நபிவழியில் நம் பெருநாள்கள்
பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதும், அன்றைய தினம் தர்மம் செய்வதும் நபிவழி
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும் நோன்புப் பெருநாள் அன்றும் (திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று, முதலில் தொழுகையை நிறைவேற்றுவார்கள். தொழுகையை முடித்து சலாம் கொடுத்ததும் மக்களை முன்னோக்கி (உரை நிகழ்த்தியபடி) நிற்பார்கள். மக்கள் தொழுத இடத்தில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். ஏதேனும் படைப் பிரிவை அனுப்ப வேண்டிய தேவையிருந்தால் அதை மக்களிடம் அறிவிப்பார்கள். அல்லது வேறு தேவை ஏதேனும் இருந்தால், அதற்கான உத்தரவைப் பிறப்பிப்பார்கள். (அன்றைய தினம்) அவர்கள் “தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்” என்று (திரும்பத் திரும்பக்) கூறுவார்கள். மக்களில் அதிகமாகத் தர்மம் செய்வோர் பெண்களாக இருந்தார்கள். பிறகு திரும்பிச் செல்வார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 1612
ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகைக்குப் பிறகு தான் குர்பானி கொடுக்க வேண்டும்.
“நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன்பின்னர் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையைப் பேணியவராவார்” என்று நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: பராஃ(ரலி); ஆதாரம்: புகாரி
நோன்புப் பெருநாளன்று தொழுகைக்கு முன்னர் ஏதேனும் சாப்பிடுவது சுன்னத்தாகும். ஹஜ்ஜூப் பெருநாளன்னு நபி (ஸல்) குர்பானி பிராணியை அறுக்கும் வரை சாப்பிடமாட்டார்கள்:
“நோன்பு பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.”
அறிவிப்பவர்: புரைதா (ரலி); ஆதாரம்: இப்னு குஸைமா 1426 & திர்மிதீ
“நபி (ஸல்) அவர்கள் ஈதுல் பித்ர் (நோன்பு) பெருநாளன்று காலையில் ஏழு பேரித்தம் பழங்களை சாப்பிடாமல் வெளியேற மாட்டார்கள்”
அறிவிப்பவர்: ஜாபிர்பின் சம்ரா(ரலி) ஆதாரம்: தப்ரானி
மாதவிடாய் ஏற்பட்டிருக்கின்ற பெண்கள், பருவ வயது பெண்கள் உட்பட அனைத்து பெண்களும் பெருநாள் தொழுகை நடைபெறும் திடலுக்குச் செல்ல வேண்டும் என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளை.
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இளம் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைமறைவில் உள்ள பெண்களையும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய (இரு) பெருநாட்களிலும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஆயினும், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையிலிருந்து ஒதுங்கியிருப்பார்கள்; நல்ல உரைகளிலும் முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் பங்கெடுக்க வேண்டும் (என்றும் கட்டளையிட்டார்கள்). அப்போது நான் “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருத்தியிடம் துப்பட்டா இல்லாவிட்டால் (என்ன செய்வது)?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளுடைய சகோதரி தமது துப்பட்டாவில் ஒன்றை அவளுக்கு இரவலாக அணிவிக்கட்டும்!” என்று கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 1615
தக்பீர் கூறுதல்:
“ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டும் தக்பீரைக் கொண்டும் அழகு படுத்துங்கள்”
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி); ஆதாரம்: நயீம்.
“ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகைக்கு வீட்டிலிருந்து புறப்படும்போது தக்பீர் சொன்னவர்களாகப் புறப்படுவார்கள். தொழும் இடம் (முஸல்லா) வரும் வரை தக்பீர் சொல்வார்கள்.”
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); ஆதாரம்: ஹாகிம் சுனன்பைஹகீ, இப்னு அஸாகீர்.
பெருநாள் தொழுகை திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறொரு வழியில் திரும்புவது சுன்னத்தாகும்.
“பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள்.”
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); ஆதாரம்: புகாரி
பெருநாள் தொழுகைக்கு பாங்கு மற்றும் இகாமத் இல்லை:
ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரு பெருநாள் தொழுகைகளை ஒரு முறை, இரு முறை அல்ல (பல முறை) தொழுதிருக்கிறேன்; (அவற்றில்) பாங்கும் இகாமத்தும் இருந்ததில்லை.”
ஆதாரம்: முஸ்லிம் 1610
தொழுகைக்காக சுத்ரா அமைத்தல்:
“நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள்.”
