நபியவர்கள் சார்பாக நாம் குர்பானி கொடுக்கலாமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நன்மை சேரவேண்டுமென்பதற்காக குர்பானி, உம்ரா போன்ற வணக்கச் செயல்களைச் செய்வது ஒரு நபி (ஸல்) அவர்களின் கட்டளையில் இல்லாத ஒரு பித்அத் ஆகும்.
காரணம், நபி (ஸல்) அவர்கள் மீது எல்லையற்ற அன்பும் பாசமும் வைத்திருந்த சஹாபாக்கள் இது போன்று குர்பானியோ அல்லது உம்ராவையோ நபி (ஸல்) அவர்களின் நன்மையை நாடி செய்ததாக எந்தவொரு அறிவிப்பையும் காணவில்லை.
மேலும், தொழுகைக்கான பாங்கு கூறியவுடன், தமக்காக ஸலவாத்து கூறுமாறும், உயர்ந்த அல்-வஸீலாவையும், அல்-பதீலா என்ற உயர்ந்த பதவியையும் மறுமையில் அல்லாஹ் தமக்கு வழங்குவதற்குவதற்காக நம்மிடம் துஆச் செய்யுமாறும் கோரிக்கை வைத்த நபி (ஸல்) அவர்கள், தமக்காக குர்பானி கொடுக்கவோ அல்லது உம்ரா செய்யவோ சொல்லி நமக்கு கட்டளையிடவில்லை.
இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்காக குர்பானி கொடுப்பதோ அல்லது உம்ரா செய்வதோ நன்மையாக இருந்தால் அதை நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக நமக்கு கூறியிருப்பார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் தமது மக்களை சத்தியன்பால் அழைத்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து நன்மை, தீமைகளை விளக்கியிருப்பதால் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்கள் செய்கின்ற அனைத்து நல்லறங்களின் கூலியும் அந்த நன்மைகளைச் செய்கின்றவர்களுக்குச் சிறிதும் குறையாமல் நபி (ஸல்) அவர்களுக்கும் போய்ச் சேரும் என்பதை விளங்க வேண்டும். கியாம நாள்வரை வரக்கூடிய நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்கள் செய்கின்ற அனைத்து நல்லறங்களின் வாயிலாகவும் நபி (ஸல்) அவர்களுக்கு தொடர்ந்து நன்மைகள் போய் சேர்ந்துக் கொண்டிருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“எவர் நேர்வழியின்பால் (மக்களை) அழைக்கின்றாரோ அவருக்கு அதனை பின்பற்றுபவர்களுடைய நற்கூலிகள் போன்றவை உண்டு. அவர்களின் நற்கூலிகளில் எதுவும் குறையாது. எவர் தீய வழியின்பால் அழைக்கின்றாரோ அவருக்கு அத்தீய வழியை பின்பற்றுபவர்களின் பாவங்கள் போன்றவை உண்டு. அதனால் அவர்களின் பாவங்களில் எதுவும் குறைவதில்லை.” (ஆதாரம்:- முஸ்லிம்)
“யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி, ஆதாரம்:- முஸ்லிம்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
எனவே, மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் செய்யக் கூடிய சிறிய, பெரிய நல்லமல்கள் எதுவாகிலும் அதனுடைய நன்மைகள் நபி (ஸல்) அவர்களுக்கும் சென்று கொண்டிருக்கின்ற வேளையில், ஒருவர் தனிப்பட்ட முறையில் நான் நபி (ஸல்) அவர்களுக்காக குர்பானி, உம்ரா போன்ற வணக்க முறைகளைச் செய்கின்றேன் என்பது நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடாத பித்அத் மட்டுமின்றி அர்த்தமற்றதுமாகும். மேலும், இவ்வாறு இந்த பித்அத்தைச் செய்பவர் தனக்கு மட்டுமின்றி யாருக்கும் பயனளக்காமல் இந்த வணக்கத்தின் நன்மையை திசைதிருப்புவதாகவே இது அமையும்.