குர்பானிக்குரிய நாட்களும் நேரமும்

குர்பானியை ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று கொடுக்கலாம்.

ஆனால், பெருநாள் தொழுகைக்குப் பிறகு தான் குர்பானி கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்பு குர்பானி கொடுக்க கூடாது.

“நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) “யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்” என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது அபூ புர்தா பின் நியார் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாக உட்கொண்டு விட்டேன்” என்றார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன் ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும்” என்று கூறினார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது போதுமா?” என்று கேட்டார்.

“ஆம்! இனிமேல் உன்னைத் தவிர வேறு யாருக்கும் அது பொருந்தாது” என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர்: பராஃ (ரலி), நூல்: புகாரி (955)

பெருநாள் தொழுகைக்கு முன்பே அறுத்தவர் வேறு ஒரு பிராணியை குர்பானி கொடுக்க வேண்டும்:

ஒரு (ஹஜ்ஜுப் பெருநா)ளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள், தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்துவிட்டிருப்பதைக் கண்ட போது, “யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்குப் பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி); நூல்: புகாரி (5500)

“யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறாரோ அவர் திரும்பவும் அறுக்கட்டும்”என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி); நூல் : புகாரி (954)

மேற்கண்ட நபிமொழிகள் அனைத்தும், ஹஜ்ஜூப் பெருநாள் தினத்திற்கு முன்பாகவோ அல்லது ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகைக்கு முன்பாகவோ குர்பானி கொடுக்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்துகின்றது. மேலும், ஒருவர், தவறுதலாக பெருநாள் தொழுகைக்கு முன்பாகவே குர்பானி கொடுத்தால் அது குர்பானியாகக் கருதப்படாது என்றும் அதற்கு பதிலாக வேறொரு பிராணியை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.

ஹஜ் பெருநாளை அடுத்து வரும் அய்யாமுத் தஷ்ரீக் என்ற மூன்று நாட்களிலும் குர்பானி கொடுக்கலாம்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்). தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.” (அல்-குர்ஆன்22:27-28

அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிட்ட அந்த நாட்கள் ஹஜ்ஜூப் பெருநாளுக்கு அடுத்துவரும் மூன்று நாட்களான அய்யாமுஷ் தஷ்ரீக் நாட்களாகும் என்பதை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

“அய்யாமுத் தஷ்ரீக் முழுவதும் அறுப்பதற்கு ஏற்ற நாளாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முதஇம் (ரலி), நூல்: இப்னு ஹிப்பான்.

மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்,

1) குர்பானியை ஹஜ்ஜூப்பெருநாள் தினத்தன்றும் அடுத்து வரக்கூடிய அய்யாமுத் தஷ்ரீக் நாட்களாகிய துல்ஹஜ் பிறை 11, 12 மற்றும் 13 ஆகிய நாட்களிலும் கொடுக்கலாம்.

2) ஹஜ்ஜூப் பெருநாளன்று குர்பானி கொடுக்க விரும்புபவர், பெருநாள் தொழுகைக்குப் பிறகு தான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்பு பிராணியை அறுத்துவிட்டால் அது அவரது உணவுக்காக அறுத்ததாகத் தான் கருதப்படும்.

3) பெருநாள் தொழுகைக்கு முன்பாகவே குர்பானி பிராணியை அறுத்தவர்கள் அதற்கு மாற்றாக வேறொரு பிராணியைக் குர்பானி கொடுக்க வேண்டும்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed