குர்பானி கொடுப்பது கடமையா? அல்லது சுன்னாவா?
குர்பானி என்பது அல்லாஹ் அவனது திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களால் கட்டளையிடப்பட்ட அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களுல் ஒன்றாக இருக்கின்றது.
குர்பானி (உழ்ஹிய்யா) குறித்து அல்லாஹ்வின் திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் சுன்னா கூறுவதைப் பார்ப்போம்:
குர்பானி குறித்து அருள்மறை அல்-குர்ஆன்:
“எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (அல்-குர்ஆன் 108:2)
“நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.” (அல்-குர்ஆன் 6:162)
“இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!” (அல்-குர்ஆன் 22:34)
குர்பானி குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சுன்னா:
“நபி (ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின்பெயர் கூறி, ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன்”
அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: புகாரி 5558
“நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பத்து வருடங்கள் தங்கியிருந்து, (ஒவ்வொரு ஆண்டும் பெருநாள் தினத்தில்) குர்பானி கொடுத்தார்கள்.”
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி); ஆதாரம்: அஹமது, திர்மிதீ
“நபி (ஸல்) அவர்கள் பலியிடும் பிராணிகளை தம் தோழர்களிடையே பகிர்ந்து கொண்டார்கள், உக்பாவுக்கு ஆறு மாத வயதுள்ள ஆடு கிடைத்தது. அவர் கூறினார், “அல்லாஹ்வின் தூதரே, எனக்கு ஆறு மாத வயதுள்ள ஒரு ஆடு கிடைத்தது. (அதற்கு நபி (ஸல்)) அவர்கள், “அதை பலியிடுங்கள்” என்றார்கள்.”
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி); ஆதாரம்:புகாரி
“தொழுகைக்குப் பிறகு குர்பானி கொடுத்தவர் தனது கடமைகளை (ஈத்) முடித்து முஸ்லிம்களின் வழியைப் பின்பற்றுகிறார்.”
அறிவிப்பவர்: பராய் இப்னு ஆஸிப் (ரலி); ஆதாரம்:புகாரி
மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகளிலிருந்து குர்பானி கொடுப்பது என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களால் கட்டளையிடப்பட்ட வணக்கவழிபாடுகிளில் ஒன்று என்பதையும் இந்தக் குர்பானி எனும் கடமையைச் செய்தவரே முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றுபவராவார் என்பதையும் விளங்கமுடிகின்றது.
குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமையா? அல்லது வலியுறுத்தப்பட்ட சுன்னாவா?
இதை வரையறுப்பதில் மார்க்க அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது.
சில அறிஞர்கள் குர்பானி கட்டாயக் கடமை என்றும் இந்தக் கடமையை நிறைவேற்றாதவர்களுக்கு பாவம் வந்து சேரும் எனவும்
மற்ற சில அறிஞர்கள் குர்பானி வலியுறுத்தப்பட்ட சுன்னா; இதை செய்யாமல் விடுவது விரும்பத்தக்கது அல்ல என்கின்றனர்.
குர்பானி என்பது ஒரு வலியுறுத்தப்பட்ட சுன்னா என்பது இமாம் ஷாபி, மாலிக் மற்றும் அஹ்மது ஆகியோர்களின் கருத்தாக இருக்கின்றது.
குர்பானி என்பது கட்டாயக்கடமை என்பது இமாம் அபூஹனீஃபா மற்றும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா போன்ற அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.
இவ்விரு கருத்துக்களில் குர்பானி என்பது ஒரு வலியுறுத்தப்பட்ட சுன்னா என்பதே வலுவான கருத்தாக இருக்கிறது.
அஷ்ஷைக் முஹம்மது இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
“குர்பானி அதைச் செய்யக்கூடியவருக்கு சுன்னத் முஅக்கதாவாகும். எனவே ஒருவர் தனது சார்பாகவும் தனது குடும்ப உறுப்பினர்களுக்காகவும் குர்பானி கொடுக்க வேண்டும்”
ஃபதாவா இப்னு உதைமீன் 2/661
அல்லாஹ் அஃலம்.