இஹ்ராம் அணிவதற்கு முன் செய்ய வேண்டியவைகள் – ஹஜ், உம்ரா சட்டங்கள்
இஸ்லாம் தூய்மையை வலியுறுத்தும் மார்க்கம் என்பதால் உம்ரா மற்றும் ஹஜ்ஜூ போன்ற சிறந்த வணக்கங்களைச் செய்வதற்கு முன்னர் நாம் நம்மைத் தூய்மைப்படுத்திக்கொள்வது அவசியமாகும். அந்த வகையில்,
- நகங்களை வெட்டுதல்
- அக்குள் முடிகளை அகற்றுதல்
- மறைவான இடங்களில் இருக்கும் முடிகளை நீக்குதல்
போன்ற செயல்களை முன்னரே செய்து கொள்ள வேண்டும்.
இஹ்ராம் அணிவதற்கு முன் குளித்துவிட்டு நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும். இஹ்ராம் அணிந்த பிறகு நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தத் தடை இருந்தாலும் இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசி, அந்த நறுமணம் இஹ்ராமுக்குப் பின்பும் நீடிப்பதில் தவறு ஏதுமில்லை.
“நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும்போது தையல் இல்லாத ஆடை அணிந்து குளித்ததை நான் பார்த்தேன்.”
அறிவிப்பவர் ஸைத் பின் ஸாபித் (ரலி); நூல்கள்: திர்மிதீ, பைஹகீ, தப்ரானி, தாரகுத்னி.
“நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும்போது தன்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசிக் கொள்வார்கள். அதன் பிறகு அவர்களின் தலையிலும் தாடியிலும் எண்ணெய்யின் மினுமினுப்பை நான் பார்த்துள்ளேன்.”
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்கள்: புகாரி, முஸ்லிம்