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); ஆதாரம்: புகாரி
“நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபி தொழுவார்கள்”
அறிவிப்பவர்:இப்னு உமர்(ரலி) ஆதாரம்: புகாரி
பெருநாள் தொழுகைக்கு முன் பின் சுன்னத்துகள் இல்லை
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்றோ அல்லது நோன்புப் பெருநாள் அன்றோ புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் (மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்பும் எதையும் (கூடுதலாகத்) தொழவில்லை; அதற்கு பின்பும் எதையும் (கூடுதலாகத்) தொழவில்லை. பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க, பெண்கள் பகுதிக்கு வந்து (அறிவுரை வழங்கினார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித்தார்கள். உடனே பெண்கள் தம் காதணிகளையும் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் (கழற்றி பிலால் (ரலி) அவர்களின் கையிலிருந்த துணியில்) போட்டனர்.
ஆதாரம்: முஸ்லிம் 1616 & புகாரி 1431
ஈத் பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துகள் தான்:
“ஈதுல் அழ்ஹா தொழுகை இரண்டு ரக்அத்துக்களாகும். ஈதுல் பித்ர் தொழுகை இரண்டு ரக்அத்துக்களாகும். பயணியின் தொழுகை இரண்டு ரக்அத்துக்களாகும். ஜும்ஆத் தொழுகை இரண்டு ரக்அத்துக்களாகும்.”
அறிவிப்பவர்: உமர் இப்னுல் கத்தாப்(ரலி); ஆதாரம்: நஸாஈ 1566, அஹ்மத் 257
பெருநாள் தொழுகையில் அதிகப்படியான 12 தக்பீர்கள் கூறுவது தான் நபிவழி:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி 492 & அபூதாவூத்
கிராஅத் ஓதுவதற்கு முன்னரே தக்பீர் கூற வேண்டும்.
“அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடன் ஈதுல் அழ்ஹா, பித்ர் தொழுகைகளில் பங்கு கொண்டுள்ளேன். முதல் ரக்அத்தில் கிராஅத்திற்கு முன்னர் 07 தக்பீர்கள் கூறினார். இரண்டாம் ரக்அத்தில் கிராஅத்திற்கு முன்னர் 05 தக்பீர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) அவர்களின் அடிமை நபிஃ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்: முஅத்தா 09
அதிகப்படியான ஒவ்வொரு தக்பீரின் போதும் கையை உயர்த்தவேண்டுமா?
ஆரம்ப தக்பீர் கூறப்படும்போது கையை உயர்த்த வேண்டுமென்பதில் குர்ஆன், சுன்னா அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இல்லை! ஆரம்ப தக்பீர் கூறும் போது கையை உயர்த்த வேண்டும் என்பதில் ஏகோபித்த கருத்தில் இருக்கின்றனர்.
ஆனால் அடுத்து வரக்கூடிய அதிகப்படியான தக்பீர்கள் கூறப்படும் போது கையை உயர்த்த வேண்டுமா? வேண்டாமா? என்பதில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. மேலதிகமாகக் கூறப்படும் தக்பீர்களில் கையை உயர்த்துவது பற்றியோ உயர்த்தாமல் இருப்பது பற்றியோ எந்த ஆதாரபூர்வமான ஹதீஸும் வராமையே இதற்கான காரணமாகும்.
ஹனபி மற்றும் மாலிகி மத்ஹபினர் ஆரம்பத் தக்பீரைத் தவிர ஏனைய தக்பீர்களுக்கு கைகளை உயர்த்த வேண்டியதில்லை.
ஷாபி மற்றும் ஹன்பலி அறிஞர்கள் ஒவ்வொரு தக்பீருக்கும் கைகளை உயர்த்துவது சுன்னா.
ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்) மற்றும் ஷெய்க் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்) போன்ற அறிஞர்கள் ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவது சுன்னாவாகும்.
பெருநாள் தொழுகையின் ஒவ்வொரு தக்பீர் கூறப்படும் போது நபி (ஸல்) அவர்கள் கையை உயர்த்தியதாக நெரடியான அறிவிப்புகள் இல்லையென்றாலும் நபி (ஸல்) அவர்கள்,
“தமது தொழுகை முடிகின்ற வரை ருகூவுக்கு முன்னால் சொல்கின்ற ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவரர்கள்” என்ற அபுதாவுதில் (722) இடம்பெற்றிருக்கும் இப்னு உமர் அறிவிக்கும் ஹதீஸின் பிரகாரம் ருகூவுக்கு முன்னர் கூறப்படும் பெருநாள் தக்பீர்கள் அனைத்திலும் கையை உயர்த்துவது சிறந்தது என்பதை உணர முடிகின்றது. (அல்லாஹ் அஃலம்).
பெருநாள் தொழுகையில் ஓதவேண்டிய அல்-குர்ஆனின் அத்தியாயங்கள்:
நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (87வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (88வது அத்தியாயத்தையும்) ஓதி வந்தனர். பெருநாளும், ஜுமுஆவும் ஓரே நாளில் வரும்பொழுது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி) & நூமான் இப்னு பஷீர்;
ஆதாரம்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ
பெருநாள் தொழுகைக்கு பயான் முக்கியமா
0760440056
Replay in whatsapp