1- மரணித்தவருக்கு நன்மைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் 3 விடயங்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 3358).
2- எவர் பிறரை நல்ல விடயங்களுக்கு ஆர்வப்படுத்துகின்றாரோ, பிறர் நன்மையான விடயங்களை செய்வதற்குக் காரணமாகி விடுகின்றாரோ, பிறருக்கு நல்லதை சொல்லிக் கொடுக்கின்றாரோ நன்மைகள் அவருக்குத் தொடர்ந்து கொண்டே இருக்கும்:
“யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே,யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம் 1848) நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி.
3- பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யும் பாவ மன்னிப்பு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஸாலிஹா ஓர் அடியானின் அந்தஸ்தை அல்லாஹ் சுவர்க்கத்தில் உயர்த்தும் போது, எனது ரப்பே இது எனக்கு எங்கிருந்து எனக் கேட்பான். இது உனது பிள்ளை உனக்கு செய்த இஸ்திஃபாராகும். (உனக்காகக் கேட்ட பாவ மன்னிப்பாகும்). என பதிலளிப்பான் (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், (அஹ்மத் 10610)
4- இறை நம்பிக்கையாளர்கள், இறை நம்பிக்கையுடன் மரணித்தவர்களுக்கு செய்யும் பிரார்த்தனைகள்:
رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் (நம்பிக்கை) கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். (அல்குர்ஆன் 59: 10).
நபியவர்கள் ஜனாஸாத் தொழுகையில் மரணிதவர்களுக்காக செய்த பிரார்த்தனைகள், ஜனாஸாவை அடக்கி விட்டு பிரார்த்திக்குமாறு கூறிய சந்தர்ப்பங்கள், மண்ணறைகளைத் தரிசிக்கும் போது ஓதுவதற்குக் கற்றுத் தந்த பிரார்த்தனைகள் என பல ஆதாரங்கள் உயிரோடுள்ளவர்கள் மரிணத்தவர்களுக்கு பிராத்திப்பதற்கு ஆதாரமாக உள்ளன.
5- மரணித்தவருக்காகப் பிள்ளைகள் தர்மம் செய்தல்:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் திடீரென இறந்துவிட்டார். அவர் அப்போது பேசியிருந்தால் தர்மம் (செய்யுமாறு வஸிய்யத்) செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதன் நன்மை அவரைச் சேருமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள் (புஹாரி 2760).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் ஊரில் இல்லாதபோது அவர்களின் தாயார் இறந்து விட்டார். அவர்கள் நபி (ஸல்) அவர்களி டம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஊரில் இல்லாதபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?” என்று கேட்டார்.அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (பலனளிக்கும்)” என்று கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், ‘‘எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவருக் காகத் தர்மம் செய்துவிடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்கு கிறேன்” என்று கூறினார்கள். (புஹாரி 2762).
6- மரணித்தவரின் நேர்த்திக்கடனை பிள்ளைகள் நிறைவேற்றுவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘என் தாயார்மீது ஒரு நேர்த்திக்கடன் கடமையாகியிருக்க, (அதை நிறைவேற்றும் முன்பே) அவர் இறந்துபோய்விட்டார் (என்ன செய்வது?)” என்று விளக்கம் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர் சார்பாக நீ அதை நிறைவேற்று” என்று கூறினார்கள். (புஹாரி 2761).
7- நேர்த்திக்கடனாக உள்ள ஹஜ்ஜை பிள்ளைகள் நிறைவேற்றுவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘ஜுஹைனா’ எனும் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால், அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள். (புஹாரி 1852).
8- நேர்த்திக்கடனாக உள்ள நோன்பை பிள்ளைகள் நிறைவேற்றுவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் தாயார், தம்மீது நேர்ச்சை நோன்பு கடமையாகியிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார். அதற்கு “உன் தாயார்மீது ஏதேனும் கடனிருந்த நிலையில் அதை நீ நிறைவேற்றினால், அவர் சார்பாக நிறைவேறி விடாதா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்பெண்மணி, “ஆம்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் தாயார் சார்பாக நோன்பு நோற்றுக்கொள்” என்றார்கள். (முஸ்லிம் 2111)
9- உழ்ஹிய்யாவின் (குர்பானியின்) நன்மை மரணித்த உறவினருக்கும் கிடைக்க வேண்டுமென நிய்யத்தில் சேர்த்துக்கொள்வது:
“பிஸ்மில்லாஹ். அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் வமின் உம்மத்தி முஹம்மதின்” (அல்லாஹ்வின் பெயரால்! இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக!)” என்று கூறி, அதை அறுத்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரலி) அவர்கள், முஸ்லிம் 3977) ஹதீஸின் ஒரு பகுதி
இதில் நபியவர்கள் தனது குடும்பத்தாரிடமிருந்தும் எனக் கூறிய வேளையில் இஸ்லாத்தில் வாழ்ந்து கொணடிருந்த அன்னாரது குடும்பத்தினரும், இஸ்லாத்தில் மரணித்து விட்ட அன்னாரது குடும்பத்தினரும் அடங்குவர்.
10- விடுப்பட்ட நோன்பை உறவினர் நோற்பது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிறைவேற்ற வேண்டிய நோன்பு உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் (உறவினர்) நோன்பு நோற்பார். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 1952).
11- விடுப்பட் நோன்புகளை பிள்ளைகள் நோற்பதற்கும், ஹஜ் செய்யாமல் மரணித்து விடும் போது ஹஜ்ஜை பிள்ளைகள் நிறைவேற்றுவதற்குமுள்ள ஆதாரம்:
புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப்பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப்பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப்பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது” என்று சொன்னார்கள். அப்பெண்மணி, “என் தாயார்மீது ஒருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது. அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக்கொள்” என்றார்கள். அப்பெண்மணி, “என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டதற்கு, “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 2112)
அல்குர்ஆனை ஓதி மரணித்தவர்களுக்கு நன்மையை சேர்க்கும் நடைமுறைக்கு எந்த வித ஆதாரமும் இல்லை. மரணித்தவர்களுக்கு ஸுரா யாஸீனை ஓதுங்கள் என்ற நபி மொழியும் பலஹீனமானது. இன்று சமூகத்தில் உள்ள நாட்களை குறபிப்பிட்டு மரணித்தவர்களுக்காக அல்குர்ஆனை ஓதும் நடை முறை பித்அத்தாகும். அதிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.
இந்தத் தலைப்பில் உரையை கேட்க விருமபினால் கீழுள்ள தலைப்பின் மீது அழுத்தவும்
மரணித்தவருக்குப் பயனளிக்கும் நன்மைகள்!