பற்கள் வருவதால், ஒட்கத்திற்கு ஐந்து வயதும், ஆடு மற்றும் மாடு ஆகிய கால்நடைகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
ஜத்அத்: நான்கு வயதான ஒட்டகத்திற்கும், ஒரு வயது முழுமையடைந்த ஆடு, மாடுகள். (இப்னுல் அஸீர்)
குர்பான் கொடுக்க சிறு பிராணிகளை அறுப்பது கூடாது. குர்பானுக்கு பிராணிகள் கிடைப்பது சிரமமாக இருந்தால் மட்டுமே ஒரு வயது முழுமையடைந்த ஆடு, மாடுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வயதிற்கு குறைவான பிராணிகளை அறுத்தல் கூடாது.
நன்றாக கொழுத்த பிராணிகளை குர்பானி கொடுப்பது சிறந்தது.
“மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்.” (புகாரி)
குர்பானி கொடுக்கத் தகுதியற்ற பிராணிகள்:
குர்பானி பிராணிகளை வாங்கும் போது அதன் வயதை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதன் தோற்றங்களையும் பார்த்து வாங்குவது மிக அவசியம். ஏனெனில், குறைபாடுகளையுடைய பிராணிகளை குர்பானி கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள்.
“தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: பரா (ரலி); நூல்கள்: திர்மிதி (1530), அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா (3144).
“பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அலி(ரலி), ஆதார நூற்கள்: திர்மிதீ 1532, அஹ்மத், அபூதாவூத், நஸயீ.
“நபி (ஸல்) அவர்கள் ‘கொம்புள்ள கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள்.”
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்.
“குட்டியை ஈன்று பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
“(ஒரு அன்சாரித் தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன்”என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி); முஸ்லிம் : (3799)
காயடிக்கப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுக்கலாமா?
“காயடிக்கப்பட்ட இரண்டு பெரிய கொம்புகளையுடைய இரண்டு ஆடுகளை நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தனர்”.
அறிவிப்பாளர்: அபூராபிஉ (ரலி); நூல்: அஹ்மத், ஹாகிம்.
மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் அறிவது என்னவென்றால்,
1) ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் – இவற்றை மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும். வேறு பிராணிகளை குர்பானி கொடுக்க கூடாது.
2) ஆடு அல்லது மாடாக இருந்தால் இரண்டு வயதும் ஒட்டகமாக இருந்தால் ஐந்து வயதும் குர்பானி பிராணிக்கு பூர்த்தியாகியிருக்க வேண்டும். இவை கிடைக்க சிரமமாக இருந்தால் மட்டுமே ஒரு வயது முழுமையடைந்த ஆடு, மாடுகளை குர்பானி கொடுக்க வேண்டும். ஒரு வயதிற்கு குறைவானதை குர்பானி கொடுக்க கூடாது.
3) எவ்வித குறைபாடுகளற்ற கொழுத்த பிராணிகளை குர்பானிக்காகத் தேர்வு செய்ய வேண்டும்.
4) பாலூட்டும் பிராணியைக் குர்பானி கொடுக்க கூடாது.
அல்லாஹ் அஃலம்.